

மற்றவர்களின் தவறுகளுக்கு நாங்கள் அனுபவிக்கிறோம் என்று 'சர்வர் சுந்தரம்' படத்தின் இயக்குநர் பால்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டது.
ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி 31, பிப்ரவரி 14 என வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாகப் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் படத்தின் இயக்குநர் பால்கி தனது வேதனையை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், "வெளியீடு தேதிகள் குறித்து தவறான தகவல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்று நினைத்து சந்தானம் மற்றும் மற்ற கலைஞர்களை விளம்பரத்தில் பங்கெடுத்துக் கொள்ளக் கேட்டோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே. மற்றவர்களின் தவறுகளுக்காக நாங்கள் அனுபவிக்கிறோம். விரைவில் உங்களுக்கு (வெளியீடு பற்றிய) செய்தி வரும். மன்னித்துவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பால்கி.
தவறவிடாதீர்