Published : 16 Feb 2020 10:10 am

Updated : 16 Feb 2020 10:10 am

 

Published : 16 Feb 2020 10:10 AM
Last Updated : 16 Feb 2020 10:10 AM

திரை விமர்சனம் - நான் சிரித்தால்

naan-sirithal-review

மென்பொருள் நிறுவன ஊழி யரான காந்திக்கு (ஆதி) வேலை போய்விடுகிறது. அதனால் காதலியாலும் கைவிடப் படுகிறார். மேலும் பல சிக்கல்கள் சேர்ந்துகொள்ள, தொடர் மன அழுத்தம், அதனால் ஏற்படும் பயம் காரணமாக, இக்கட்டான தருணங் களில் துக்கப்படுவதற்கு பதிலாக சிரிக்கும் மனச் சிக்கலுக்கு ஆளா கிறார். இது ஒரு நோய் என்று தெரி யாத வில்லன் (கே.எஸ்.ரவிக் குமார்) முன்பாகவும் சிரித்து வைக்க, அவரது எதிரியாகிவிடு கிறார். காந்தியை கொன்றுவிடத் தீர்மானிக்கும் வில்லனிடம் இருந்து அவர் தப்பித்தாரா, சிரிப்பாய்ச் சிரிக்கும் மனச் சிக்கலில் இருந்து விடுபட்டாரா என்பது கதை.

புதுமுக இயக்குநர் ராணா தனது ‘கெக்க பெக்க’ என்ற குறும் படத்தை இரண்டு மணி நேரத் துக்கும் சற்று அதிகமாக ஓடும் முழு நீள திரைப்படமாகத் தரும் சவாலில் சறுக்கிவிட்டார். நகைச்சுவைதான் திரைக்கதையின் மைய உணர்ச்சி என்று முடிவு செய்துவிட்ட நிலை யில், எதிர்பாராமல் அமையும் சூழ் நிலைகளில் சிரிக்கும் முதன்மைக் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு ஆயிரம் வாலா வெடித் திருக்கலாம். ஆனால், இயக்குநர் எதார்த்தமான சூழ்நிலைகளின் பக்கம் திரும்பவே இல்லை. செயற்கையான, மிகை நாடகத் தனம் கொண்ட ஊசிவெடிக் காட்சி களால் சில இடங்களில் மட்டும் புன்னகைக்க முடிகிறது. ஒரு ரவுடி கும்பலுக்கும் நாயகனுக்கும் ஏற்படும் பிரச்சினைகள், அதை யொட்டி, எதிர்த்தரப்பு ரவுடி கும்பலிடம் அவருக்கு கிடைக்கும் மரியாதை என வாய்விட்டுச் சிரிக்க உத்தரவாதம் அளிக்கத் தவறிய பகுதி, மொத்த படத்துக்கும் சுமை. இவற்றுடன் பாடல்களின் எண் ணிக்கையை குறைக்கத் தவறியதும் திரைக்கதை தடுமாற முக்கிய காரணமாகிவிடுகிறது.

அதேநேரம், நாயகனுக்கு வேலை பறிபோவது, காதலில் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றை நம்பகத்தன்மையுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர். நாயக னுக்கும், அவரது அப்பாவுக்கும் இடையிலான நட்பும், அன்பும் நிறைந்த உறவை ரசிக்கும் விதமாக சித்தரித்ததும் ஈர்க்கிறது. மக னின் காதலி வீட்டுக்குச் சென்று, நாயகனின் தந்தையான படவா கோபி பேசும் காட்சி ரசனையான அணுகுமுறை. இந்த இரு இழை களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமான சவாலை நாயகனுக்கு உருவாக்கியிருந்தால் கவனம் சிதறியிருக்காது.

பெண்களுக்கு எதிரான விமர்சனங்களும், சாடல்களும் எரிச்சலூட்டும் இடைச்செருகல். பல ஆண்களைக் காதலித்து ஏமாற்றும் பெண்ணாக வரும் ஜூலி கதாபாத்திரம், நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் வடிவமைப்பு.

விநோத மனச் சிக்கலால் பாதிக்கப்பட்ட இளைஞராக ஆதியின் நடிப்பு ஓகே. கதாபாத்திரத்துக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் மெசேஜ் சொல்லும் பாணியை அவர் குறைத்துக்கொள்ளலாம். ஐஸ்வர்யா மேனன் அழகாக இருப்பதோடு நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நாயகனின் தந்தையாக படவா கோபியின் நடிப்பில் கச் சிதமும், நகைச்சுவையும் மிகை யின்றி வெளிப்பட்டிருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, முனீஸ்காந்த் ஆகியோரின் கதா பாத்திரங்கள் எவ்விதத்திலும் கவர முடியாத நிலையில், தங்களது நடிப்பால் சமாளிக்க முயன்று தோற்றுப் போகிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக் கின்றன. பின்னணி இசையில் சுரத்து இல்லை.

சிரிக்கக்கூடாத தருணங்களில் சிரிப்பதால் ஒருவனுக்கு நேரும் சிக்கல்களைச் சொல்ல முயலும் படத்தில், எதார்த்தமான கதாபாத் திரங்களும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் குறைவாக இருப் பதில், படத்தில் பார்வையாளர் களுக்கு ‘ரேஷன்’ மாதிரி ஆகி விட்டது சிரிப்பும் நகைச்சுவையும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Naan sirithal reviewநான் சிரித்தால்திரை விமர்சனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author