

'பாராசைட்' படத்தின் கதைக்காக தேனப்பன் வழக்கு தொடரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற கொரியன் படமான 'பாரசைட்', தமிழில் விஜய் நடித்த 'மின்சார கண்ணா' திரைப்படத்தின் காப்பி என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் குற்றம் சாட்டியுள்ளார். தனது குற்றச்சாட்டில் தேனப்பன், "ஆஸ்கர் விருது பெற்ற கொரியத் திரைப்படமான 'பாரசைட்' 1999 விஜய் - நடித்து வெளியான 'மின்சார கண்ணா' படத்தின் நகல். நான் ஒரு சர்வதேச வழக்கறிஞரின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்வேன். எனது படத்திலிருந்து கதைக்களத்தை எடுத்துள்ளனர்.
தமிழில் நாங்கள் தயாரிக்கும் படங்களில் சில, அவர்களின் படங்களால் ஈர்க்கப்பட்டவை என்று அவர்கள் கண்டுபிடித்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், நாமும் அவ்வாறே செய்வது நியாயமானது" என்று தெரிவித்துள்ளார். தேனப்பனின் இந்தக் குற்றச்சாட்டுப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறது.
இதனிடையே அனைத்து விஷயங்களுக்கும் தனது வழக்கமான கிண்டல் தொனியில் ட்வீட் செய்பவர் 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன். 'பாராசைட்' படக்குழுவினர் மீதான வழக்கு குறித்த செய்தியை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் சி.எஸ்.அமுதன், "தன்னுடைய நாய் கொல்லப்பட்டதால் மீண்டும் தன்னுடைய பழைய பணிக்குத் திரும்புவது போன்ற 'ஜான் விக்' திரைப்படத்தில் இருக்கும் சில விஷயங்கள் 'தமிழ்ப் படம் 2'-ன் கதையைப் போலவே இருக்கிறது என எனது கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் முயற்சிகளில் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் சி.எஸ்.அமுதன்.
தவறவிடாதீர்