Last Updated : 15 Aug, 2017 05:27 PM

 

Published : 15 Aug 2017 05:27 PM
Last Updated : 15 Aug 2017 05:27 PM

தமிழ் சினிமாவில் இப்போது மாற்று சினிமாவுக்கான காலம்: இயக்குநர் அழகம்பெருமாள்

தமிழ் சினிமாவில் இப்போது மாற்று சினிமாவுக்கான காலம் என்று இயக்குநர் அழகம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தரமணி' படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அழகம்பெருமாள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தனது 'தரமணி’ அனுபவங்கள் குறித்து இயக்குநர் அழகம்பெருமாள் கூறியிருப்பதாவது:

நீண்ட நாட்களுக்குப் பிறகு 'தரமணி' படத்தில் நான் நடித்துள்ள பர்னபாஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. "பர்னபாஸ் வாக்கு , பைபிள் வாய்க்கு லே" என்ற வசனம் இப்போது பிரபலம். இந்த படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்கிற மாதிரி நீளமான காட்சியாக இல்லாமல், போகிற போக்கில் மனதை தொடுகிற மாதிரி சொன்ன விதம் எனக்கும், படத்தைப் பார்த்தவர்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

இப்போது மீம்ஸ் தான் உலகம் என்றாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் போராடிப் பார்த்தாலும், விளைவுகள் ஒன்றும் நடக்கவில்லை. இதனை படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் , வசனங்களும் மீம்ஸ் போல் அமைந்துள்ளது.

ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு வலுவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சமூகத்துக்கு தேவையான கருத்து சொல்கிறேன் என்று உட்கார்ந்து ஒப்பாரி வைத்து உணர்வுப்பூர்வமான விஷயங்களை பேசி ஒன்றும் நடக்கப்போவது கிடையாது. அதை யாராவது உடைக்க வேண்டும் என்று விரும்பினேன், ராம் உடைத்துவிட்டார்.

இப்போது மாற்று சினிமாவுக்கான காலம். எவ்வளவு நாள் தான் ஒரே படத்தை போட்டு பார்த்து பார்த்து ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டுடிருப்பது? 'தரமணி'யில் இப்படி ஒரு முயற்சியை ராம் படத்துக்குள் கொண்டு வரப் போகிறார் என்பது இறுதிவரை தெரியாது. என் கதாபாத்திரம் இது தான் என்றார் நடித்துக் கொடுத்தேன். பிறகு படமாக பார்க்கும் போது தான் தெரிந்தது. ராமின் குரல் மிகப் பெரியளவில் படத்துக்கு உதவியிருக்கிறது. இதனை வரவேற்க வேண்டும்.

இப்போது சில படங்களில் புதியதலைமுறை இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்போது என்ன பிரச்சினை என்றால் படத்துக்கு தலைப்பு வைப்பதே கிடையாது. மனோஜ் என்ற புதிய இயக்குநர் அமெரிக்காவிலிருந்து வந்து அவரே படத்தை இயக்கி தயாரிக்கிறார். ஒளிப்பதிவுக்கு கூட தன்னுடன் அமெரிக்காவில் படித்தவரை அழைத்து வந்து ’துருவங்கள் 16’ படம் போன்று புதிதாக முயற்சி செய்கிறார்கள்.

அடுத்தது இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் 'புதுப்பேட்டை 2' செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள். அது நடந்தால் எனக்கும் அதில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என நினைக்கிறேன். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் நமது விஷயத்தை சரியாக செய்துவிட வேண்டும் எனப்து தான் எனது விருப்பம். முன்பு பல படங்களில் நடித்தும், மக்களிடையே சில படங்கள் சரியாக போய் சேரவில்லை. 'தரமணி' படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் ராமுக்கு நன்றி.

திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு 1989-ல் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்ற துவங்கினேன். உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படம் 'தளபதி'. அப்போது ஆரம்பித்து இப்போது வரை இயக்குநர் மணிரத்னத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன், அவரோடு பணியாற்றியும் வருகிறேன். அவருடைய 'குரு' படத்துக்கு தமிழில் வசனம் எழுதினேன். மேலும் 'ரோஜா' ,' பாம்பே' , 'கடல்' போன்ற படங்களில் இடம்பெற்ற திருநெல்வேலி, நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களுக்கு நான் தான் பொறுப்பு.

மணிரத்னம் சார் தயாரித்த ‘டும் டும் டும்' படத்தை இயக்கினேன். படம் வெற்றி பெற்று நல்ல பெயரை வாங்கி தந்தது. மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். இவ்வளவு நாள் படம் இயக்காமல் இடைவெளி விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் செல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.

இவ்வாறு அழகம்பெருமாள் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x