Last Updated : 15 Aug, 2017 04:21 PM

 

Published : 15 Aug 2017 04:21 PM
Last Updated : 15 Aug 2017 04:21 PM

சமூகவலைதளத்திலிருந்து விலகியது ஏன்?- சிம்பு விளக்கம்

சமூகவலைதளத்திலிருந்து முழுமையாக விலகியது ஏன் என்று சிம்பு ஆடியோ வடிவில் விளக்கமொன்றை அளித்துள்ளார்.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்துவிதமான சமூகவலைதளங்களில் இருந்தும் சிம்பு வெளியேறியுள்ளார்.

 இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுவிட்டு, தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார்.

இது தொடர்பாக சிம்பு ஆடியோ வடிவில் பேசியுள்ள பதிவும் வெளியாகி இருக்கிறது. அதில் சிம்பு பேசியிருப்பதாவது:

பொதுவாக எதிர்மறையான விஷயங்களே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. யார் எது செய்தாலும் அதில் ஒரு குறை, தவறு என கெட்ட வார்த்தைகள் உபயோகித்து ஏதாவது ஒரு கருத்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு ஏதாவது சொல்கிறார்கள். சம்பந்தமே இல்லாத விஷயங்களை பெரிதான விஷயமாக கூறுகிறார்கள்.

காசு கொடுத்து விமர்சனம், செய்திகள் என நிறைய உலா வருகின்றன. ஒருவர் காசு கொடுக்கிறார் என்பதால் மற்றொருவரை அவமானப்படுத்துவது என பல விஷயங்கள் நடக்கின்றன. ஒரு சில விஷயங்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சினிமாக்காரனாக இருப்பதால் என் கண்ணுக்கு தெரிகிறது. அதைப் பற்றியெல்லாம் பேசலாம், கோபப்படலாம், ஆதங்கப்படலாம், ஆனால் சிம்பு அவருடைய தனிப்பட்ட விஷயங்களாக இதெல்லாம் சொல்லுவார் என கூறிவிடுவார்கள். ஆகையால், அதைப் பற்றி பேச ஆசைப்படவில்லை. மக்களும் ஒரு நாள் முழித்துக் கொள்வார்கள், எவ்வளவு நாள் தான் தூங்குவது மாதிரியே நடிப்பார்கள். கண்டிப்பாக இது மாறும் என நினைக்கிறேன்.

இந்த உலகத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என யாருமே கிடையாது. ஏன் சொல்கிறேன் என்றால் முதலில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார், எப்படி என்ற வரைமுறைகளை வாங்கிவிட்டு மற்றவர்களை தீர்மானியுங்கள். நாம் அனைவருமே மனிதர்கள், ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மைப் பிரித்து பிரித்துத் தான், பல பேர் அடிமைகளாக நடத்தி வருகிறார்கள். இதற்கு மேலும், தொடர வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக செய்துக் கொள்ளுங்கள்.

சமூகவலைதளத்தில் நடக்கும் விஷயங்கள் எதுவுமே உண்மையான ஆட்கள் செய்யும் விஷயங்கள் அல்ல. நிறையப் பேர் காசு கொடுத்தும், சிலர் ஆட்களை செட் செய்தும் பண்ணுகிறார்கள். அனைத்துமே எனக்கு தெரியும். ஆனால், அதைப் பற்றி பேசுவது வீண் என நினைக்கிறேன். ஆகவே, அனைவருமே கொஞ்சம் பத்திரமாக இருங்கள். பல பேர் பழி போட்டு, சில விஷயங்களைத் திரை திருப்புவார்கள்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவரை அசிங்கப்படுத்தி சந்தோஷம் காண்பதை விட 4 பேருக்கு வாழ்க்கையில் மேல் ஏற உதவிகள் செய்வது சிறந்தது என நினைக்கிறேன். எனது ட்விட்டர் தளத்தில் நமது திரையுலகினர் மட்டுமன்றி அனைத்து திரையுலகினருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்திருக்கிறேன். அது மட்டும் இனிமேல் செய்ய முடியாதே என்ற வருத்தம் இருக்கிறது. மேலும், ரசிகர்களோடும் இனிமேல் கலந்துரையாட முடியாத சூழலும் ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் மற்றவர்கள் மீது கோபப்பட வேண்டாம் என தோன்றுகிறது. அதன் மூலம் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அன்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். சண்டைப் போடுவது நம் வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் உதவியாக இருக்காது.

எனது ரசிகர்களுக்கும், மற்ற ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நான் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது என நினைத்தால் மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x