Last Updated : 26 Aug, 2017 05:40 PM

 

Published : 26 Aug 2017 05:40 PM
Last Updated : 26 Aug 2017 05:40 PM

நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடல் உருவான விதம்: பலூன் இயக்குநர் விளக்கம்

'பலூன்' படத்திற்காக 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற பாடல் எப்படி உருவானது என்பதை இயக்குநர் சினிஷ் விளக்கியுள்ளார்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'பலூன்'. யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 70 எம்.எம் நிறுவனம் தயாரிக்க, ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பேசிய 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற வார்த்தை, சமூக வலைதளத்தில் பிரபலமானது. அந்த வார்த்தையையே வரிகளாக்கி பாடல் ஒன்றைத் தயார் செய்துள்ளது 'பலூன்' படக்குழு. அனிருத் பாடியிருக்கும் இப்பாடல் ப்ரோமோ ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்பாடல் குறித்து இயக்குநர் சினிஷ் கூறியிருப்பதாவது:

ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு முக்கியம் என்பதை நம்புபவன் நான். இன்றைய சினிமாவில் விளம்பர யுக்திகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சுவாரஸ்யமான கூட்டணிகளை அமைப்பது படத்தின் விளம்பரத்திற்கு பேராதரவாக இருக்கும்.

'பலூன்' படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்  இருந்தபொழுது ஓவியாவின் பிரபலமான 'நீங்க ஷட் அப்  பண்ணுங்க' என்ற வரி எங்களுக்கு தோன்றியது. இந்த யோசனையை யுவனிடம் கூறியபோது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார்.

இது குறித்து தயக்கத்துடன் அனிருத்தை அணுகிய போது மறுயோசனையின்றி உடனே பாட சம்மதித்தார். யுவனும் அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்த வித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணிபுரிந்துள்ளனர். ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது.

'நீங்க ஷட் அப் பண்ணுங்க' பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என நம்புகிறேன். இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிடவுள்ளோம். இப்படத்தின் மற்றொரு பாடலான 'மழை மேகம் நீயாட' யுவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும்.

இவ்வாறு சினிஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x