Published : 31 Jul 2017 03:35 PM
Last Updated : 31 Jul 2017 03:35 PM

படப்பிடிப்புகளுக்கு தடங்கல் செய்தால் சட்டரீதியான நடவடிக்கை: பெப்சிக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

படப்பிடிப்புகளுக்கு தடங்கல் செய்தால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்சிக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒப்பந்தப்படி சம்பளம் தராவிட்டால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (ஜூலை 30) தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரமாக ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனையின் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் குறித்த தங்கள் கடிதம் ஊடகங்கள் மூலம் கிடைத்தது. அதில் உங்களது பக்க நிலைகளையும் நியாயங்களையும் விளக்கியிருந்தீர்கள். மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்து எழுதியதும் மகிழ்ச்சி.

எனினும் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. நாங்கள் வழக்கம்போல தயாரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஏனெனில், தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைத்துறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் பெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை.

ஆனால் பெப்சியுடன் மட்டும் தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது, ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதே வேலையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை எற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் மூலம் பெப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது.

ஆனால் இதே விஷயம் ஆண்டாண்டு காலமாக திரும்ப திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது. இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகத்தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

25 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட ஒரு அமைப்பை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்துவரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அதன் நிர்வாகக்குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவது தேவையற்றது என கருதுகிறோம்.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள தனபால் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானத்தில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விஷயத்தை புறந்தள்ளுகிறோம்.

ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது. இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.

இப்போதும் நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு என்றும் தொழிலாளர்கள் வேண்டும். பெப்சியுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம் தான். ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் முழுவதுமாக இனி இணைந்து செயல்பட முடியாது. மேலும் 'பில்லா பாண்டி' தயாரிப்பாளருக்கு எற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பட்சத்தில் மற்ற சங்கங்கள் குறித்த சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை'' என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x