Last Updated : 15 Jun, 2016 11:33 AM

 

Published : 15 Jun 2016 11:33 AM
Last Updated : 15 Jun 2016 11:33 AM

அமிதாப் உடன் ரஜினியை ஒப்பிட்டு ட்வீட்: ராம் கோபால் வர்மாவுக்கு தமிழ் ரசிகர்கள் பதிலடி

ரஜினி - அமிதாப் இருவரையும் ஒப்பிட்டு ராம் கோபால் வர்மா தெரிவித்த கருத்துகளுக்கு, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவ்வப்போது நடிகர்களை கிண்டல் செய்து ட்வீட் செய்து அதில் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார். பவன் கல்யாண், ரஜினி போன்ற நடிகர்களைப் பற்றி ட்வீட் செய்து, ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தற்போதும் ரஜினியையும், அமிதாப்பையும் ஒப்பீடு செய்து ட்வீட் போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ராம் கோபால் வர்மா. அதற்கு தமிழ் ட்வீட்டாளர்கள் பலரும் அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இயக்குநர் வெங்கட்பிரபுவும் ராம் கோபால் வர்மாவுக்கு பதிலளித்திருக்கிறார்.

"’Te3n’ படத்தில் அமிதாப் பச்சனின் ஆகச் சிறந்த நடிப்பைப் பார்த்த பிறகு எனக்கு ஒரே ஒரு மனக்குறை தான் உள்ளது. அவர் இனி 'ரான்' போன்ற ஹீரோயிஸ படங்களில் நடிக்கக் கூடாது என்பதே அது. திரையுலகின் பல நட்சத்திரங்கள் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியாக இருக்கட்டும், தமிழ் திரையுலகின் ரஜினிகாந்தாக இருக்கட்டும் அனைவருமே அமிதாப்பச்சனின் திறமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமிதாப்புக்குத்தான் அவரது சிறப்பு தெரியவில்லை.

பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்கான தேடலினாலும், நடிப்புத் திறனின் எல்லையை விஸ்தரிப்பதற்காகவும் அமிதாப்பச்சன் தான் ஒரு நட்சத்திர நாயகர் என்ற அந்தஸ்தையும் கடந்து எடுத்த முடிவுகள் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. ஒரு ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாகவே கூறுகிறேன், ஒருவேளை 'ரோபோட்' படத்தில் அமிதாப் நடித்திருந்தால் அது இன்னமும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும். அதேவேளையில் 'Te3n' படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் அமிதாப்புக்கு அவரால் ஈடு கொடுக்க முடிந்திருக்காது.

எனது இந்த கருத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட மறுத்தலிக்க மாட்டார். 'Te3n', 'பிளாக்', 'பிக்கூ' படங்களில் ரஜினி நடித்திருந்தால் அவை நகைப்புக்குரியாதாக இருந்திருக்கும். ரஜினியை நான் நேசிப்பதற்கு காரணம் அவர் ஏற்படுத்தும் தாக்கம், அமிதாப்பை நான் நேசிக்க காரணம். அவருக்குள் இருக்கும் கருத்தாழம். எனது இந்த ரசனை ரஜினி சாருக்கு மட்டுமே புரியும். ஏனெனில் என்னைப்போல் அவரும் அமிதாப்பை ரசிக்கிறார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ராம் கோபால் வர்மா.

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டிற்கு, "நீங்கள் ரஜினி நடித்த 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'முள்ளும் மலரும்' படங்களைப் பார்க்கவில்லையா" என்று அவரை குறிப்பிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் வெங்கட்பிரபு, "சார், ’ஷோலே’ படத்தை உங்களால் மட்டுமே தோல்விப் படமாகக் கொடுக்க முடியும். ஆனால், எங்கள் சூப்பர் ஸ்டார் 'TE3N' படத்தையும்கூட வரலாறு படைக்கச் செய்வார்” என்று பதிலளித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x