Last Updated : 16 Aug, 2016 01:38 PM

 

Published : 16 Aug 2016 01:38 PM
Last Updated : 16 Aug 2016 01:38 PM

சூப்பர் ஸ்டார் இமேஜை சமூகத்துக்காக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி: ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை சமூகத்தின் சில விஷயங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறோம் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது என இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தில் சிக்கினாலும், பெருமளவில் வசூலை வாரிக் குவித்தது. இந்தியளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது.

'கபாலி' படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இயக்குநர் ரஞ்சித் பேசியது: "இந்த படம் ஏன் எடுத்தேன் என்று எனக்கு தெரியும். அது சரியாக போய் சேர்ந்துவிட்டது என நினைக்கிறேன். இந்தப் படம் வெளியாகும் முதல் நாளே, இதனை காலி பண்ண முனைவார்கள் என யோசித்தேன். அதுமட்டுமன்றி இதனைப் பற்றி பலரும் பேசுவார்கள் என நினைத்தேன்.

மக்கள் கொண்டாடவில்லை என்றால் இப்படம் இந்தளவுக்கு வந்திருக்காது. 25ம் நாள் வரை தமிழகத்தில் நிறைய திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல். இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைய வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் அப்போது தான் அது சார்ந்த சினிமாக்கள் நிறைய வரும். அது சார்ந்து மக்களிடையே போய் பேச முடியும். தோல்வியடைந்து விட்டதால் அதைப் பற்றி அதற்குப் பிறகு பேசவே முடியாது.

'அட்டகத்தி' படம் வெற்றியடையவில்லை என்றால் நான் இங்கு இருக்கவே முடியாது. அப்படம் தோல்வியடைந்திருந்தால் நானும் என் கருத்துக்களை ஒரமாக வைத்துவிட்டு, ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் வேறு ஏதாவது சினிமா பண்ணியிருப்பேன். 'அட்டகத்தி' ஜெயித்ததால் 'மெட்ராஸ்' ஜெயித்ததால் 'கபாலி' எடுத்தேன். தற்போது 'கபாலி' ஜெயித்திருப்பதால் வேறு சில படங்கள் எடுக்கப் போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பொதுமக்கள் எப்போதுமே ஆதரவு அளிக்கிறார்கள். திருவண்ணாமலையில் ஒரு திரையரங்கில் வெளியே 15 பேர் நின்று கொண்டு இப்படம் நன்றாக இல்லை, போகாதீர்கள் என 2ம் நாளே கூறிக் கொண்டு இருந்ததாக சொன்னார்கள். முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இப்படம் பற்றி நிறைய எழுதினார்கள்.

'கபாலி'யில் பிரச்சினை இருக்கிறது. அது என்ன பிரச்சினை என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி தான் இப்படத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று யோசித்தோம். ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் பிம்பம் எனக்கு அவசியம் தேவையாக இருந்தது. நான் யார் மூலமாக என் குரலை பேச வேண்டும் என்று நினைத்தேனோ, அதன் மூலமாக தான் பேசியிருக்கிறேன். அந்த குரலின் சத்தம், விரீயம் அனைவருடைய காதையும் கிழித்திருக்கிறது என்று நம்புகிறேன். அடுத்ததாக அந்த குரல் அனைவருடைய வீடுகளிலும் தொலைக்காட்சியில் பேசும். இப்படம் மூலமாக பல விவாதங்கள் நடைபெற்ற சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கியிருந்தாலும் இப்படம் பற்றி பேசியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை சமூகத்தின் சில விஷயங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறோம் என்று நினைக்கும் போது ஒரு படைப்பாளியாக சந்தோஷம் கிடைத்திருக்கிறது.

நியாயமான விமர்சனங்களை நான் எடுத்துக் கொள்கிறேன். அந்த மாதிரியான விமர்சனங்கள் தான் படைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என நினைக்கிறேன். என்னை திட்டுகிறவர்களைப் பற்றியோ, என்னை காலி பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் பற்றியோ எனக்கு எந்தொரு கவலையும் கிடையாது.

ஏனென்றால் இந்த இந்திய சமூகத்தில், சுதந்திர போராட்டத்தின் போது இறுதிவரைக்கும் ஒரே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த குரல் இரவு தூங்கக்கூட இல்லை. என்னுடைய சுதந்திர இந்தியாவில் இன்னும் மக்கள் சுதந்திரம் அடையாமல் இருக்கிறார்கள் என்று ஒலித்த குரல் அது. அந்த குரலில் ஒரு சிறு விஷயமாவது எனக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் என்னுடைய குரல் இறுதிவரை இதைப்பற்றி பேசும் என நினைக்கிறேன். அந்த வெற்றியை எனக்கு 'கபாலி' படைப்பு கொடுத்திருக்கிறது" என்று பேசியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.