Last Updated : 22 Sep, 2016 10:24 AM

 

Published : 22 Sep 2016 10:24 AM
Last Updated : 22 Sep 2016 10:24 AM

இதுதான் நான் 44: என் மேல் விழுந்த மார்க்!

என்னிடம் இப்போது சில பேர், ‘‘நாம சேர்ந்து படம் பண்ணு வோமா? ’’ன்னு கேட்கும்போது, ‘‘டான்ஸ் படம் பண்ணட்டுமா?’’ன்னு சில தடவை கேட்டிருக்கேன். அதுக்கு அவங்க, ‘‘ஓ… தாராளமா பண்ணலாம் சார். ஆனா நீங்க காதல், காமெடி கலந்து ஆக்‌ஷன் படம் செஞ்சா மாஸா இருக்குமே’’ன்னு சொல்வாங்க.

‘‘ஏங்க, நான் டான்ஸர்ங்கிறதையே மறந்துட்டீங்களா? ’’ன்னு திரும்பக் கேட்பேன். ‘

‘‘ஆமாம். கரெக்ட்தான் சார். நீங்க டான்ஸ் படம் செஞ்சா நல்லா இருக்கும். அதுவே, ஆக்‌ஷன் படம் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்!’’னு மறுபடியும் சொல்வாங்க. அந்த அளவு ஆக்‌ஷன் பட மார்க் என் மேலே விழுந்திருக்கு.

‘நுவ்வொஸ்தாவன்டே நேனொத்துன் டானா’ன்னு நான் செய்த முதல் படம் சாயந்தர நேரத்துல வீசுற தென்றல் மாதிரி ஒரு ஸ்வீட் லவ் படம். அடுத்ததா செய்த ‘பவுர்ணமி’ கிளாசிக்கல் பேஸ் டான்ஸ் படம். இது 1960-களின் பின்னணி யில் எடுத்தப் படம். நம்ம பிரபாஸ் ஹீரோ. ரிலீஸான அந்த டைம்ல சரியா போய் சேரலைன்னாலும், இப்போ டி.வி-யில் பார்க்கிறவங்க, ‘‘சார்… நல்ல படம்!’னு சொல்றாங்க. இப்படி ரெண்டு படத்துக்கு அப்புறம் எனக்கு அடுத்ததா அமைஞ்ச படம்தான் ‘போக்கிரி’.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர், விஜய் சொல்லி அனுப்பியதாக என்னிடம் வந்தார். என்னை அப்படத்தை டைரக்ட் செய்ய சொன்னார். இதுக்கு முன்னால எனது ரெண்டு படங்களுமே வேற பேஸ்ல எடுத்தவை. ஆனா, ‘போக்கிரி’ பக்கா அதிரடிப் படம். இந்தப் படத்துக்கு நாம் எப்படி சரியா இருப்போம்னு நினைச் சாங்கன்னு, அப்போவெல்லாம் எனக்கு அதிசயமாத்தான் இருந்தது. முதல் படம் நான் டைரக்ட் செய்தபோது, ‘என் மேல நான் வெச்சிருந்த நம்பிக்கையைவிட, அந்தப் படத் தயாரிப்பாளர் வெச்சிருந்த நம்பிக்கைதான் அதிகம்’ன்னு முன்னாடி சொன்னதுதான்… ‘போக்கிரி’ படம் டைரக்‌ஷன் வாய்ப்பு கிடைச்சப்பவும் தோணியது.

‘போக்கிரி’ படத்துக்காக விஜய்யும் நானும் முதன்முதலா சந்திக்கிறோம். இதுக்கு முன்னால அதிகமா நாங்க ரெண்டு பேருமே பார்த்து பேசியது இல்லை. அண்ணன் ராஜு அவரோட படங்கள்ல கொரியோகிராஃபரா நிறைய வேலை பார்த்திருக்கான். விஜய்யும் நானும் அப்போ சந்திச்சு பேசுறப்பல்லாம், ‘‘சொல்லுங்ணா!’ன்னுதான் என்னிடம் பேசினார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. ஏன்னா, நாங்க ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே சமயத்துல இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தவங்க. இதை என் ஸ்கூல் நண்பர்கள்ட்ட கூட சொன் னேன். அப்போ அவங்க, ‘‘நீ எவ்வளவு பெரிய கொரியோகிராஃபர். அந்த மரியாதை இல்லாம இருக்கு மாடா?’’ன்னு சொன்னாங்க. என் மேலேயே எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஷூட்டிங் வந்த அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் எல்லாரையுமே மரியாதையோட ‘அண்ணா’ன்னுதான் கூப்பிடுறாருன்னு. இதையும் என் நண்பர்களிடம் போய் ‘‘டேய், அவர் எல்லாரையுமே அண்ணான்னுதான்டா கூப்பிடுறார்’’னு சொன்னேன். என்னை ரெண்டு செகண்ட் பார்த்தாங்க. ‘‘வாடா தோசை சாப்பிட போலாம்’’னு சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க.

நான் தெலுங்குல டைரக்‌ஷன் செய்த, ‘நுவ்வொஸ்தாவன்டே நேனொத்துன் டானா’ படம் விஜய்க்கு ரொம்ப பிடிச்ச படம்னு சொல்லியிருக்கார். அப்படி ஒரு காதல் படத்தை செய்த நான் ‘போக்கிரி’ மாதிரி ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுத்தா சரியா இருக்கும்னு, அவர் எப்படி நம்பிக்கையோட ஜட்ஜ் பண்ணினாருங்கிறது இப்போ நினைச்சாலும் ஆச்சர்யம்தான். அவர் வைத்த அந்த நம்பிக்கையாலதான், ஆக்‌ஷன் பட முத்திரையோட ஹிந்தி சினிமா வரைக்கும் போய், ‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’னு பெரிய அளவுல என்னை ஹிட் கொடுக்கவும் வைத்தது. அதுக்கு பிறகு ‘எங்கேயும் காதல்’, ‘ராமையா வஸ்தாவையா’ மாதிரியான காதல் படங்களை நான் செய்தாலும், என் மேல ஆக்‌ஷன் படத்தோட மார்க் இன்னைக்கும் கூடவே இருக்கு.

ஹிந்தியில ‘வான்டட்’ படம் வர்ற வரைக்கும் ரொமான்ஸ், லவ்னு அங்கே டிரெண்டே வேற மாதிரி இருந்தது. இந்த ஒரு படம் ஹிந்தியோட அந்த டிரெண்ட்டையே மாத்தி போட்டு டுச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்கு முக்கியமான காரணம் பூரி ஜெகன்நாத்தும் அவரோட டீமும். அதே மாதிரி, அப்போ வேற ரூட்ல போயிட் டிருந்த ஹிந்தி சினிமா பாதையிலேர்ந்து மாறி, இந்தப் படத்தை வாங்கி அதை எடுக்க நினைச்ச போனி கபூர் சார், ஹீரோவா நடிச்ச சல்மான் கான்… இவங்க ரெண்டு பேரும் இல்லன்னா அந்தப் படமே அந்த நேரத்துல அங்கே வந்திருக்காது. அவங்கள்லாம் சொன்னா, யார் வேணும்னாலும் வந்து டைரக்‌ஷன் பண்ணுவாங்க. இந்தப் படமும் கண்டிப்பா ஹிட் ஆகியிருக்கும். ஏன்னா, கதையில் வைப்ரேஷன் கலந்த ஒரு மேஜிக் அந்த அளவுக்கு இருந்தது. இது எல்லாமே சரியா அமைஞ்சதால பெரிய அளவில் ‘வான்டட்’ எங்களை கவனிக்க வைத்தது.

‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற பிறகு பல பேர் என்னிடம், ‘‘நீங்க ஏன் தொடர்ந்து ரீமேக் படங்களையே டைரக்ட் பண்றீங்க?’’ன்னு கேட்டாங்க. சில பேர் நான் தப்பு பண்ற மாதிரியும், என்னை கலாட்டா பண்றதுக்கு கேட்பாங்க. அப்போ, ‘‘ஆமாங்க, நீங்க சொல்றது சரிதான்’’னு சொல்லியிருக்கேன். ஆனா, என் மனசுல இவங்க இப்படி கேட்டுட் டாங்களே? நம்ம புத்திசாலித்தனத்தை காட்டணும்? நம்ம திறமையைக் காட்டணும்னு நினைச்சதே இல்லை. எப்பவுமே நான் தயாரிப்பாளரை மனசில் வெச்சுக்கிட்டுதான் படம் பண்ணுவேன்.

என்னோட முதல் படம் ‘நுவ்வொஸ்தாவன்டே நேனொத்துன் டானா’, ரெண்டாவது படம் ‘பவுர்ணமி’ அடுத்தடுத்து எடுத்த ‘எங்கேயும் காதல்’, ‘ஆர் ராஜ்குமார்’… இது எல்லாமே நான் நேரடியா எடுத்த படம்தான். அதுலேயும் நான் செய்த ‘ஆர் ராஜ்குமார்’படம் ரிலீஸானபோது, ஹிந்தியில தாறுமாறா விமர்சனம் எழுதி கிழிச்சாங்க. ஆனா, நாலு வாரம் கழிச்சு அவங்களே நல்லா எழுத ஆரம்பிச்சாங்க. அது ஏன்? அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x