Published : 12 Sep 2018 08:20 PM
Last Updated : 12 Sep 2018 08:20 PM

வடிவேலுவுக்கு ‘ரெட்’

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட விவகாரத்தில், வடிவேலுவுக்கு ‘ரெட்’ கார்டு போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம்.

இறுதியாக இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தரப்பிலிருந்து தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் வடிவேலு தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பினார் வடிவேலு. “இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் வடிவேலு.

இந்நிலையில், மறுபடியும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது பெரிசாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை. இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக்கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ஏற்கெனவே வடிவேலு ஒப்பந்தமான படங்களின் தயாரிப்பாளர்கள், “முதலில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பிரச்சினையை முடியுங்களேன்” என்று அவரிடம் கூறியுள்ளனர். இதனால் பயங்கர டென்ஷனாகி சுற்றி வருகிறார் வடிவேலு. இம்மாதம் அவரது மகளின் திருமண வேலைகள் காரணமாக சொந்த ஊரான மதுரையில் இருக்கிறார். அதை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பிரச்ச்சினை இன்னும் பெரிசாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x