Published : 14 Sep 2018 08:13 PM
Last Updated : 14 Sep 2018 08:13 PM

கமலுக்கு எதிராக பிக் பாஸ்? ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற பழைய போட்டியாளர்கள் களமிறக்கம்

ஐஸ்வர்யாவை வெளியேற்றியே தீரவேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் கமலின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் எவிக்‌ஷனுக்கு ஐஸ்வர்யாவை தேர்வு செய்துவிட்டு மறுபுறம் அவரைக் காப்பாற்ற கடந்த சீசன் போட்டியாளர்களை இறக்கியுள்ளது 'பிக் பாஸ்' டீம்.

’பிக்  பாஸ்’ நமக்கு உணர்த்துவது மேல்தட்டு மக்களாக இருந்தாலும் போலித்தனமான மேல்தட்டு பாசப்பிணைப்புகள் மேடையில் மட்டுமே எடுபடும். ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தால் அனைவரும் சாதாரண மக்களே என்பதும், சாதாரண இடத்திலிருந்து வரும் போட்டியாளர்கள் நேர்மையாக விளையாடுவதன் மூலம் மக்களின் உள்ளங்களை வெல்கின்றனர் என்பதும் நிரூபணமாகிறது.

இதற்கு உதாரணம் பொன்னம்பலம், சென்றாயன், ரித்விகா போன்றோரையும் கடந்த முறை சினேகன், ஆரவ் போன்றோரையும் உதாரணமாகக் கூறலாம். மேல்தட்டுவர்க்கமாக இருந்தாலும் வெளிப்படையாக இருப்பவர்களும் வெல்கிறார்கள் உதாரணம் ஓவியா, மும்தாஜ், பிந்து மாதவி போன்றோரைச் சொல்லலாம்.

மற்றொரு உண்மை அரசியலுக்கும், பிக் பாஸுக்கும் உள்ள ஒற்றுமை. மோசமான அரசியல்வாதிகள் பெரிய அளவிலான விளம்பரம் மற்றும் சில சில்லறை சீர்த்திருத்தங்கள் மூலம் மக்களிடையே நல்லவர்களாக மாற்றப்படுவார்கள். அதேபோன்று பிக் பாஸில் கடைசிவரை வரவேண்டியது யார் எனத் தீர்மானித்துள்ள 'பிக் பாஸ்’ அதற்கான குறுக்கு வழியில் இறங்கித் தடையாக இருந்த சென்றாயன் போன்றவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதை மக்களும் நம்பவில்லை, கமல்ஹாசனும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவு அடுத்து ஐஸ்வர்யா கட்டாயம் எவிக்‌ஷனுக்கு வரவேண்டும் என கமல் பகிரங்கமாக கோரிக்கைவிட, பொதுமக்கள் அதைக் கைத்தட்டி வரவேற்றனர். அதன்படி வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா எவிக்‌ஷனுக்குள் வந்துள்ளார். கூடவே மும்தாஜையும் கொண்டு வந்துள்ளனர்.

'பிக் பாஸ்' சீசன் 2-ல் போட்டியாளர்கள் தரம் மிகக்குறைவாக இருந்ததால் அவர்களின் மனோநிலையும் மோசமாக இருந்தது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. வோட்டிங் 90 சதவிகிதம் குறைந்து போனது. இதை வேறு வகையில் கையாள ’பிக் பாஸ்’ டீம் முடிவு செய்தது.

போட்டியாளர்களில் ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என முடிவு செய்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றும் முயற்சியில் கடுமையாக பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதனால் கமலுடன் மோதவும் 'பிக் பாஸ்' டீம் தயாராகியுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது..

கமல் எதிர்த்தாலும், ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற முடிவு செய்துள்ள 'பிக் பாஸ்' டீம் இதற்காக ’பிக் பாஸ்’ சீசன் ஒன்றின் போட்டியாளர்களை இறக்கியுள்ளது. சினேகன், காயத்ரி ரகுராம், சுஜா, ஆரவ், வையாபுரி என ஒரு பெரிய டீமையே இறக்கியுள்ளது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை ஐஸ்வர்யாவை நல்லவராகக் காண்பிக்க முயற்சிப்பது. மும்தாஜை மோசமானவராகக் காட்டுவது.

இதற்கான வேலையில் முதல் நாளிலிருந்தே இறக்கிவிடப்பட்டவர்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். அதென்ன மும்தாஜுக்கு மட்டும் தனி எண்ணெய் என ஆரம்பித்தவர்கள் மெல்ல பாலாஜியையும் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிட்டனர். 'பிக் பாஸ்' தரப்பில் கடந்தமுறை நடந்த குறும்படங்களைப் போட்டுக்காட்டி மோசமாக நடந்துகொண்ட போட்டிகளை போட்டுக்காட்டி இப்போது நடப்பது ஒன்றும் மோசமில்லையே என்கிற உணர்வை உருவாக்குகின்றனர்.

மறுபுறம் 'பிக் பாஸ்' டாஸ்க்காக போட்டியாளர்கள் மீது முட்டை, மாவு முதலியவற்றைப் போட வேண்டும் என்கிற டாஸ்க்கைக் காண்பித்து ஐஸ்வர்யா தன்னிச்சையாக முடிவெடுத்து பாலாஜி மீது குப்பையைக் கொட்டிய காட்சியையும் போட்டுக்காட்டி இதெல்லாம் சகஜம், ஒன்றுமில்லை என்று சொல்ல வைக்கிறார்கள்.

டாஸ்க்கில் உள்ளதற்கும், தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துக்கொண்டதற்கும் வித்தியாசம் இல்லையா என மெல்லிய கேள்வி சிலர் வாயில் வந்தது. பின்னர் வாயை மூடிக்கொண்டார்கள். ஆனால் பாலாஜி ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார். ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் 'பிக் பாஸ்' சீசன் ஒன்றில் இதைவிட மோசமாக மோதிக்கொண்டார்களே. ஆனால் இங்கு மகத் இடிச்சார், கடித்தார் என்றெல்லாம் சொன்னார்களே என்று கேட்கிறார்கள்.

பாலாஜி கூறும்போது ’பிக் பாஸ்’ முதல் சீசனில் வேகமாக மோதியவர்கள் போட்டி முடிந்ததும் மறந்து சகஜமாகப் பழகினார்கள், ஆனால் இங்கு அது இல்லையே என்று பதிலளிக்கிறார்.

ஐஸ்வர்யாவைத் துள்ளிவிளையாடும் பள்ளிக் குழந்தை போல் அனைவரும் தாங்குகிறார்கள். சினேகனுடன் டூயட் பாடுகிறார். காயத்ரி ரகுராமோ,  ஐஸ்வர்யா சென்றாயனை ஏமாற்றியதை நியாமான விஷயம் தான் என்கிறார்.

இதன்மூலம் 'பிக் பாஸ்' டீம் கமலின் எண்ணத்திற்கும் ஒத்துழைத்து எவிக்‌ஷனுக்கு ஐஸ்வர்யாவைத் தயார்படுத்திவிட்டு மறுபுறம் மறைமுகமாகக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளதைஒ பார்வையாளர்கள் மவுனமாகப் பார்த்துதான் வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x