Published : 08 Oct 2018 06:48 PM
Last Updated : 08 Oct 2018 06:48 PM

‘96’ பட நாயகன் ராமச்சந்திரன் என்ன செய்திருக்க வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

‘96’ படத்தின் நாயகன் ராமச்சந்திரன் என்ன செய்திருக்க வேண்டும்? என கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த இந்தப் படம், பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் பள்ளிக்கால காதல் நினைவுகளை இந்தப் படம் தட்டி எழுப்பியிருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், இந்தப் படத்தைப் பற்றி ஒருசில எதிர்மறை விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 20 வருடங்களுக்குப் பிறகும் காதலியை நினைத்துக்கொண்டு விர்ஜினாகவே இருக்கும் விஜய் சேதுபதி குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

‘96’ படத்தின் நாயகன் ராமச்சந்திரன் என்ன செய்திருக்க வேண்டும்? என கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு இது.

“96 திரைப்படம் பற்றி கண்ணில்பட்ட எதிர்மறை விமர்சனங்களில் முதன்மையானது, ராமச்சந்திரன் 22 வருடங்கள் ஜானகியை நினைத்துக் கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நம்பும்படி இல்லை. அது ஒரு எதார்த்தத்திற்குப் புறம்பான, செயற்கையான பாத்திரப்படைப்பு என்பதுதான்.

அன்பு, உறவு , காதல் போன்ற உணர்ச்சிகளுக்குப் பொதுவான பாதைகள் இருக்கின்றன என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் இழந்த காதல் என்பது எண்ணற்ற விசித்திரமான நிலைகளை மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது.

ஒரு காதலை இழப்பதை, வாழ்வின் இயல்பான போக்காக ஏற்று, தங்கள் வாழ்வை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது ஒரு பொதுவிதி அல்ல. ஒரு இழந்த காதலை, வாழ்வின் முடிவற்ற இருளாகக் கொண்டு தொலைந்து போனவர்கள் எவ்வளவோ பேர்.

மனப்பிறழ்வுகள், தற்கொலை, ஆன்மிக நாட்டம், குடும்ப அமைப்பிற்குள் இருந்தாலும் ஒட்டுதலற்றுப் போதல், போதைப் பழக்கம் என சுய அழிவைத் தேடிக்கொண்டவர்கள் எவ்வளவோ பேர். அந்த அழிவில், வாழ்வின் மீதான ஒரு தீராத வருத்தம் இருக்கிறது. தன்னைத்தானே மறுத்துக் கொள்ளும் வைராக்கியம் இருக்கிறது. அந்தத் துயரத்தின் கானத்தைத்தான் நமது கவிதைகளும் காப்பியங்களும் காலம் காலமாகப் பாடுகின்றன.

அந்தக் கடக்க முடியாத துயரத்தின் கடலை, நான் நூறு நூறு கவிதைகளில் எழுதிக்கடக்க முயன்று, தோற்றிருக்கிறேன்.

ராமச்சந்திரன் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பார்வையாளன் முடிவு செய்வதோ அல்லது ராமச்சந்திரன் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று கற்பனை செய்வதோ, ஒரு சினிமாவையோ அல்லது ஒரு வாழ்வையோ புரிந்து கொள்ளும் வழி அல்ல.

அன்பின் துயர நிலங்களைக் கடக்க, பொது வழிகள் ஏதும் இல்லை” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் மனுஷ்யபுத்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x