Published : 28 Dec 2023 07:00 PM
Last Updated : 28 Dec 2023 07:00 PM

‘இன்ஸ்பெக்டர் விஜய்’ முதல் ‘ஏசிபி பன்னீர்செல்வம்’ வரை! - விஜயகாந்த் வலம் வந்த வலுவான போலீஸ் ரோல்கள்

விஜயகாந்த் தனது ஆரம்பகால படங்களில், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், போராடும் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். இந்தக் கதாப்பாத்திரங்கள்தான் அவரை எளிய மக்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்திருந்தது. விஜயகாந்த் பெரிய கிருதாவுடன், பெல் பாட்டம் பேன்ட், திறந்துவிட்ட சட்டையுடன் வரும் பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுவந்தார். ஆரம்பத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்த பாத்திரங்கள் பெரிதாக மக்களின் கவனம் பெறவில்லை.

அந்த நேரத்தில், போலீஸ் வேடங்களில் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு தொடர்ந்து கிடைத்தது. அவரது வெற்றிப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில், போலீஸ் அதிகாரி வேடமேற்று நடித்த திரைப்படங்கள் இன்றுவரை அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, படம் பார்க்கும் யாராக இருந்தாலும் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வரிசையில், சிவந்த கண்கள், சாட்சி, ஜனவரி 1, நீதியின் மறுபக்கம், புதிய தீர்ப்பு, என பல திரைப்படங்களில் விஜயகாந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவர் நடித்த பல ஆக்‌ஷன் திரைப்படங்களும் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின.

இந்நிலையில்தான், திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணன் எழுதி அரவிந்த்ராஜ் இயக்கத்தில் உருவான 'ஊமை விழிகள்' திரைப்படத்தில், ஒரு உயர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜயகாந்த். இதற்கு முன்பாக போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்தப்படம் விஜயகாந்துக்கு மிகப்பெரும் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில், கார்த்திக், அருண் பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், மலேசியா வாசுதேவன், என பலரும் நடித்திருப்பார்கள். ஆனால், அதற்கு முன்பு வந்த படங்களில் அதிகபட்சம் இன்ஸ்பெக்டராக மட்டும் விஜயகாந்த் டிஎஸ்பி தீனதயாளான் கதாப்பாத்திரத்தில் வந்தது ஊமை விழிகள் திரைப்படத்தில்தான். யாராலும் நெருங்க முடியாத அந்த கொடூரமான கொலைகார பாத்திரத்தை விஜயகாந்த் பிடிக்க வரும் இறுதிக்காட்சி இப்போதுவரை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்தப் படத்துக்குப் பிறகு, சிறைப்பறவை, வீரன்வேலுதம்பி, காலையும் நீயே மாலையும் நீயே, பொறுத்தது போதும், தர்மம் வெல்லும், ராஜநடை என அவரது திரைப்பயணத்தில் பல படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தாலும், அவருக்கு இரண்டாவது திருப்புமுனையாக அமைந்த படம்தான் புலன் விசாரணை. மற்றொரு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வந்த திரைப்படம் ஆட்டோ சங்கர் வழக்கை தழுவி வெளியானது.

இத்திரைப்படத்தின் மேக்கிங், அந்த சமயத்தில் ஆங்கிலப் படத்துக்கு இணையாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் டெபுடி கமிஷனர் ஹானஸ்ட்ராஜ் வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். அந்த உடையில் அவ்வளவு ஃபிட்டான காவல்துறை அதிகாரியை பார்க்க முடியாது என்றாலும் மிகையாகாது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த சத்ரியன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அசிஸ்டெண்டட் கமிஷ்னர் பன்னீர் செல்வமாக வாழ்ந்திருப்பார். படத்தில் அருமைநாயகமாக வரும் மறைந்த நடிகர் திலகனுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையிலான வார்த்தைப்போரே இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். போலீஸ் வேலையில் இருந்து விலகிச் சென்ற விஜயகாந்தை வம்புக்கு இழுக்கும் திலகனின் நடிப்பும், மீண்டும் போலீஸ் வேலையில் சேர விஜயகாந்த் எடுக்கும் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன்பின்னர் வந்த அசிஸ்டென்டட் கமிஷ்னர் பன்னீர்செல்வமாக மீண்டும் விஜயகாந்த் நடித்த மாநகர காவல் அவரது போலீஸ் கதாப்பாத்திரத்துக்கு மகுடமாக அமைந்த படம் என்றால் மிகையல்ல. இந்தப் படத்தின் துவக்க காட்சியில், அந்த போலீஸ் உடையில் விஜயகாந்த் நடந்து வரும் காட்சி எப்போது பார்த்தாலும் கூஸ்பம்ப்ஸ் தரக்கூடியவை. முத்தாய்ப்பாக, பிரதமரின் உயிரை காப்பாற்றும் தமிழக காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் இதில் நடித்திருப்பார்.

தொடர்ந்து நடிகர் விஜயகாந்த், ராஜதுரை, சேதுபதி ஐபிஎஸ், அலெக்ஸாண்டர், வீரம் வெளஞ்ச மண்ணு, வல்லரசு, வாஞ்சிநாதன், தேவன், அரசாங்கம் வரை பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு விஜயகாந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த திரைப்படங்களை உதாரணமாக கூறலாம் எனும் அளவுக்கு காவல்துறை அதிகாரியாக அவர் நடித்த திரைப்படங்கள் என்றென்றும் நிலைத்திருப்பவை.

சத்திரியனுக்கே சாவே இல்லை என்ற அவரது திரைப்பட வசனத்தைப் போலவே, விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும் அவரது நினைவுகளை ரசிகர்கள் மனதில் எப்போதும் உயிர்ப்பித்திருக்கச் செய்பவை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x