Published : 24 Oct 2017 09:03 PM
Last Updated : 24 Oct 2017 09:03 PM

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம்: வைரமுத்து புகழஞ்சலி

திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசியின் மறைவுக்கு கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுச் செய்தி என்னை அதிர வைத்தது.புகழ்மிக்க ஒரு தென்னிந்திய இயக்குநரை இந்திய சினிமா இழந்துவிட்டது.

அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். பாராதிராஜாவின் நிழல்கள் நான் பாட்டெழுதிய முதல் படம் என்றாலும், திரையில் முதன்முதலில் வெளிவந்தது ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய காளி என்ற படமாகும். அந்த வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.

கலையே வாழ்வு; வாழ்வே கலை என்று வாழ்ந்தவர் மறைந்துவிட்டார். மலையாள மண் இந்திய சினிமாவுக்குத் தந்த கலைக் கருவூலத்தைக் காலம் திருடிவிட்டது. அவர் புகழ் இந்திய சினிமாவில் என்றென்றும் வாழும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலை உலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x