Last Updated : 25 Oct, 2017 10:25 AM

 

Published : 25 Oct 2017 10:25 AM
Last Updated : 25 Oct 2017 10:25 AM

தமிழக அரசின் டெங்கு விளம்பர படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி; சுற்றுப்புறத்தை நாம் பராமரித்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்: சுஜா வருணி நேர்காணல்

டெ

ங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை ஒரு விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், ஆசிரியையாக நடித்திருக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் சுஜா வருணி.

பொறுப்பாக இருந்து, ‘பிக் பாஸ்’ வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தேன் என்ற நற்பெயரோடு, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேன். இங்கு என் முதல் விளம்பரப் படமே சமூகத்துக்கு நல்ல விஷயத்தை, அதுவும் சுத்தம், சுகாதாரத்தை எடுத்துச் சொல்லும் விளம்பரமாக அமைந்திருக்கிறது. இதைவிட என்ன பெருமை வேண்டும்’’ என்று பூரிக்கிறார் சுஜா வருணி. அவருடன் தொடர்ந்து பேசியதில் இருந்து..

டெங்கு குறித்த இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்குள் எப்படி வந்தீர்கள்?

நடிகர் தம்பதியான ராம்கி - நிரோஷா சேர்ந்துதான் இந்த விளம்பரப் படத்தை இயக்கினாங்க. அரசு முன்னெடுக்கும் இந்த விஷயத்தில் நம் பங்களிப்பும் இருக்கப்போகிறதே என்பதால், உடனே சம்மதம் தெரிவித்தேன். அரசுக்கும், ராம்கி, நிரோஷாவுக்கும் நன்றி.

உங்களைத் தவிர, இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் படத்தில் விஜய்சேதுபதி, பரத் என திரைப் பட்டாளங்கள் அணிவகுப்பே இருக்கிறது போல?

இதுபோன்ற விஷயங்களை திரை நட்சத்திரங்கள் மட்டும்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றில்லை. மக்கள் எல்லோருக்குமே டெங்கு காய்ச்சல் குறித்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும். நம்ம வீடு, நம்ம குழந்தைகள், நம்ம சமூகம் என்ற அக்கறைதான் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். நம் சுற்றுப்புறத்தை நாம் சரியாக பராமரித்தால்தான் இயற்கை நம்மைப் பாதுகாக்கும். இந்தப் படத்தில் ஆசிரியையாக வருகிறேன். மழைக்காலங்களில் நம்மைச் சுற்றி தண்ணீரை தேக்கி வைக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு, டெங்கு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தப் படத்தில் என் பங்களிப்பு, நானே பெருமை கொள்ளும் விதமாக இருந்தது.

உங்கள் கேரியருக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி என்ன அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது?

முன்பே சொன்னதுபோல ‘பிக் பாஸ்’ வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று இறங்கி வேலை பார்ப்பேன். அதில் என் செயல்பாடுகள், எல்லோரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி பார்த்த எல்லோருமே ‘சுஜா ரொம்ப பொறுப்பான பொண்ணு’ன்னு பாராட்டினாங்க. அங்கே இருந்து வெளியே வந்த பிறகு, பிரம்மாண்ட விளம்பரப் படங்கள் தேடிவந்தன. எதில் நடிப்பது என்ற யோசனையில் இருந்தபோதுதான், அரசின் டெங்கு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. சுத்தம், சுகாதாரம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த விளம்பரப் படத்தில் முதலில் நடிக்கலாம் என்று உள்மனம் சொன்னது. இன்றைக்கு தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்களில் இது ஒளிபரப்பாகி வருகிறது. இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்!

அடுத்தடுத்த படங்கள்?

அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, சமுத்திரகனியோடு ‘ஆண் தேவதை’, கதிர் நடிக்கும் ‘சத்ரு’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சின்ன கதாபாத்திரம் என்றால்கூட ஏற்றுக்கொள்கிறீர்களே, ஏன்?

இன்றைய சினிமா, வித்தியாசமான சூழலில் வட்டமடித்து வருகிறது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. பலரும் பலவிதமான திறமைகளோடு வந்துகொண்டே இருக்கிறார்கள். தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும். இந்தமாதிரியான சூழலில், ‘கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் என்ன சொல்கிறது? எதற்காக அந்தக் கதையில் அந்தக் கதாபாத்திரம் இடம்பெறுகிறது? என்பதை மட்டும் நுணுக்கமாக கவனித்து ஏற்றுக்கொண்டால் போதும்.

சில நேரங்களில், நாம் நினைத்ததுபோல அல்லாமல், சொல்ல வந்ததை விட்டுவிட்டு நம் கதாபாத்திரம் வேறு எங்கோ நகர்ந்து போகவும் வாய்ப்பு உள்ளது. அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் அடுத்தடுத்து நம் திறமைக்கேற்ற கதாபாத்திரத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தான் என் வெற்றியை திட்டமிட்டு வைத்திருக் கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x