Last Updated : 27 Oct, 2017 04:39 PM

 

Published : 27 Oct 2017 04:39 PM
Last Updated : 27 Oct 2017 04:39 PM

எங்களை குற்றம்சாட்டுவதை நிறுத்துங்கள்: மெர்சல் சர்ச்சை குறித்து தணிக்கைக் குழு தலைவர் காட்டம்

'மெர்சல்' தெலுங்கு தணிக்கையில் தாமதம் ஏன் என்று மத்திய தணிக்கைக் குழு தலைவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டப்படி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் அதிகாரிகள் 'அதிரந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.

இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக மத்திய தணிக்கைக் குழு தலைவர் ப்ரஷன் ஜோஷி கூறியிருப்பதாவது:

வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. எந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டாலும் இதுதான் நடைமுறை. ஆனால் எங்களால் தாமதமாவதாக குற்றம்சாட்டுவதில் நியாயமே இல்லை. அதிலும் உரிய தேதிக்கு படத்தின் தணிக்கையை முடிக்க வேண்டும் என்று உழைப்பவர்களை வருத்தப்படச் செய்துள்ளது.

திரைப்படம் எடுப்பது கடினமானது என்பது எங்களுக்குத் தெரியும். நானே திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். அதே சமயம், இந்தப் பக்கம் தணிக்கையில் உழைப்பவர்களின் உணர்வுகளையும் திரைப்படத்தை சேர்ந்தவர்கள் சற்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உரிய தேதியில் படம் தணிக்கை செய்யப்படுகிறதா என்பதை அவர்கள்தான் உறுதி செய்கின்றனர். அவர்கள் தரப்பில் எந்த தாமதமும் ஆகவில்லை. ஆனால் ஒரு படத்தின் தணிக்கைக்கு எவ்வளவு நாள் ஆகும் என்று எங்கள் தளத்துக்கு சென்று பார்த்தால் தெரியும். விண்ணப்பித்த நாளிலிருந்து 68 நாட்கள் வரை ஆகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முழு வழிமுறையும் அதில் விளக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில், குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே தணிக்கையை முடித்து விடுவோம். 'மெர்சல்' விஷயத்திலும் எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது. எனவே எங்கள் மீது குற்றம் சுமத்துவதில் எந்த நியாயமுமில்லை.

தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டும் ஒன்றுதான். தணிக்கையிலும் அதேதான். எந்த வசனமும், காட்சியும் நீக்கப்படவில்லை. இந்த விபரம் விரைவில் தயாரிப்பு தரப்புக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். ஒரு சிலரது அரசியல் ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் தேவையில்லாமல் தணிக்கைத் துறையை குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் திரைப்படத்துக்காக கடுமையாக உழைத்தவர்களைப் போல தணிக்கைத் துறையிலும் கடுமையாகத்தான் உழைத்து வருகிறோம்.

நாங்கள் ஏன் வேண்டுமென்றே தாமதிக்க வேண்டும்? அங்கு உட்கார்ந்து இந்த தணிக்கையை மேற்கொள்ளும் மனிதர்களின் உழைப்புக்கு மரியாதை தர மறுக்கிறார்கள். தணிக்கை முறை என்பது ஒரு பக்கம் சீட்டு போட்டால், மறுபக்கம் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் இயந்திரம் கிடையாது.

படத்தின் சர்ச்சையை விடுத்து படத்தில் இருக்கும் கருவை முன்வைக்க வேண்டும் என நினைக்கிறேன். அதிலும் சர்ச்சைக்காக தணிக்கைத் துறையை இழுக்கிறார்கள். படம் நன்றாக இருந்தால் எந்த சர்ச்சையும் தேவையில்லை. படம் தானாக வரவேற்பைப் பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x