Published : 18 Feb 2020 06:34 PM
Last Updated : 18 Feb 2020 06:34 PM

அப்பா இயக்கத்தில் நடித்தபோது ஏற்பட்ட குழப்பம், பதற்றம்: கல்யாணி ப்ரியதர்ஷன்

அப்பா இயக்கத்தில் நடித்தபோது ஏற்பட்ட குழப்பம், பதற்றம் குறித்து கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த 'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி ப்ரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநரான ப்ரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கல்யாணி ப்ரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வரனே ஆவஷ்யமுண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார். அப்பா - அம்மா இருவருமே மலையாளி என்பதால், இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகப்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் அறிமுகமானது குறித்து கல்யாணி ப்ரியதர்ஷன் கூறுகையில், "மலையாளத் திரையுலகில் நுழைய வேண்டும் என்றுதான் நான் அதிகம் விரும்பினேன். இதில் நுழைவதில் எனக்கு அதிக பயமும் கூட. ஏனென்றால் என் பெற்றோரின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய முடியாதோ என்ற பயம். அவர்கள் பெருமைப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அப்பா என்னை நினைத்துப் பெருமை கொள்கிறார் என்பது எனக்குத் தெரியும். பட வெளியீட்டுக்குப் பின் (வரனே ஆவஷ்யமுண்டு) என்னிடம் பல முறை பேசினார். அவரது இயக்குநர் நண்பர்களில் ஒருவர், 'இவ்வளவு நாட்களாக இவளை எங்கு மறைத்து வைத்திருந்தீர்கள்' என்று கேட்டிருக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் மகிழ்ச்சி என்பதில்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

மேலும், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மராக்கர்' படத்தில் மோகன்லாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன். அந்த அனுபவம் குறித்து, "அப்பாவுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். அவருடன் பணியாற்றினால் நான் அதிகம் பயப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். அது முற்றிலும் சரி. அவரது ஒரு படத்தில் நான் சில நாட்கள் கவுரவ வேடத்தில் நடித்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சில வசனங்களே எனக்குக் கஷ்டமாக இருந்தன.

என்னை எப்படி இயக்குவது என்பது அவருக்கும் பிடிபடவில்லை. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி நடிப்பது என்பது எனக்கும் புரியவில்லை. நான் பதற்றமாக இருந்தது ஒட்டுமொத்தக் குழுவுக்குமே தெரிந்தது. மிகவும் குழப்பமாக இருந்தது. நான் வசனங்களை மறந்துவிட்டேன் என்று சத்தம் போட்டார். ஆனால் நான் வசனங்களை மறக்கவில்லை. பதற்றம்தான். அப்போது அவர் அதை எதிர்பார்த்திருந்தார். 'உன் முதல் ஐந்து படங்கள் வரை நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றக் கூடாது. ஏனென்றால் அது உனக்கு அதிக அழுத்தத்தைத் தரும்' என்றார். அவர் சொன்னது இப்போது எனக்குப் புரிகிறது" என்றார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x