

'ஹேராம்' பேசிய அச்சங்கள், எச்சரிக்கைகள் உண்மையாகி வருவதில் வருத்தமே என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
2000-ம் ஆண்டு கமல் இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான படம் 'ஹேராம்'. இதில் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, நஸ்ரூதின் ஷா, வசுந்தரா தாஸ், ஓம் பூரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால், இப்போது 'ஹேராம்' படத்துக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக 'ஹேராம்' படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் பலரும் கலந்துகொண்டு கமலுடன் கலந்துரையாடினார்கள்.
இதனிடையே, இன்று (பிப்ரவரி 18) 'ஹேராம்' வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காகப் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பதிவில் "'ஹேராம்' வெளியாகி 20 வருடங்கள். அதைச் சரியான நேரத்தில் நாங்கள் எடுத்தோம் என்பதில் மகிழ்ச்சி.
அந்தத் திரைப்படம் பேசிய அச்சங்களும், எச்சரிக்கைகளும் உண்மையாகி வருவதில் வருத்தமே. நமது தேசத்தின் நல்லிணக்கத்துக்காக இந்தச் சவால்களை வெல்ல வேண்டும். நாம் வெல்வோம். நாளை நமதே" என்று தெரிவித்துள்ளார் கமல்.
தவறவிடாதீர்!