

ஒரு பெண்ணின் பர்ஸை திருடும் பிக்பாக்கெட், அதற்குள் அரசாங்கத்துக்கு எதிரான ரகசிய ஆவணம் இருப்பதால், துரத்தப்படும் ஆபத்துகளிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே ‘பிக் அப் ஆன் சவுத் ஸ்ட்ரீட்’ (PICK UP ON SOUTH STREET - 1953) படத்தின் ஒரு வரி கதை.
நியூயார்க் சுரங்கப்பாதையில் அதிவேகமாகச் செல்லும் ரயிலில் பயணிக்கும் கேண்டி என்ற இளம்பெண்ணை ஸாரா என்ற எஃப்பிஐ ஏஜென்ட்டும், மற்றொரு அதிகாரியும் கண்காணித்து வருகின்றனர். கூட்டநெரிசலில் ஸ்கிப் மெக்காய் என்ற திருடன், கேண்டியின் பர்ஸை திருடிவிட்டு இறங்கி விடுகிறான்.
இதைக் கவனித்த ஸாரா அவனைப் பின்தொடர்வதற்குள் ரயில் நகர்ந்து விடுகிறது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் கேண்டி, பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு, தன் முன்னாள் காதலன் ஜோயிக்கு போனில் சொல்கிறாள். அவன் அவளை உடனே வரச் சொல்லி திருடனிடமிருந்து அதை கைப்பற்ற வேண்டும் என்கிறான்.
ஸாரா காவல் நிலையம் சென்று திருடனைப் பற்றிக் கூறுகிறார். கேப்டன் டைகரின் அறிவுரைப்படி, போலீஸ் தகவலாளியான மோ-விடம் விசாரிக்கின்றனர். திருட்டின் நுணுக்கங்களை வைத்து அது ‘ஸ்கிப் மெக்காய்’ என்கிறாள் மோ. ஸ்கிப்பைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்த ஏஜென்ட்டுகள், கேண்டியின் பர்ஸில் அரசாங்க ரகசியங்கள் அடங்கிய ‘மைக்ரோ ஃபிலிம்’ இருந்ததாகவும், அதை யாரிடம் கொடுப்பாள் என அறியவே அவளைப் பின்தொடர்ந்ததாகவும் கூறுகின்றனர்.
ஸ்கிப்பை 3-முறை ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார் கேப்டன் டைகர். அந்த வன்மத்தில் உதவ மறுத்துவிட்டுக் கிளம்புகிறான் ஸ்கிப். மோ மூலம் விலாசம் தெரிந்து, வீட்டைச் சோதனையிடும் கேண்டியை, ஸ்கிப் தாக்குகிறான். தன்னிடம் திருடியது தன் சகோதரரின் குடும்பப் புகைப்படங்கள் என அவள் பொய் சொல்ல, அவளை முத்தமிட்டு அனுப்பி வைக்கும் ஸ்கிப், ‘மைக்ரோ ஃபிலிமை’ வைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்பதை புரிந்துகொள்கிறான்.
ஜோயி, கேண்டியிடம் 500 டாலர்கள் கொடுத்து அதை வாங்கி வரச் சொல்கிறான். மீண்டும் ஸ்கிப்பிடம் வரும் கேண்டி “பல ஆண்களை முத்தமிட்டிருந்தாலும் இப்படி நான் உணர்ந்ததே இல்லை” என உருகு கிறாள். அவளது ரொமான்சில் மயங்காத ஸ்கிப், ஃபிலிமுக்கு 25 ஆயிரம் டாலர் கேட்கிறான்.
ஆத்திரமடையும் ஜோயியின் கூட்டாளிகள் ஸ்கிப்பைக் கொல்ல திட்டமிடுகின்றனர். கேண்டி மூலம் இதை அறிந்த மோ, ஸ்கிப்பை எச்சரித்து, “அந்தப் பெண் உனக்காகப் பெரிய ஆபத்தை ஏற்றுள்ளாள். அவள் உன்னை உண்மையாகவே நேசிக்கிறாள்” என்று கூறிவிட்டுச் செல்கிறாள்.
மோவின் டைரி விலாசத்தின் மூலம் போலீஸார் ஸ்கிப்பைக் கைது செய்கின்றனர். இருந்தும் அவனைக் கண்காணிக்கும் அதிகாரியால் நிரபராதி என விடுவிக்கப்படுகிறான். ஸ்கிப் மறைத்து வைத்திருந்த ஃபிலிமை அவனைத் தாக்கிப் பறித்துச் செல்கிறாள் கேண்டி. ஸாராவிடம் ஃபிலிமைக் கொடுத்து,
ஸ்கிப் திருந்திவிட்டதாகக் கூறுகிறாள். அவர்கள் கூறும் திட்டப்படி அதை ஜோயியிடம் கொடுக்கிறாள். ஆனால், ஒரு ‘ஃபிரேம்’ விடுபட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடையும் ஜோயி, கேண்டியைச் சுட்டுவிட்டு ஸ்கிப்பைத் தேடிக் கிளம்புகிறான்.
மருத்துவமனையில் கேண்டியைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறான் ஸ்கிப். ‘ஃபிரேம்’ வைத்திருக்கும் ஸ்கிப்பிடம், ‘ஜோயியை நீயே தேடிக் கண்டுபிடி. உன்னை வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்’ என போலீஸார் கூறுகின்றனர். ரயிலில் செல்லும் ஜோயியைப் பின்தொடரும் ஸ்கிப், அவனது துப்பாக்கியை திருடுகிறான். ரயில் நிலையக் கழிப்பறையில் ஜோயி ‘ஃபிலிமை’ கைமாற்ற முயலும்போது, அவனுடன் கடுமையாக மோதி ரயில்வே ட்ராக்கில் அடித்து வீழ்த்துகிறான்.
இறுதியாகக் காவல் நிலையத்தில் தன் விடுவிப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு கேண்டியுடன் கைகோர்த்துப் புறப்படுகிறான் ஸ்கிப். “30 நாட்களில் மீண்டும் திருடி மாட்டுவாய்” என டைகர் கூற, “பந்தயம் கட்டுகிறாயா?“என கேண்டி புன்னகையுடன் சவால் விடுவதோடு படம் நிறைவடைகிறது.
1950-களின் அமெரிக்க பனிப்போர், கம்யூனிஸ்ட்டுகளின் ஊடுருவல் என அச்சமும் அரசியல் பதற்றமும் நிறைந்த காலகட்டம். இத்தகைய சூழலில் தேசப் பாதுகாப்பு களத்தை விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையோடு இணைத்து ட்வைட் டெய்லர் எழுதிய மூலக்கதையின் அடிப்படையில் உருவான படம் இது.
ஒரு பிக்பாக்கெட் திருடனின் சாதாரண கைவரிசை, எப்படி சர்வதேச உளவுச் சதியாகப் பரிணமிக்கிறது என்பதைத் தனது விறுவிறுப்பான திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சாமுவேல் ஃபுல்லர். தேசப்பற்றைவிட மனிதர்களின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை மையப்படுத்தி, விறுவிறுப்பான ஆடுபுலி ஆட்டத்தை நம் கண்முன்னே காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவு (ஜோ மெக்டொனால்டு): நியூயார்க் நகரத்தின் இருண்ட குற்றவுலகத்தை தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தியுள்ளார். நாயகன் தங்கியிருக்கும் தனிமையான படகு வீடு, மங்கலான விளக்கொளியில் நடக்கும் சண்டைகள் அனைத்தையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பு (நிக் டி மேஜியோ): ரயில் திருட்டு மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் இவரது துரிதமான ‘கட்ஸ்’ பார்வையாளர்களைப் பதற்றத்துக்கு கொண்டு செல்கின்றன.
இசை (லீ ஹார்லைன்): க்ரைம் த்ரில்லருக்குத் தேவையான திகிலூட்டும் இசையுடன், கதாபாத்திரங்களின் தனிமையையும் வலிகளையும் உணர்த்தும் சோகமான மெல்லிசையையும் பதிவு செய்துள்ளார்.
ஸ்கிப் மெக்காய் (ரிச்சர்ட் விட்மார்க்): உடல் மொழி, கிண்டலான பார்வை மற்றும் கடினமான பேச்சால் ‘ஆன்டி-ஹீரோ’ பாத்திரத்தை மறக்க முடியாத வகையில் ஏற்று நடித்திருக்கிறார்.
கேண்டி (ஜீன் பீட்டர்ஸ்): தேசத்துரோகச் சதியில் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படும் கதாபாத்திரத்தில் ஏமாற்றத்தின் வலியையும் உண்மையான காதலையும் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளார். பல இடங்களில் அவர் வாங்கும் அடிகள் நமக்கு வலிக்கின்றன.
மோ (தெல்மா ரிட்டர்): தகவல் சொல்லும் வயதான பெண்மணியாக தனது அசாத்திய நடிப்பால் வாழ்ந்திருக்கிறார். எப்போதும் கிண்டலாகப் பேசும் அவர், துப்பாக்கியை நீட்டும்போதும் காட்டிக் கொடுக்காமல் செய்யும் உயிர்த்தியாகம் பார்வையாளர்களைக் கலங்க வைக்கிறது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
சமூகத்தில் ‘கண்ணியமானவர்கள்’ எனப் போற்றப்படுபவர்கள் தேசத்துரோகிகளாகவும், சுயநலவாதியான ஒரு திருடன் எதிர்பாராத தருணத்தில் மனிதம் மிக்கவனாகவும் மாறும் முரண்பாடுதான் இந்தப் படத்தின் ஆன்மா. கறுப்பு-வெள்ளை திரையில், மனித மனங்களின் பேராசையையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் எந்தப் பூச்சும் இல்லாமல் அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறது இப்படம்.
சாதாரணமான சிறு சம்பவம் எப்படி முழு திரைப்படத்துக்கான கதவாக மாற முடியும் என்பதை 80 நிமிடங்களில் அற்புதமான திரைக்கதை வகுப்பு எடுக்கும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்!
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)