

தவறான தொலைபேசி இணைப்பில் கேட்கும் ஒரு கொலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கும் பெண், அந்தக் கொலையின் இலக்கு, தான்தான் என்பதை உணர்ந்து தப்பிக்கப் போராடுவதே ‘ஸாரி, ராங் நம்பர்’ (SORRY, WRONG NUMBER-1948) படத்தின் ஒருவரி கதை.
இரவு நேரம். காட்டரல் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஹென்றி ஸ்டீவன்சனின் அலுவலக அறைக்குள் டெலிஃபோன் ரிசீவர் ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து காட்சி பின்னோக்கி நகர, அந்த மருந்து கம்பெனி அதிபர் ஜே.பி.காட்டரலின் மகளான லியோனா, படுக்கையறையில் இருந்தபடி வீடு திரும்பாத கணவன் ஹென்றியைத் தொடர்புகொள்ள டயல் செய்கிறாள்.
அப்போது எதிர்பாராதவிதமாகத் தொலைபேசி இணைப்பில் ஒரு குறுக்கு உரையாடல் (Cross-talk) ஒலிக்கிறது. சரியாக இரவு 11:15 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள பாலத்தில் ரயில் கடக்கும் இரைச்சலைப் பயன்படுத்தி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு நகைகளைத் திருடிச் செல்ல வேண்டும் என்று ‘ஜார்ஜ்’ ன்ற நபருக்கு ஒரு மர்மக் குரல் கட்டளையிடுகிறது. பதறும் லியோனா, ஆபரேட்டரையும் காவல் நிலையத்தையும் அழைக்கிறாள். ஆனால், அதிகாரி டஃபி அதை வானொலி நாடகமாக இருக்கலாம் என அலட்சியப்படுத்துகிறார்.
கணவனின் அலுவலகச் செயலாளர் எலிசபெத்துக்கு போன் செய்து விசாரிக்கும்போது, காலையில் ‘மிசஸ் பிரடெரிக் லார்ட்’ என்ற பெண் ஹென்றியைச் சந்திக்க வந்ததாகச் சொல்கிறாள். அந்தப் பெண் வேறு யாருமல்ல; ஹென்றியின் பழைய காதலியான சாலி. பல ஆண்டுகளுக்கு முன் சாலியுடன் நடனமாடிய ஹென்றியைப் பணபலத்தாலும் பிடிவாதத்தாலும் கவர்ந்திழுத்துத் திருமணம் செய்தவள் லியோனா.
இப்போது சாலிக்கு போன் செய்கிறாள் லியோனா. அவள், தன் கணவர் ஹென்றியின் மீது சந்தேகம் கொண்டிருப்பதை அறிந்து அதை எச்சரிக்கவே அவரைப் பார்க்கச் சென்றதாகச் சொல்கிறாள். டுத்து வரும் ஒரு தந்தியில், ஹென்றி போஸ்டன் மருந்து மாநாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் ஞாயிறுதான் வருவதாகவும் செய்தி அனுப்பியிருக்கிறான். தொடர் தொலைபேசி அழைப்புகளின் மூலம் நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்க்கும் லியோனா, பாலத்தின் அருகே உள்ள தனித்த வீட்டில் 11:15 மணிக்குக் கொல்லப்படப்போகும் பெண், தான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறாள்.
மருத்துவர் பிலிப் அலெக்சாண்டரை போனில் அழைக்கிறாள். அவர், லியோனாவுக்கு இதயக் கோளாறில்லை; இதை ஏற்கெனவே ஹென்றியிடம் தெரிவித்துவிட்டதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் லியோனா “பொய்யர்கள்” எனக் கதறி அழுகிறாள். ப்போது வால்டோ எவான்ஸ் என்பவன் போனில், லியோனாவிடம் உண்மையை சொல்கிறான். காட்டரல் கம்பெனி வேதியியலாளரான தனது பலவீனத்தைப் பயன்படுத்தி மடக்கிய ஹென்றி, மருந்துகளைத் திருடி மாஃபியா தலைவன் மொரானோவிடம் விற்று வந்திருக்கிறான்.
பிறகு மொரானோவை ஏமாற்றித் தனியாகத் தொழில் செய்தபோது, அதைக் கண்டறிந்த மொரானோ நஷ்ட ஈடாக, 2 லட்சம் டாலர் கேட்டு ஹென்றியை மிரட்டினான். மனைவி இறந்துவிடுவாள், அவளது இன்சூரன்ஸ் பணத்தில் கடனை அடைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்ட ஹென்றி, டாக்டர் கூறிய உண்மையால் லியோனா சாக மாட்டாள் என்பதை அறிந்து அவளைக் கொல்ல வாடகை ஆட்களை ஏவினான். இப்போது மொரானோ பிடிபட்டுவிட்டதால் அந்தப் பணத்துக்குத் தேவையில்லை என்ற தகவலைச் சொல்லிவிட்டு எவான்ஸ் போனை வைக்கிறான். கணவனே தீட்டிய கொலைத் திட்டம் கண்டு, லியோனா மரண பயத்தில் உறைகிறாள்.
நேரம் 11:10. வீட்டின் கீழ்த்தளத்தில் யாரோ டெலிஃபோன் ரிசீவரைத் தூக்கும் ‘கிளிக்’ ஒலி கேட்கிறது; கொலையாளி உள்ளே நுழைந்துவிட்டான். அப்போது ரயில் நிலையத்திலிருந்து ஹென்றியின் அவசர அழைப்பு வருகிறது. கொலையைத் தடுக்கும் முனைப்புடன் அவன், “லியோனா... இன்னும் 3 நிமிடங்கள்தான் உள்ளன. படுக்கையை விட்டு எழுந்து ஜன்னல் வழியே கத்து!” எனக் கதறுகிறான்.
ஆனால், பயத்தால் கால்கள் மரத்துப்போன லியோனாவால் எழ முடியவில்லை. மாடிப்படிகளில் காலடிச் சத்தம் கேட்க, அறைக் கதவு திறந்து ஒரு கரிய நிழல் படுக்கையை நோக்கிப் படர்கிறது. பாலத்தின் மீது ரயில் இடிமுழக்கத்துடன் கடக்க, லியோனாவின் மரண ஓலம் அந்த இரைச்சலில் மூழ்கிப் போகிறது.
பயத்துடன் ஹென்றி மறுபடி டயல் பண்ணுகிறான். கொலையாளி ரிசீவரை எடுத்து மிக அமைதியான குரலில் பேசுகிறான்:
“Sorry, wrong number.” தான் எழுதிய 22 நிமிட வானொலி நாடகத்தை, அதன் சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி உள்ளார் எழுத்தாளர் லூசில் ஃபிளெட்சர். அந்தக் கதையை ஒற்றைப் படுக்கையறையை மையக்களமாகக் கொண்டு, அடுக்கடுக்கான ‘நெஸ்டட் ஃபிளாஷ்பேக்’ உத்தியுடன் முழுப் படத்தையும் திகில் அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் அனடோல் லிட்வாக்.
ஒளிப்பதிவு (சால் போலிட்டோ): படுக்கையறைக்குள் அலைபாயும் கேமராவும், ஃபிலிம் நோயர் பாணி அடர்ந்த நிழல்களும் தொடர் பதற்றத்தை உருவாக்குகின்றன. இருண்ட நடைபாதைகள், ஜன்னல் திரைகள் வழியே வீட்டின் பயங்கரத் தனிமையையும் லியோனாவின் தவிப்பையும் நேர்த்தியாகக் கடத்தியுள்ளார்.
படத்தொகுப்பு (வாரன் லோ): தொலைபேசிக் குரலின் பின்னணியில் ஃபிளாஷ்பேக்குகளையும் நிகழ்காலத்தையும் இணைத்து, 11:15 மணி நெருங்க நெருங்கக் காட்சிகளின் வேகத்தைக் கூட்டிப் பதற்றத்தை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இசை (ஃபிரான்ஸ் வாக்ஸ்மேன்): தொலைபேசி மணி, ரயில் இரைச்சல், மாடிப்படி காலடிச் சத்தத்துடன் பின்னணி இசையை மிகக் கச்சிதமாகக் கோர்த்துள்ளார்.
பார்பரா ஸ்டான்விக் (லியோனா): பணக்காரத் திமிரோடு பிறரை ஆதிக்கம் செய்யும் பெண்ணாகவும், படுக்கையில் முடங்கும் நோயாளியாகவும் இருவேறு பரிமாணங் களில் அசத்தியுள்ளார். கொலைத் திட்டம் தனக்கானதுதான் என்பதை உணரும் தருணத்தில் மரண பயத்தை வெறும் முகபாவனைகளாலும் மூச்சிரைப்பாலும் வெளிப்படுத்தும் இவரது அசாத்திய நடிப்பு ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.
பர்ட் லான்காஸ்டர் (ஹென்றி): வறுமையிலிருந்து மீளப் பணக்கார மனைவியின் வலையில் விழுந்து, கடனில் சிக்கி மனைவியையே கொல்லத் துணிவதும், பின் அவளைக் காப்பாற்றத் துடிக்கும் கழிவிரக்கப் பதற்றமும் வெளிப்படும் இவரது நடிப்பு, மிகச் சிக்கலான எதிர்மறைக் கதாபாத்திரத்தை இயல்பாகப் பிரதிபலிக்கிறது.
இவர்களுடன், தொடக்கம் முதல் இறுதிவரை தகவல் தொடர்புச் சாதனமான தொலைபேசியும் உயிரோட்டமுள்ள முக்கியக் கதாபாத்திரமாகப் பயணித்து பயமுறுத்துகிறது. ‘திருமணம் என்பது எப்போதும் பாதுகாப்பான புகலிடம் அல்ல; சில நேரங்களில் அது அழிவின் தொடக்கமாகவும் மாறக்கூடும்’ எனும் கருத்தை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அதன் திரைக்கதை அமைப்பு ஆரம்பத்தில் சில விவாதங்களை எழுப்பினாலும், விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
ஒரு படுக்கையையும் ஒரு தொலைபேசியையும் மட்டுமே வைத்துக்கொண்டு, 89 நிமிடங்கள் பார்வையாளர்களைப் பதற்றத்தின் உச்சத்தில் வைத்திருக்கும் இந்த ‘ராங் நம்பரை’, கைபேசியை அணைத்துவிட்டு ரசிக்கலாம்!
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)