Last Updated : 20 Oct, 2015 06:29 PM

 

Published : 20 Oct 2015 06:29 PM
Last Updated : 20 Oct 2015 06:29 PM

ஹாலிவுட் அற்புதம்: அக்.21,2015 - இந்த நாள் ஞாபகம் அன்றே வந்ததே!

கால இயந்திரத்தில் பயணிப்பது குறித்து பல கதைகளை நாம் பார்த்தும், படித்தும் உள்ளோம். விஞ்ஞானப் புனை கதைகள் (Science Fiction) பலவற்றில் இந்த கால இயந்திரப் பயணம் கதைக்களமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

'பேக் டு தி ஃபியூச்சர்' (Back to the Future) - 1985-ஆம் ஆண்டு வந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் நகைச்சுவைத் திரைப்படம். இதன் நகைச்சுவையே கால இயந்திரப் பயணத்தை வைத்துதான். ராபர்ட் ஸெமிக்கிஸ் (Forrest gump, Cast Away, The Walk) இயக்கிய இந்தப் படம் ஹாலிவுட் சினிமாக்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. புதிய திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் ஆர்வமுடைய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது கொசுறு செய்தி.

நாயகன் மார்டி, விஞ்ஞானி டாக் ப்ரவுனை சந்திக்கிறான். தான் ஒரு கால இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், அது எப்படி வேலை செய்கிறது என்பதை காண்பிக்கிறேன் என்றும் ப்ரவுன், மார்டிக்கு உத்தரவாதம் தருகிறான். பரிசோதிக்கும் தருணத்தில், ப்ரவுன் தீவிரவாதிகளால் சுடப்படுகிறான். இயந்திரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் மார்டி விபரீதமாக 1955-ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி பயணிக்கிறான். அவன் எப்படி மீண்டும் நிகழ் காலத்துக்கு வருகிறான், ப்ரவுனுக்கு என்ன ஆனது என்பதே 'பேக் டு தி ஃபியூச்சர்' படத்தின் கதை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியால், மேலும் இரண்டு பாகங்கள் வெளியாயின. படத்தை ஒட்டிய வீடியோ கேம்களும், தீம் பார்க் ராட்டினங்களும், அனிமேஷன் தொடரும் உருவாகின.

இதில், பேக் டு தி ஃபியூச்சர் 2-ம் பாகத்தில், பிரதான பாத்திரங்கள் எதிர்காலத்துக்கு பயணிப்பார்கள். அவர்கள் பயணிக்கும் நாள் அக்டோபர் 21, 2015. தேதி உங்களுக்கு நெருக்கமாகத் தோன்றினால், உங்கள் கேலண்டரை எடுத்துப் பாருங்கள். அது நாளைய தேதி தான்.

அன்று அந்தப் படத்தில் 2015-ல் உலகம் எப்படி இருக்கும் என பல விதங்களில் கற்பனைகளுக்கு உருவம் தந்திருப்பார்கள். பறக்கும் வாகனங்கள், வீணான பொருட்கள் மூலம் காருக்கு எரிவாயு, வயது தெரியாமல் இருக்க மேக்கப் என பல விந்தைகளை இயக்குநர் ஸெமிக்கிஸ் திரையில் கொண்டு வந்திருப்பார். அன்று சினிமாவுக்கே புதிதான பரிமாணத்தை தந்த இந்தப் படம், பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று சொன்னால் அது இந்த படத்துக்கான குறைந்தபட்ச பாராட்டே.

அன்று சொல்லப்பட்டவைகளில் இன்னும் பல கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும், சில கற்பனைகள் கிட்டத்தட்ட நிஜமாகியுள்ளன.

வயது தெரியாமல் இருக்க விசேஷ மேக்கப் இல்லையென்றாலும் போடாக்ஸ் போன்ற மருந்துகள் வந்துள்ளன.படத்தில் வாடகை காருக்கான கட்டணத்தை விரல் ரேகையை பதித்து கட்டுவார்கள். இன்று பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தை பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதே போல படத்தில், கதவுகள் திறக்க விரல் ரேகையை பயன்படுத்துவார்கள். இன்றும் அதே போல் பல கார்ப்பரேட் கம்பனிகளில் கதவுகள் திறக்க ஊழியர்களின் விரல் ரேகை தேவைப்படுகிறது.

ஹாலோக்ராம் தொழில்நுட்பத்தில் பெரிய திரைகள், படத்தில் இருக்கும் கற்பனைகளில் ஒன்று, இன்று சினிமா தத்ரூபமாகத் தெரிய ஐமேக்ஸ் 3டி போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

டிவிக்கள் மூலம் முகம் பார்த்து பேசுவதைப் போல இன்று வீடியோ காலிங் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

படத்தில் ஒரு காட்சியில் பெரிய சிடிக்கள் குப்பையைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும். இன்று நமது வீட்டு குப்பைகளில் அவ்வப்போது சிடிக்களும் இடம்பெறுகின்றன.

இப்படி பல முன்மாதிரிகளை அன்றே காட்டிய 'பேக் டு தி ஃபியூச்சர்' அமெரிக்காவின் கலாச்சார அடையாளமாகவே மாறிப் போனதில் ஆச்சரியமில்லை.

கால இயந்திர பயணத்தை சொன்ன படம், காலம் கடந்தும் மக்கள் மனதில் நின்றுக் கொண்டிருப்பதற்கு சான்றாக, இந்தப் படத்தில் கற்பனையில் உருவாக்கியிருந்த நிலை இன்று நடப்பில் இருக்கிறதா? எவ்வெவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். எவையெல்லாம் எதிர்பார்ப்பைத் தாண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குறித்துப் பேச, அறிவியல் புனைவுப் படங்களின் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள நாளை (21/10/2015) Back to the Future படங்களின் திரையிடலுக்கும், கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப் படைப்பாளிகள் பலரும் அழைக்கப்படுள்ளனர்.

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

நாள்: மார்ட்டி மற்றும் ப்ரவுன் கடந்த காலத்திலிருந்து வந்து சேரவுள்ள அதே அக்டோபர் 21, 2015

நேரம்: இந்திய நேரப்படி காலை 11 மணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x