Published : 06 Feb 2023 08:04 PM
Last Updated : 06 Feb 2023 08:04 PM

“என் பெயருடன் சாதியைச் சேர்த்துகொள்ள விரும்பவில்லை” - சம்யுக்தா

“தயவுசெய்து சம்யுக்தா மட்டும் என்னை அழையுங்கள். எந்த ஒரு சாதிப் பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை” என ‘வாத்தி’ பட நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

தனுஷின் ‘வாத்தி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை சம்யுக்தா, “தயவுசெய்து சம்யுக்தா என்ற பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்து என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு சாதி பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சம்யுக்தா என்றுதான் ‘வாத்தி’ பட டைட்டில் கார்டில் கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்து விட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம் தானே. வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது

எனது இளமைக் காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். குறிப்பாக சின்ன வயதில் முஸ்தபா முஸ்தபா பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன்பிறகு தமிழ் பாடல்களை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியை போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளை கேட்டதில்லை.

சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளை கொண்டது தமிழ் மட்டும்தான். மலையாளத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியும் எனக்கு தெரியும். படப்பிடிப்பின்போது எனது கதாபாத்திரத்திற்காக முதலில் தமிழ் வசனங்களை பேசுவதற்காக தயாராகி, அந்தக் காட்சி படமாக்கி முடிந்ததும் தெலுங்கு வசனங்களுக்காக மீண்டும் என்னை தயார்படுத்திக் கொள்வேன்.

தனுஷ் போன்ற மிகச் சிறந்த நடிகருடன் நடிக்கும்போது கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்தது. காரணம் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்பவர். என்னால் அவருக்கு எதுவும் தொந்தரவு வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படியே மீறி சில தவறுகள் வந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார் தனுஷ்.

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒருசில படங்களில் நடித்தேன். அப்போது அந்தப் படங்களில் நடிப்பது குறித்து நான் எடுத்தது குழந்தைத்தனமான முடிவு. மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழுக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அது இந்த வாத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x