Last Updated : 04 Aug, 2022 06:25 PM

 

Published : 04 Aug 2022 06:25 PM
Last Updated : 04 Aug 2022 06:25 PM

எண்ணித் துணிக Movie Review - தலைப்பு... படத்துக்கு மட்டுமா, பார்வையாளருக்குமா?

விலையுயர்ந்த பொருளுக்கான போராட்டத்தில் நடக்கும் இழப்புகளும், பழிவாங்கலும், துரோகங்களுமே 'எண்ணித் துணிக' படத்தின் ஒன்லைன்.

சென்னையில் உள்ள அமைச்சர் ஒருவரின் நகைக்கடைக்குள் நுழையும் கொள்ளைக் கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்துச் செல்கிறது. அப்போது எதிர்வரும் சிலர் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதில் படத்தின் நாயகனும் பாதிக்கப்படுகிறார். அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்பதை காவல் துறை உதவியில்லாமல் படத்தின் நாயகன் துணிந்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் 'எண்ணித் துணிக' படத்தின் திரைக்கதை.

படம் தொடங்கும்போது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் காட்சி காட்டப்படுகிறது. அதையடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு தான் கதைக்களமான சென்னைக்கே கேமரா வருகிறது. அந்த முதல் காட்சிக்கான நியாயத்தை படம் முடிந்த பின்பும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒட்டுமொத்தமாக அந்தக் காட்சியை தூக்கியிருந்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. சொல்லப்போனால், அது படத்துக்கு நன்மையே பயக்கும். படத்தின் முதல் பாதியை எடுத்துக்கொண்டால், நகைகளை கொள்ளையடிக்கும் காட்சி விறுவிறுப்புடனே கடக்கிறது.

ஏதோ சொல்ல வருகிறார்கள் என ஆர்வத்தோட அமர்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு காதல் காட்சி என கூறி வரும் ஃப்ளாஷ்பேக் சோதனை. அதையொட்டி நீளும் காதல் பாடலும், சில காமெடிகளும் வேதனை. இதெல்லாம் முடிந்து படத்தின் மையக்கருவை நோக்கி படம் நகரும்போது சுவாரஸ்யமில்லாத விசாரணைக் காட்சிகளால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு படத்தின் திரைக்கதை வேகமெடுக்க தொடங்குகிறது. முதல் பாதியை ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி சற்று ஆறுதல்.

ஜெய் தனது வழக்கமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. அந்த கதாபாத்திரத்தை இன்னும் எழுத்தில் மேம்படுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது. அதுல்யா காதல் காட்சிகளுக்காகவும், டூயட் பாடலுக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

வித்யா பிரதீப் தேர்ந்த நடிப்பையும், அஞ்சலி நாயர் பெரும்பாலும் க்ளிசரீன் உதவியுடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சுனில் ஷெட்டி கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். வில்லத்தனம் கலந்த நகைச்சுவையான நடிப்பில் இறுதியில் அவர் ஈர்க்கிறார். அதை முதல் பாதியிலிருந்தே எழுதியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

'ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா?' என்ற வசனம் இன்னும் தமிழ் சினிமாவில் உருண்டுக்கொண்டுதான் இருக்கிறது. கதையோட்டத்திற்கும், காட்சிக்கும் எந்தவித பலமும் சேர்க்காத பிற்போக்குத்தனமான இதுபோன்ற வசனங்களை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் தூக்கிபிடிக்க போகிறார்கள்?!. போலவே, படத்தில் வசனங்களும் அழுத்தமில்லாமல், சுமாராக எழுதப்பட்டிருக்கிறது. சாம்சுரேஷூடன் இணைந்து எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி செல்வன்.

சாம் சி.எஸ் இசை பிண்ணனியில் ஓகே என்றாலும், பாடலில் பலம் சேர்க்கவில்லை. குர்டிஸ் ஆண்டன் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. ஒரு நல்ல ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாகவோ, அல்லது ஆக்‌ஷன் நகைச்சுவை கலந்த படமாவோ வந்திருக்க வேண்டியதற்கான அத்தனை ஸ்பேஸும் படத்தில் இருக்கிறது. ஆனால்...?!

மொத்தத்தில், 'எண்ணித் துணிக' என தொடங்கும் வள்ளுவரின் குறளை ஒருமுறை வாசித்துவிட்டு படத்திற்கு வரலாம் என்பதை குறியீடு மூலம் உணர்த்துகிறது படத்தின் டைட்டில்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x