Published : 06 Feb 2022 02:30 PM
Last Updated : 06 Feb 2022 02:30 PM

‘மாநாடு’ படத்துக்கே இந்த நிலை... எப்படி தொழில் செய்ய?- தயாரிப்பாளர் காட்டம்

ஒரு வெற்றிப் படத்துக்கே இந்த நிலையா என்று ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். இது, திரைப்பட விநியோகஸ்தர்களால் தமிழ் சினிமாவுக்கு ஏற்படும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழக உரிமையை சுப்பையா கைப்பற்றி வெளியிட்டார்.

‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதுதான் சிம்புவின் கம்பேக் திரைப்படம் என பலரும் குறிப்பிட்டார்கள்.

இந்தப் படம் இன்று (பிப்ரவரி 6) 75-வது நாளைக் கொண்டாடுகிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை சிலம்பரசன் ரசிகர்கள் சென்னையில் உள்ள கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பாளர் நேற்றுடன் நிறுத்திக்கொண்டார். ஆகையால் நாளை ‘மாநாடு’ படத்துக்கு பதிலாக ‘மன்மதன்’ திரையிடப்படும் என்று திரையரங்க நிர்வாகத்தினர் சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இதற்கு என்ன காரணம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால், சில மணித்துளிகளில் திட்டமிட்டபடி ‘மாநாடு’ திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘மாநாடு’ படம் வெளியாகி 75 நாட்கள் ஆன நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவின் மூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள சிறிய கடிதம்: “இன்று 75வது நாள் ‘மாநாடு’. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைன்னா... மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??! நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க...” என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் மீண்டும் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் இடையே ஆன சர்ச்சை வெடிக்கும் என கோலிவுட்டில் அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x