Published : 16 Sep 2014 08:12 PM
Last Updated : 16 Sep 2014 08:12 PM

லவ் ஜிகாத் பற்றி தெரியாதா?- ராஜ்நாத் சிங் பதிலுக்கு திக்விஜய் சிங் காட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'லவ் ஜிகாத்' என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறுவது நம்பக்கூடியதாக இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'லவ் ஜிகாத்' குறித்து கருத்து கேட்ட செய்தியாளர் ஒருவருக்கு அவர் அளித்த பதிலில், " 'லவ் ஜிகாத்' என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. இது குறித்து நான் எப்படி விளக்கம் அளிக்க முடியும்" என்று கூறினார்.

உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பாஜக எம்.பி ஆதித்யாநாத், லஷ்மிகாந்த் பாஜ்பாயி உள்ளிட்டோர் 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி திருமணம் செய்து, தங்களது மதத்திற்கு மாற்றும் முயற்சியை செய்வதாகவும், இதனால் இந்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த 'லவ் ஜிகாத்' பிரச்சாரத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலர், இந்து பெண்கள் மத்தியில் 'லவ் ஜிகாத்' விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அப்படி என்றால் என்னவென்று தெரியாது என மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் கூறியது குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில், ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான திக்விஜய் சிங் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 'லவ் ஜிகாத்' குறித்து தெரியவில்லை என்றால், அது நம்பக்கூடியதாக இல்லை.

அவர் இப்போதெல்லாம் 'பஞ்சான்யா' மற்றும் 'ஆர்கனைசர்' போன்ற ஆர்.எஸ்.எஸ் வெளியீடுகளை படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், அதில் தினம்தினம் 'லவ் ஜிகாத்' குறித்த கட்டுரைகள் தான் வெளியாகின்றன. தேர்தல் நேரத்தில் 'லவ் ஜிகாத்' பிரச்சாரம் செய்ததற்காக, உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையம் பாஜக எம்.பி. ஆதித்யாநாத் மீது வழக்கு கூட பதிவு செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கைகளை பின்தொடர்பவர்கள் தான் பாஜக உறுப்பினர்கள். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். இரண்டு கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் 'லவ் ஜிகாத்' குறித்து தான் முழுக்க முழுக்க பேசினர்.

இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கலவரங்கள் கூட ஏற்படுகின்றன. இதனை தடுக்க உள்துறை அமைச்சராக உள்ள நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மையின மக்களுக்கும் பெறும்பான்மையினருக்கும் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக செயல்படுவோருக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் இனவாத நல்லிணக்கம் என்றுமே நிறைவேறாது" என்று திக்விஜய் சிங் தனது குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x