சீனா Vs அமெரிக்கா: காங்கோ ‘கனிம யுத்தம்’ பின்னணி என்ன?

சீனா Vs அமெரிக்கா: காங்கோ ‘கனிம யுத்தம்’ பின்னணி என்ன?
Updated on
3 min read

‘உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலும், சாலையில் மிடுக்காகச் சீறிப் பாயும் பேட்டரி கார்களிலும் ஆப்பிரிக்கக் காடுகளின், அங்குள்ள மக்களின் ரத்தம் படிந்திருக்கிறது’ என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், நமது அன்றாட நவீனத் தொழில்நுட்பத்தின் ‘இதயம்’, காங்கோ என்ற மத்திய ஆப்பிரிக்க ஏழை நாட்டின் நிலத்தடி ஆழத்தில்தான் துடித்துக் கொண்டிருக்கிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டாவது பெரிய நாடான காங்கோ, ஏறக்குறைய 24 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமப் புதையலைத் தனக்குள் கொண்டுள்ளது. இதனாலேயே, இது உலகப் பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய ‘பனிப்போரின்’ களமாக மாறியுள்ளது.

உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் காங்கோவும் ஒன்று. ஆனால், நவீன உலகுக்குத் தேவையான கோபால்ட், லித்தியம், டான்டலம், செம்பு ஆகிய அத்தியாவசிய கனிம உற்பத்தியில் 70 சதவீதத்தை வைத்து சாம்ராஜ்யம் நடத்துகிறது. இது வெறும் கனிமங்களை வெட்டியெடுக்கும் கதையல்ல. 21-ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார ஆதிக்கத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் நிழல் யுத்தம். 

காங்கோ நாடு எப்படிப்பட்டது?

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு காங்கோ குடியரசு (DRC). ஆப்ரிக்காவில் 2-வது பெரிய நாடு என்று பெயர் எடுத்திருந்தாலும், இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது. இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், அரசியல் நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பின்மை, வேரூன்றிய ஊழல் மற்றும் மேற்கத்திய நாடுகளின் சுரண்டலால் காங்கோ பெரியளவில் வளர்ச்சியடையவில்லை.

இங்கிருந்து தோண்டி எடுக்கப்படும் கச்சா கனிமங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் சீனாவுக்கே ஏற்றுமதியாகின்றன. உலகளவில் கிடைக்கும் மொத்த கோபால்ட்டில் 70 சதவீதம் காங்கோவில்தான் உள்ளது. இது தவிர செம்பு, கொல்தான், தங்கம், மாங்கனீசு, வைரம், டான்டலம், பிளாட்டினம் ஆகிய கனிமங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. இவ்வளவு இருந்தும், மக்கள் ஆண்டுக்கு வெறும் 800 டாலர் மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்று ஐ.நா.வின் கணக்கெடுப்பு கூறுகின்றது. 

காலனி ஆதிக்கமும் வறுமைக்கான பின்னணியும்

16-ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகள் காங்கோவைக் கண்டுபிடித்த பின், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாக்கி உலகம் முழுவதும் தங்கள் வேலைக்காக கடத்தினர். தொழில் புரட்சியின்போது ரப்பர், முதலாம் உலகப் போரில் தோட்டா உறைகளுக்கான செம்பில் 75 சதவீதம், 2-ம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளுக்கான யுரேனியம் என அனைத்தும் காங்கோவில் இருந்தே சுரண்டப்பட்டன.

1879 முதல் 1959 வரை பெல்ஜியத்தின் ஆட்சியில் காங்கோ இருந்தது. இங்குள்ள யுரேனியத்தைக் கைப்பற்றச் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் இங்கு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தின. பின்வந்த காங்கோ ஆட்சியாளர்களும் கனிமங்களை வெளிநாடுகளுக்கு வாரி வழங்கித் தங்கள் செல்வத்தைப் பெருக்கி, மக்களை வறுமையில் விட்டுவிட்டனர்.

காங்கோவில் மக்கள் வறுமையில் வீழவும், ஆரோக்கியமற்றவர்களாகவும், உரிமையற்றவர்களாகவும், தங்கள் சொந்த நாட்டு வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

சீனாவின் அசைக்க முடியாத ஆதிக்கம்

 பல பத்தாண்டுகளுக்கு முன்பே காங்கோவுக்குள் நுழைந்த சீனா, கோபால்ட், மாங்கனீசு, டான்டலம், தங்கம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கப்பதற்காக தன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறது. காங்கோவில் உள்ள கோபால்ட்டில் 90 சதவீதம், மாங்கனீசில் 80 சதவீதம், செம்பில் 50 சதவீதத்தை சீனா கைப்பற்றியுள்ளது. உலகளவில் இந்தக் கனிமங்களைச் சுத்திகரிக்கும் திறனில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சீனாவிடம் மட்டுமே உள்ளது.

‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் கீழ் காங்கோவுக்கு உள்கட்டமைப்புகளைக் கட்டித் தந்து சுரங்க உரிமைகளை சீனா பெற்றுக்கொண்டது. சீனா ‘மாலிப்டெனம்’ போன்ற நிறுவனங்கள் சுரங்கங்களைக் கைப்பற்றியதால், உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் மேல் சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

மேலும், 140 கோடி டாலர் செலவில் 1,860 கி.மீ. தூரம் 'தாசாரா ரயில்வே' பாதை அமைக்க ஒப்பந்தம் செய்து, தான்சானியாவின் டார் எஸ் சலாம் துறைமுகம் வழியாகக் கனிமங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி ராஜதந்திரம்

சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவும், வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா களமிறங்கியது. அங்கோலாவின் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து காங்கோ, ஜாம்பியா வரை 1,300 கி.மீ. தூரத்துக்கு ‘லோபிட்டோ காரிடர்’ ரயில் பாதை அமைக்க 600 கோடி டாலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. கிழக்குப் பகுதியில் போராடும் ‘எம்23’ ஆயுதக் குழுவை அடக்கவும் காங்கோவுக்கு ஆயுத, ராணுவ ஆதரவு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் காங்கோ - அமெரிக்கா இடையே ‘பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பு’ (REIF) ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் பங்குதாரர்களாக உள்ள ‘கோபோல்ட் மெட்டல்ஸ்’ நிறுவனம் லித்தியத்தையும், ‘விர்டஸ் மினரல்ஸ்’ நிறுவனம் செம்பு மற்றும் கோபால்ட்டையும் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

அமெரிக்கக் கூட்டமைப்பான ‘ஓரியன் சிஎம்சி’, ‘கிளென்கோர்’ நிறுவனத்துடன் இணைந்து 9 பில்லியன் டாலர் மதிப்பில் ‘முட்டாண்டா மைனிங்’ மற்றும் ‘கமோட்டோ காப்பர்’ நிறுவனங்களின் 40 சதவீத பங்குகளை வாங்கிச் சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

காங்கோ சந்திக்கும் சவால்கள்

சீனாவின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் உடனடியாக முறியடிக்க முடியாது என்றாலும், அமெரிக்கா செயல் போட்டியைத் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும் காங்கோ பல சவால்களை எதிர்கொள்கிறது.

இதில், கனிமங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்ற கிழக்குப் பகுதியில் நடக்கும் ஆயுதக் குழுக்களின் தொடர் மோதல்கள் முக்கியமானது.

பாரம்பரிய கைமுறைச் சுரங்கங்களில் சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆபத்தான சூழலில் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் நடக்கும் மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன.

சூழலியல் ஆய்வுகள் இல்லாமல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலம், நீரில் நச்சுக் கழிவுகள் கலக்கிறது; காடுகளை அழிப்பது அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

காங்கோ நிலப்பரப்பில் இரு வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பனிப்போர் வெறும் கனிமங்களை அள்ளுவதற்கான போட்டி மட்டுமல்ல. 21-ம் நூற்றாண்டின் பசுமைப் பொருளாதாரம், பேட்டரி கார் சந்தை மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் ஆதிக்கப் போர். இதில் சீனா முன்னிலை பெற்று இருந்தாலும், அமெரிக்காவின் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் போட்டியை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

சீனா Vs அமெரிக்கா: காங்கோ ‘கனிம யுத்தம்’ பின்னணி என்ன?
‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’ - டிஜிட்டல் கடன் வலையில் சிக்குகிறதா ஜென் ஸீ தலைமுறை?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in