‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’ - டிஜிட்டல் கடன் வலையில் சிக்குகிறதா ஜென் ஸீ தலைமுறை?

‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’ - டிஜிட்டல் கடன் வலையில் சிக்குகிறதா ஜென் ஸீ தலைமுறை?
Updated on
2 min read

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிதித் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சியால் நுகர்வோரின் வாங்கும் பழக்கம் முற்றிலும் மாறியிருக்கிறது. குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜென் ஸீ’ (Gen Z) தலைமுறையில் ஒரு பிரிவினர், கடன் வாங்கியாவது தங்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற பழக்கத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்பெல்லாம் நிலம், வீடு அல்லது தொழில் போன்ற எதிர்கால முதலீட்டுக்காகவே மக்கள் பெரும்பாலும் கடன் பெற்றனர். ஆனால், தற்போதைய இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள அதீத நுகர்வு விருப்பத்தால், சுற்றுலாச் செல்வது, ஆடம்பரப் பொருட்களை வாங்குவது, உணவகங்களில் செலவிடுவது, ஆடைகள், காலணிகள் மற்றும் மொபைல் போன் வாங்குவது என முதலீடு அல்லாத நுகர்வு சார்ந்த கடன் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

கிரெடிட் கார்டுகளில் செலவிடுவதும், ‘இப்போது வாங்கி, பின்னர் கட்டலாம்’ (Buy Now, Pay Later - BNPL) என்ற கருத்தாக்கத்துடன் வந்துள்ள செயலிகளில் செலவிட்டு, பின்னர் இ.எம்.ஐ. முறையில் திருப்பிச் செலுத்துவதும் இளைஞர்களின் நுகர்வு கலாச்சாரத்தை வேகமாக வளர்த்துள்ளன.

இது ஒருபுறம் சந்தையில் நுகர்வை வளர்த்துப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தினாலும், மறுபுறம் பிணையற்ற (Unsecured Loans) கடனை வானளாவிய அளவுக்கு உயர்ந்துள்ளது ஆர்பிஐ-க்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

BNPL - ஜென்ஸீ ஈர்க்கப்படுவது ஏன்?

பிஎன்பிஎல் என்பது ஆடைகள், ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், சுற்றுலா அல்லது உணவு போன்றவற்றை வாங்கும்போது, அதற்கான தொகையைச் சிறு தவணைகளாகப் பிரித்துச் செலுத்தும் ஒரு டிஜிட்டல் கடன் செயலி வசதியாகும். இன்று இணையத்தில் புற்றீசல் போல் இந்த பிஎன்பிஎல் செயலி பெருகிவிட்டன.

எளிமையான நடைமுறை

கிரெடிட் கார்டுகளுக்குத் தேவைப்படும் கடுமையான ஆவணங்கள், வருமானச் சான்றுகள் அல்லது அதிக கிரெடிட் ஸ்கோர் போன்றவை பிஎன்பிஎல் செயலிகளுக்குத் தேவையில்லை.

உடனடி ஒப்புதல்

ஜென்ஸீ இளைஞர்கள் தங்களின் அடையாளச் சான்று மற்றும் வங்கிக் கணக்கை இணைத்த சில நிமிடங்களிலேயே கடன் தொகை கிடைத்துவிடும்.

வட்டியற்ற சலுகை

30 நாட்கள் வரை வட்டி இல்லாமல் தவணை வசதியை வழங்குவது, இளைஞர்களை உடனடியாகப் பொருட்களை வாங்கத் தூண்டுகிறது.

சிபில் (CIBIL) அறிக்கையின்படி, ரூ.10,000-க்கும் குறைவான சிறிய பிணையற்ற கடன்கள் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்துள்ளன. இதில் சிறு, குறு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களே இந்த பிஎன்பிஎல் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஆர்பிஐ கவலை ஏன்?

வீட்டுக் கடன், வேளாண் கடன், வர்த்தகக் கடன்களை விடப் பிணையற்ற சில்லறைக் கடன் வேகமாக உயர்ந்துள்ளது ரிசர்வ் வங்கிக்குக் கவலை அளித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி ‘2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு குடும்பத்தின் கடனில் (Household Debt) சில்லறைக் கடன் 54.9 சதவீதமாக இருந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் இது 58.4% ஆக உயர்ந்துவிட்டது. சராசரியாக ஒரு குடும்பத்திற்கு இருக்கும் கடன் அளவும் 2018 மார்ச் மாதத்தில் ரூ.3.41 லட்சமாக இருந்த நிலையில், 2025 மார்ச் இறுதியில் ரூ.4.78 லட்சமாக அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களின் மொத்தக் கடன் 2022 மார்ச்சில் ரூ.9.02 லட்சம் கோடியாக இருந்து, 2026 மார்ச்சில் ரூ.17.32 லட்சம் கோடியாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. நகைக் கடன்களும் ரூ.4.61 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளன.

கடன் வழங்கும் நிறுவனங்களால் கடன் பெறுவோரின் வருமானத்தை முழுமையாகச் சரிபார்க்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் கடன் சேவை செயலிகளைப் பயன்படுத்தும் 35 வயதிற்குட்பட்ட இளம் நுகர்வோரின் பங்கு 2026-ஆம் ஆண்டில் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சேமிப்பு குறைவு... மாறும் கலாச்சாரம்!

‘பைசாபஜார்’ ஆய்வின்படி, 1960-70-களில் பிறந்தவர்கள் தங்களின் 30 வயதின் பிற்பகுதியிலோ அல்லது 40 வயதிலோதான் பிணையம் சார்ந்த முதல் கடனைப் பெற்றனர். ஆனால் 1990-களில் பிறந்தவர்களும் ஜென்ஸீ தலைமுறையினரும் தங்கள் 20 வயதின் பாதியிலேயே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் பிஎன்பிஎல் வலையில் இணைந்து விடுகின்றனர்.

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட தனிநபர் கடன்களில் 25% சுற்றுலா செல்லவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜென்ஸீ தலைமுறையினரிடம் சேமிப்புப் பழக்கத்தை விடச் செலவிடும் பழக்கமே அதிகரித்துள்ளது.

ஜென்ஸீ சந்திக்கும் சிக்கல்கள்

>> தூண்டுதல் செலவு: கையில் பணமில்லாவிட்டாலும் வாங்கலாம் என்ற எண்ணம் தேவையற்ற செலவுகளை உயர்த்துகிறது.

>> அதிக வட்டி, அபராதம்: தவணை தவறினால் 24% முதல் 36% வரை வட்டி மற்றும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

>> சிபில் ஸ்கோர் பாதிப்பு: ரூ.500-ஐத் தாமதமாகச் செலுத்தினாலும் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் வீடு அல்லது கல்விக் கடன் பெறுவது தடைபடும்.

>> கடன் வலை: ஒரு கடனை அடைக்க மற்றொரு செயலியில் கடன் வாங்கும் ஆபத்தான சுழற்சியில் இளைஞர்கள் சிக்கிக்கொள்கின்றனர்.

ஆர்பிஐ நடவடிக்கைகள்

பிணையற்ற கடன்கள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்பதால், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான அபாய வரம்பை ஆர்பிஐ 25% உயர்த்தியுள்ளது. போலி கடன் செயலிகள் முடக்கப்பட்டு, அனைத்து பிஎன்பிஎல் பரிவர்த்தனைகளும் கடன் தகவல் அமைப்புகளில் பதிவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நிதித் தொழில்நுட்பம் அவசரத் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், அதை அதீத நுகர்விற்கும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தும்போது இளைஞர்களின் நிதி எதிர்காலமே சீரழியும். நிதிசார் விழிப்புணர்வு, திட்டமிட்ட வரவு-செலவு மற்றும் பொறுப்பான கடன் பயன்பாடு மட்டுமே ஜென்ஸீ தலைமுறையைக் கடன் பாக்கியிலிருந்து காப்பாற்றும்.

‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’ - டிஜிட்டல் கடன் வலையில் சிக்குகிறதா ஜென் ஸீ தலைமுறை?
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன: முத்தரசன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in