

மும்பை: இந்திய பங்குச் சந்தை முதலீடு குறித்து மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டுப் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (எப்பிஐ) பங்களிப்பு 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதேநேரம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பு 29% என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒட்டுமொத்த உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு முந்தைய காலாண்டை விட 0.4% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு 0.58% உயர்ந்து 19.3% ஆக உள்ளது. தனிநபர் முதலீட்டாளர்களின் நேரடிப் பங்களிப்பும் 0.20% அதிகரித்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, எப்பிஐ-களின் பங்களிப்பு இந்த காலாண்டில் 0.90% குறைந்து, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதித்துறையில் அதிக முதலீடு செய்திருந்தாலும், இந்த காலாண்டில் அந்த அளவைச் சற்றே குறைத்துள்ளனர். தொழில் துறை அவர்களின் மிகக் குறைந்த முதலீட்டுத் துறையாக நீடிக்கிறது.
உள்நாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிதித்துறையில் அவர்களின் முதலீடு குறைவாக இருந்தாலும், அந்த இடைவெளி தற்போது குறைந்து வருகிறது. நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்கள் துறையிலேயே அவர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.