Published : 16 Feb 2023 02:13 PM
Last Updated : 16 Feb 2023 02:13 PM

மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் வீட்டில் இருந்தபடியே பருத்தியை விற்ற தருமபுரி விவசாயி

பிரதிநிதித்துவப் படம்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயி ஒருவர் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் முறையில் பருத்தியை விற்பனை செய்தார்.

தருமபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நேற்று முதல் நபராக கம்பைநல்லூர் பகுதி விவசாயி ஒருவர் வீட்டில் இருந்தபடியே 3 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்தார்.

கம்பைநல்லூர் அடுத்த நெல்லிமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற விவசாயி, தன்னிடம் 3 குவிண்டால் பருத்தி இருப்பதாக அரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, ஆய்வக ஆய்வாளர் நேரில் சென்று பருத்தியின் தரத்தை ஆய்வு செய்து அது குறித்த தகவலை இணையத்தில் பதிவு செய்தார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் வியாபாரிகள் சிலர் ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்தபடியே செல்போன் மூலம் விலையை குறிப்பிட்டு பதிவேற்றினர். அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 700 விலை பதிவிட்ட வியாபாரியிடம் அந்த விவசாயி பருத்தியை விற்பனை செய்தார்.

இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயி கூறும்போது, ‘போக்குவரத்து செலவு இல்லாமல், வீட்டில் இருந்தபடியே எதிர்பார்த்த விலை கிடைத்ததும் பருத்தியை விற்பனை செய்தேன். உண்மையாகவே இது விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டம் ஆகும்’ என்றார்.

இது தொடர்பாக அரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இந்த மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் வீட்டில் இருந்தபடியே விற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x