Published : 16 Feb 2023 04:46 AM
Last Updated : 16 Feb 2023 04:46 AM

சென்னை, கோவை, திருப்பூர், ஓசூரில் விரைவில் திட்ட விளக்க கண்காட்சி - சர்வதேச நிதி சேவைகள் மைய தலைவர் தகவல்

சர்வதேச நிதி சேவைகள் மையம் வழங்கிவரும் நிதி சேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், சென்னை,கோவை, திருப்பூர், ஓசூரில் விரைவில் இதுதொடர்பாக விளக்க கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) தலைவர் இஞ்செட்டி சீனிவாஸ் தெரிவித்தார்.

நிதி தொடர்பான சேவைகளை மேம்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கிப்ட் சிட்டியில் சர்வதேச நிதி சேவைகள் மையத்தை (ஐஎப்எஸ்சி) மத்திய அரசு அமைத்துள்ளது. கிப்ட் சிட்டி என்பதேகூட இதன் தலைமை அலுவலகத்துக்காக உருவானதுதான்.

கிப்ட் சிட்டியில் தற்போது, பல்வேறு நாட்டு நிதி சார்ந்த நிறுவனங்கள், காப்பீடு, வெளிநாட்டு வங்கிகள் தங்கள் அலுவலகங்கள், கிளைகளை அமைத்துள்ளன.

மத்திய அரசு கடந்த 2019-ம்ஆண்டு ஐஎப்எஸ்சிக்கு என தனிப்பட்ட ஒழுங்குமுறை சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமல்படுத்தியது. அத்துடன், இதை செயல்படுத்த சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தையும் (ஐஎப்எஸ்சிஏ) உருவாக்கியது. இதன்மூலம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் உள்நாட்டு நிதி சேவைகளுக்கான பணிகளை ஐஎப்எஸ்சி தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த சேவைகளை ஐஎப்எஸ்சி வழங்கி வருகிறது.

ஐஎப்எஸ்சிஏவின் முதல் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஞ்செட்டி சீனிவாஸ் கடந்த 2020-ல் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:

நிதிசார்ந்த சேவைகளுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்காமல், இந்தியாவிலேயே சேவைகளை பெறும் முயற்சியாக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இம்மையம்பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, வங்கி, மூலதன சந்தைகள், காப்பீடு, நிதி மேலாண்மை, விமான குத்தகை, கப்பல் குத்தகை போன்றவற்றிலும் தனது எல்லையை பரப்பியுள்ளது.

கிப்ட் சிட்டியில் அலுவலகம், கிளை அமைக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உட்படபல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. தற்போது ஐஎப்எஸ்சியில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிதி சேவைகளுக்காக பதிவுசெய்துள்ளன. குறிப்பாக நிதிசேவை பணிகள், வங்கி காப்பீடு, நிதி தொழில்நுட்பம், விமான குத்தகை, தங்க முதலீடு போன்றவற்றில் அதிக பதிவுகள் உள்ளன. இதுதவிர, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளும் பதிவு செய்துள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பதிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.

இந்த வளாகத்தில் நிதிசார்ந்த படிப்புகளை வழங்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் பதிவு செய்துள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் இந்தியா முழு தற்சார்பு பெற்றதாக மாறும். அதிக அளவில் வெளிநாட்டினர் இந்தியாவில் வந்து கல்வி கற்கவும், நிதிசேவை நிறுவனங்களில் பணியாற்றவும் வாய்ப்பு ஏற்படும். தமிழகம், தெலங்கானா, கர்நாடகாவுடன் பேசியுள்ளோம். தமிழகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.

நாட்டில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கும் நிதி சார்ந்த சேவைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தின் தொழில் நகரமான கோவை, ஏற்றுமதி நகரமான திருப்பூர், சென்னை மற்றும் ஓசூரில் விரைவில் விளக்க கண்காட்சிகள் (‘ரோடு ஷோ’) நடத்த முடிவு செய்துள்ளோம். பிரதமரின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் நோக்கத்தை ஐஎப்எஸ்சி நிறைவு செய்யும் என நம்புகிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x