Published : 01 Jul 2022 06:34 AM
Last Updated : 01 Jul 2022 06:34 AM

கிரெடிட் கார்டு புதிய விதிகள்: இன்று முதல் அமல்

புதுடெல்லி: கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் மீது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறைகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் அமலாகிறது.

அனைத்து வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியன வழங்கியுள்ள கடன் அட்டைகளுக்கு இந்த விதி பொருந்தும்.

வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவரது கடன் அட்டை வரம்பை உயர்த்துவது, புதிய கடன் அட்டை அளிப்பது போன்ற நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடக் கூடாது. அவ்விதம் ஈடுபட்டால், இதற்காக வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துடன் அபராதத் தொகையை சேர்த்து வாடிக்கையாளர் கணக்கில் வழங்க வேண்டும்.

அதேபோல இலவச கடன் அட்டை மீது மறைமுக கட்டணங்கள் எதுவும் விதிக்கக் கூடாது கடன் அட்டை சேவையை வாடிக்கையாளர் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அது 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவரது கணக்கு நிறுத்தப்பட்டது தொடர்பான அறிவிப்பு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் அட்டை தொடர்பாக அனுப்பப்படும் ஸ்டேட்மென்ட்டில் பணம் செலுத்த குறைந்தபட்சம் 15 நாள் அவகாசம் இருக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x