Published : 15 Feb 2022 09:16 AM
Last Updated : 15 Feb 2022 09:16 AM
கிரிப்டோகரன்சியை தடை செய்வது மிகச் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் நிதிக் கொள்கையை வெளியிட்டுப் பேசுகையில், "தனியார் க்ரிப்டோகரன்சிகளால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவற்றில் முதலீடு செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த ரிஸ்கில் செய்கின்றனர் என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மேலும், க்ரிப்டோகரன்சிகளுக்கு தனியாக அடிப்படை மதிப்பு என்று ஏதுமில்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரும் அதே கருத்தைக் கூறியிருக்கிறார். நேற்று அவர் இது குறித்து, "கிரிப்டோகர்னசிகள் பொன்ஸி திட்டங்களுக்கு நிகரானவை. அவற்றைத் தடை செய்வதே இந்தியாவுக்கு விவேகமான வாய்ப்பாகும். கிரிப்டோகரன்சிகள் மெய்நிகர் கரன்சிகள். அவை ஒரு பொருளும் அல்ல, சொத்தும் அல்ல. அவை பணம் போன்றவையும் அல்ல. அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்பு ஏதும் இல்லை. அதனால் தான் அதனை பொன்ஸி திட்டங்களுக்கு நிகரானவை ஏன் அதைவிட மோசமானவை என்று நான் கூறுகிறேன்" என்றார்.
பொன்ஸி திட்டம் என்றால் என்ன? இது ஒரு தனிநபரோ, ஒரு நிதிநிறுவனமோ சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் நடத்தும் திட்டம். இதில் சேர்வோருக்கு அதனை நடத்துபவர் தனது லாபத்திலிருந்து பணத்தைத் திருப்பித் தராமல், இன்னொரு நபரிடமிருந்து பெறும் தொகையை திருப்பித் தருவார். இதற்காக சிறிய, புதிய முதலீட்டாளர்கள் ஆசை வார்த்தைகள் கூறி ஈர்க்கப்படுவர். இதனுடன் தான் கிரிப்டோகரன்ஸி திட்டத்தை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஒப்பிட்டுள்ளார்.
துலிப் பித்தைப் போன்றது.. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்சிகளை நெதர்லாந்தின் துலிப் பித்துக்கு ஒப்பிட்டிருந்தார். 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், துலிப் மலர்கள் டச்சு பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக மாறியது. இதன் மீது ஊக வணிகங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னால் டச்சு செல்வந்தர்கள் ஓடினர். ஒருகட்டத்தில் துலிப் சந்தை ஏற்படுத்திய மாயை ஓய்ந்தது. உண்மையில் துலிப்புகளுக்கு சந்தையில் உள்ளார்ந்த மதிப்பு ஏதுமில்லை என்பதை மக்கள் பின்னர் தான் புரிந்து கொண்டனர். இதனை ஒப்பிட்டே சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்ஸியும் துலிப் சந்தையைப் போன்றது என்றார்.
மத்திய அரசு தொடர்ந்து கிரிப்டோ கரன்சிகள் மீது தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வருகிறது. தனியார் கிரிப்டோகரன்சிகளை நம்ப வேண்டாம், ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT