Published : 25 Jun 2014 04:55 PM
Last Updated : 25 Jun 2014 04:55 PM

ஆட்டோமொபைல் துறைக்கு வரிச் சலுகை நீட்டிப்பு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்படும் உற்பத்தி வரிச் சலுகை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு ஆட்டோமொபைல் துறையினருக்கு சற்று நிம்மதி தருவதாக அமைந்துள்ளது. இந்த சலுகையால் இத்துறையில் நிலவிவரும் தேக்க நிலை மாறி விற்பனை அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசின் இந்த அறிவிப்பு ஆட்டோமொபைல் துறைக்கு மிகவும் நல்லது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் விற்பனை மேலும் தொடரும் என்று நம்புவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மயங் பரீக் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை கடுமை யான சவாலை சந்தித்து வருகிறது. அரசின் இந்த அறிவிப்பு, இப்போது சூடுபிடித்துள்ள விற்பனை நீடிக்க வழிவகுக்கும் என்று ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்தார்.

இம்மாதம் 30-ம் தேதியுடன் முடி வடையும் உற்பத்தி வரிச் சலுகை மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்ப மான சூழ்நிலைக்கு அரசு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுபோன்ற சலுகையைத்தான் அரசிடமிருந்து இத்துறையினர் எதிர்பார்த்ததாக சென் மேலும் தெரிவித்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட் ஜெட்டில் சிறிய கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீதான உற்பத்தி வரியை 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்தது. இதே போல எஸ்யுவி-க்கள் மீதான உற் பத்தி வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நீண்ட பெரிய கார்கள் மீதான உற்பத்தி வரி 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

கார், இருசக்கர வாகன விற்பனை யில் நிலவி வந்த மந்த நிலையைப் போக்கும் விதமாக அரசின் இந்த அறிவிப்பு அமைந்தது.

இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட இந்த வரிச் சலுகை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்போது அரசு அறிவித்துள்ளதால் இச்சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை தொடரும்.

இத்துறையில் தொடர்ந்து தேக்க நிலை நிலவுவதால் இந்தச் சலு கையை ஓராண்டு வரை அரசு வழங்கும் என்றும், இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடும் என்றும் எதிர்பார்ப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவன துணைத் தலைவர் பி. பாலேந்திரன் தெரிவித்தார்.

அரசின் இந்த வரிச் சலுகை நீட்டிப்பு அறிவிப்பு இத்துறைக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ள தாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) செயல் இயக்குநர் விஷ்ணு மாத்துர் தெரிவித்தார்.

உற்பத்தி வரி குறைப்பு சலுகை நீட்டிப்பு அறிவிப்பு, இத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவன செய் தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுபோன்று பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் அறிவிப்புகளை இத்துறை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் கார் விற்பனை 2013-14-ம் நிதி ஆண்டில் 4.65 சதவீத சரிவைச் சந்தித்தது. மொத்தம் 17,86,899 கார்களே விற்பனையாகியிருந்தன. முந்தைய நிதி ஆண்டில் மொத்தம் 18,74,055 கார்கள் விற்பனையாகியிருந்தன.

2012-13-ம் நிதி ஆண்டில் கார் விற்பனை 6.69 சதவீத சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் கா விற்பனை 3.08 சதவீதம் அதிகரித்தது. மத்தியில் நிலையான அரசு அமைந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

அரசின் இந்த அறிவிப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கிறோம். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்குமாயின், குறுகிய காலத்தில் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஒரு பொருட்டாக அரசு கருதாது என்று அருண் ஜேட்லி கூறினார்.

உற்பத்தி வரிச் சலுகைக் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிகிறது. பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது அறிவிப்பதைவிட முன்கூட்டியே அறிவிப்பது நல்லது என்று கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இது தொடர்பான அரசு அறிவிக்கை புதன்கிழமையே வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்ற வரிச்சலுகை நீட்டிப்பு கோரிக்கையை நுகர்வோர் மின்னணு பொருள் தயாரிப்பாளர்களும் அரசிடம் கேட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x