Last Updated : 13 Feb, 2016 09:01 AM

 

Published : 13 Feb 2016 09:01 AM
Last Updated : 13 Feb 2016 09:01 AM

மத்திய பட்ஜெட்- 1. இப்படி ஒன்று இருக்கிறது!

இந்திய அரசின் நிதி அமைச்சகம், இணையப் பக்கத்தில் இப்படிக் குறிப்பிடுகிறது:

“இந்த ஆவணம் - கொள்கைகளைத் தீர்மானிக்கிறவர்கள், ஆராய்கிறவர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசின் முகவர்கள், வணிகர்கள், மாணவர்கள், ஊடகங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்”.

இந்த அளவுக்கு அரசாங்கம் சிறப்பித்துக் கூறும் 'இந்த ஆவணம்' எது...?

‘அதான் தெரியுமே... பட்ஜெட்டு. ஸ்கூல் பசங்களைக் கேட்டாக் கூட சொல்லுவாங்களே...'

‘மன்னிக்கணும். இந்த ஆவணம், பட்ஜெட் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கை. ('எகனாமிக் சர்வே')'

‘ஓ...! அப்படி ஒண்ணு இருக்கா...? சொல்லவே இல்லை...?'

‘கேள்விப்பட்டு இருக்கேன். மத்தபடி..., ஊஹூம், நோ ஐடியா'.

‘எகனாமிக் சர்வேதானே...? அதெல்லாம் யாரு படிப்பாங்க..? யாருக்கு பொறுமை இருக்கு..?

'பட்ஜெட்டையே படிக்க மாட்டேன்... இன்கம்டாக்ஸ் ரிலீஃப் எதுவும் இருக்கான்னு மட்டும் பார்ப்பேன். அவ்வளவுதான்...'

‘எதற்கு எடுத்தாலும் குறை சொல்பவர்கள்', `கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள்' என இரு சாராருமே ஏறெடுத்துப் பார்க்காத, படித்தவர்களும் படிக்காத ஒரு அறிக்கை இது. அதனால்தான், இந்தப் பெயரே கூடப் பலருக்குப் புதிதாக இருக்கிறது.

ஏன் இப்படி...? `பயன் தருகிற ஆவணம்' என்று அரசு சுட்டிக் காட்டுகிற ஒரு மிக முக்கிய அறிக்கை, ஏன் நமது கண்களில் படுவதே இல்லை...? இதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவில்லை. அதுதான் காரணம்.

‘இது - நிபுணர்களுக்கு மட்டும்' என்று நாமாகக் கருதிக் கொண்டு விட்டுவிட்டோம்.

உண்மையில், நம் நாட்டின் அத்தனை கோடி மக்களின் தலை எழுத்தும் இந்த அறிக்கையில் அடங்கி இருக்கிறது.

அப்படி இது என்னதான் சொல்கிறது..? இதில் என்னதான் இருக்கிறது..?

“கடந்த 12 மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்தவைகளை, மறு ஆய்வு செய்கிறது; வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள்; புதிதாக முன்வைக்கப்படும் கொள்கை முடிவுகள் மற்றும் குறுகிய, சற்றே நீண்ட கால எதிர்பார்ப்புகளை விவரிக்கிறது.”

ஆகவே, பட்ஜெட்டை விடவும், பொருளாதார ஆய்வறிக்கையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

‘அப்படின்னா...., பட்ஜெட் பத்தி நிறைய பேசறாங்களே.... அது தேவையே இல்லையா...?'

‘அப்படி இல்லை... எகனாமிக் சர்வே, பட்ஜெட். ரெண்டுக்கும் வித்தியாசம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா இந்த மாதிரி குழப்பம் எல்லாம் தீர்ந்து போயிரும்.'

பாருங்களேன்... ஒருத்தரு தன் பொண்ணை `டிகிரி' படிக்கறதுக்கு இந்த வருஷம்தான் சேர்த்து இருக்காரு; அவரும் அவரோட மனைவியும் பேசி ஒரு தீர்மானத்துக்கு வர்றாங்க. `அவ ஆசைப்படற வரைக்கும் மேற்கொண்டும் படிக்கட்டும்'.

இவர்கள் அப்படி ஒன்றும் வசதிப் பட்டவர்கள் அல்ல. ஆனாலும், தங்களுடைய புதல்வியின் கல்விக்கென்று, இருவருமாக, மாதம் இருபதாயிரம் ரூபாய் சேர்த்து வைக்கிறார்கள்.

மேலே சொன்னதில், மேற்கொண்டு படிக்கட்டும் என்பது `கொள்கை முடிவு'; இதை எகனாமிக் சர்வே சொல்லும்.

மாதம் தலா பத்தாயிரம் ரூபாய் சேமிக்கலாம் என்பது `பட்ஜெட்' ஒதுக்கீடு.

மாதம் இருபது ஆயிரம் சேமிப்பு என்று தனியே பார்த்தால், மிகுந்த வருமானம் உள்ள குடும்பம் என்றுதான் தோன்றும்.

இதுவே, தங்கள் மகளின் எதிர்காலக் கல்விக்காக இப்போது இருந்தே சேர்த்து வருகிறார்கள் என்பதோடு இணைத்துப் பார்த்தால், குடும்பம் படும் கஷ்டமும் அவர்களின் நிகழ்காலத் தியாகமும் புரியும்.

ஆக, `எகனாமிக் சர்வே'யுடன் சேர்த்துப் பார்த்தால்தான் பட்ஜெட் ஒதுக்கீட்டின் முழுப் பரிமாணமும் நமக்குச் சரியாகத் தெரியவரும். இதற்காகவே, பட்ஜெட்டுக்கு முன்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், `எக்னாமிக் சர்வே' சமர்ப்பிக்கப்படுகிறது.

ஒரு சந்தேகம். ஒவ்வொரு செலவுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு கொள்கை முடிவு இருக்குமா...?

அது எப்படி இருக்க முடியும்..? மிகப் பெரும்பாலான செலவுகள், சாதாரண, (‘ரொட்டீன்' வகை) தொடர் நிகழ்வுகள்தாம்.

மேற்சொன்ன குடும்பத்தில், வீட்டு வாடகை தொடங்கி துணி இஸ்திரி போடுவது வரை ஆகும் செலவுகள்தாம் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும். இதிலே `கொள்கை' எங்கே வருகிறது...? ஒரு நாட்டுக்கான பட்ஜெட்டிலும் இதே கதைதான்.

‘பற்றாக்குறை' பட்ஜெட்தான் நமது நிரந்தர நிலை எனும் போது, பெரிய அளவில் புது முயற்சிகளுக்கும் புதிய கொள்கை முடிவுகளுக்கும் இடம் (‘ஸ்கோப்') இல்லாமற் போகிறது.

‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்..?' அதனால்தான், சற்று முன்னே பின்னே இருக்கலாமே தவிர,

பொதுவாக பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பெரிய மாற்றம் (‘ஷிஃப்ட்') எதுவும் இருப்பதே இல்லை.

‘ஒண்ணைத் தூக்கி இன்னொன்னுல போடு' என்கிற `கிராமத்துக் கணக்கு'தான் உலகம் முழுக்க நடைபெற்று வருகிற பட்ஜெட் நடைமுறை. இந்த வரையறைக்கு உட்பட்டு, எந்த அளவு மாற்றங்களுக்கு முயற்சிக்கிறது என்பதை வைத்தே, `சிறந்த பட்ஜெட்' என்று பெயர் பெறுகிறது.

ஆனால், எகனாமிக் சர்வே, மாற்றத்தை முன் வைக்கிற களமாகச் செயல்பட முடியும். நிதி ஒதுக்கீடு என்று வருகிற போதுதானே `இடிக்கிறது'? இதைச் செய்ய நினைக்கிறோம்' என்று சொல்வதில் என்ன இடர் வந்து விடப் போகிறது...?

`நிதி ஒதுக்காமல், வெறுமனே சொல்வதால் என்ன பயன்..?'

நியாயமான கேள்வி. `வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளன; செயல்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப் படவில்லை; ஏமாற்று வேலை' என்றெல்லாம், இந்த அடிப்படையில்தான் கருத்து சொல்லப் படுகிறது.

இவை `அறிவிப்புகள்'. அதாவது, இவையெல்லாம் செயல் திட்டத்தில் உள்ளன என்று முதலில் அறிவிக்கப்படுகிறது.

பொருளாதாரம் அடுத்து எந்தத் திசையில் பயணிக்க இருக்கிறது என்பதற்கான தகவல் பரிமாற்றம் இது. இந்த அறிவிப்புகளை வைத்து, தொழில் முனைவோரும் இன்ன பிறரும் அரசை அணுகுவதற்கான அழைப்பாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். `நோக்கம்' மட்டுமே இந்த நிலையில் பிரதானம்; `செயல்', பிறகு வரும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியே நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம்.

நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஓர் (கற்பனை!) உதாரணம்...

‘கங்கை - காவிரி இணைப்பு' கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கொள்வோம். இதுவே மிகப் பெரிய அறிவிப்புதானே...? இதை நிறைவேற்றத் தேவையான நிதி, இப்போதே ஒதுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது

எந்த வகையில் நியாயம்...?

பொருளாதாரத்தில், `பாரடிகம் ஷிஃப்ட்' என்று ஒன்று உண்டு. ஏறத்தாழ, தலை கீழாய்ப் புரட்டிப் போடுகிற மாற்றம்; அல்லது, இதுவரையில் பயணித்த பாதையில் இருந்து, எதிர்த் திசையில் பயணிக்கிற முயற்சி.

இந்தியா போன்ற ஜனநாயகக் குடியரசு நாட்டில் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.

இப்போதைக்கு இந்த விளக்கங்கள் போதும்.

சென்ற ஆண்டின் ஆய்வறிக்கை என்னதான் சொல்லிற்று...?

`ரயில்' பற்றி `சுவாரஸ்யமான' ஒரு செய்தி. அடடே....!

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x