Last Updated : 21 Feb, 2016 11:48 AM

 

Published : 21 Feb 2016 11:48 AM
Last Updated : 21 Feb 2016 11:48 AM

மத்திய பட்ஜெட் - 9. என்னதான் நடக்குது...?

‘என் கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுங்க. இப்போ என்ன நிலைமை..? நாளைக்கு எப்படி இருக்கும்...?'

‘கேள்வி என்னவோ நல்லாதான் இருக்கு. பதில் சொல்லத்தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு.'

‘இதெல்லாம் வேணாம். இந்த வருஷம் எப்படி இருக்கும்...?

‘மன்னிக்கணும். பொருளாதாரத்துல, ஜோதிடம் ஆரூடத்துக்கு வேலையே இல்லை'.

சில கணக்குகள்; சில கணிப்புகள்; சில எதிர்பார்ப்புகள்; சில ஏமாற்றங்கள். பொருளாதாரத்தில் இவைதாம் உண்டு.

வேறு எதிலும்விட, பொருளாதாரத்தில்தான் கணக்குகள் தவறாகிவிட சாத்தியங்கள் மிக அதிகம்.

ஏனெனில், இங்கே கண்ணுக்குத் தெரியாமலும் ஏராளமானோர் ‘வெளை யாடறாங்க'. வேற மாதிரி அர்த்தம் வருதோ..? அதாவது, பொருளாதாரக் களத்தில் ‘ப்ளேயர்ஸ்'க்கு கணக்கே இல்லை. அதனால்தான் கணக்கு பல சமயங்களில் பிசகிப் போகிறது.

வெயில், மழை, வறட்சி, வெள்ளம்னு இயற்கையின் விளையாட்டில் இருந்து, சண்டை, கலவரம், போர் என்று மனிதன் தொடும் விபரீதங்கள் உட்பட, பெரு முதலாளிகள், அரசியல் பிரமுகர்கள், ‘பிரதிநிதிகள்', ‘போராட்டக்காரர்கள்' போன்றோரின் திரை மறைவுத் திட்டங்கள், அழுத்தங்கள், கோரிக்கைகள், சுயநலன்கள் வரை அத்தனையும் சுழன்று சுழன்று ‘அடிக்கும்' துறை இது.

எது ‘உயரே' போகும்; எது அமிழ்ந்தே கிடக்கும் என்பதெல்லாம், யாராலும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது.

உலகப் பொருளாதாரம் மந்த கதியில் தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது; சில/ பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன;

அமெரிக்கா அனேகமாக மீண்டுவிட்டது; சீனா குழப்பத்தில் உள்ளது; பெட்ரொலியப் பொருட்களின் விலை மீதான அரபு நாடுகளின் ஆதிக்கம் தேய்ந்து போனது;

அமெரிக்கா, சீனா தவிர்த்து, எந்த நாட்டுக்கும், மிகப் பெரிய போர் எதையும் எதிர்கொள்கிற அளவுக்கு பொருளாதார வலு இல்லை - போன்ற அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

உள் நாட்டில், சில பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானாலும், பொதுவாக பருவ மழை இயல்பான அளவுக்குப் பெய்து இருக்கிறது. ஆங்காங்கே தண்ணீர்ப் பிரச்சினை தலையெடுக்கலாம். மற்றபடி, ‘வறட்சி தாண்டவம் ஆடுகிற' கோடையாக இருக்காது என்றே தோன்றுகிறது.

எப்போதும்போல, நம் விவசாயப் பெருங்குடி மக்கள், வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவர் களாக உள் நாட்டுத் தேவையை, தேவைக்கு அதிகமாகவே பூர்த்தி செய்யப் போகிறார்கள்.

புதிய தொழில்கள் பற்றிய ‘அறிவிப்புகள்' வந்த வண்ணம் இருக்கும். கல்வி வேலை வாய்ப்பில் ‘பழைய கதை'யே தொடரும். அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு, என்ன எழுதுகிறார்கள், என்ன படைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, வழக்கம்போல சங்கடங்களும் சந்தோஷங்களும் கலந்தே இருக்கும்.

‘ஓங்கிக் குரல் கொடுத்தால், ஒன்றிரண்டு பலிக்கும்' என்கிற அளவுக்கு, ‘உழைக்கும்'(!) வர்க்கம் பயன் அடையும். இவர்களுக்கும் வாழ உரிமை உண்டு என்று அங்கீகரித்து, இவர்களுக்காக எழுத பேச ஒருவரும் இல்லாத, ‘வாய்(ஸ்)' இல்லாப் பூச்சிகளுக்காக, சில சலுகைகள், சில திட்டங்கள் (இலவசங்கள்) வெளியாகலாம்.

இவை பொதுவானவை. இனி...

பண வீக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. அப்போதைக்கு ஏறி இறங்குகிற ஓரிரு பொருட்களைத் தவிர்த்து, விலைவாசி நிலவரம் நாடு முழுக்க அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஓரளவுக்கு சீராகவே இருந்து வருகிறது.

பல்வேறு கசப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், பரவலாக, தொழில் துறையில் அமைதி நிலவத்தான் செய்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி - இரண்டுமே சரிவைச் சந்தித்து இருக்கிறது.

தொழில் முனைவோரிடம் காணப்படும் ‘ஆர்வம்', முதலீட்டில் வெளிப்படவில்லை. ‘இந்தியாவில் தயாரிக்க' இன்னமும் அதிகம் பணியாற்ற வேண்டி இருக்கிறது.

பொருளாதாரச் சலுகைகள், ‘தாராளங்கள்' சிலருக்கு மட்டுமே சாதகமாக இருக்கின்றன என்கிற எண்ணம் வேரூன்றி வருகிறது.

பொது விநியோக முறையில் கசிவுகள், வீண் விரயங்கள் குறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அரசின் பணம், வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இது, அரசுப் பட்டுவாடாக்களில் லஞ்சம் ஊழல் குறைய, வழி வகுத்துள்ளது.

பெரு முதலாளிகளை ஊக்குவிக்கிற, சாமான்யனால் பெற முடியாத வரிச் சலுகைகள் காரணமாக, அரசுக் கருவூலத்துக்கு பல்லாயிரம் கோடி வரவு இழப்பு தொடர்கிறது. மக்கள் மத்தியில் தீராத கசப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற சலுகைகள், ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நீர்த்துப் போக வைத்து விடும். ஆனாலும், நிலைமை அடியோடு மாறும் என்று தோன்றவில்லை.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதன் காரணமாய் சிக்கல்கள் எழலாம். சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு, உற்பத்தியுடன் இணையாத, கூடுதல் செலவு; அது மட்டுமல்ல; சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில் இருந்து கூடுதலாகப் பணம் வர இருக்கிறது.

இது மிக நிச்சயமாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஊதியம் உயர்த்தப்படுகிற போதெல் லாம் உடனடியாக, மாநகரங்கள், நகரங்களில் வீட்டு வாடகை உயர்வதை நாம் ஏற்கனவே, அனுபவத்தில் கண்டிருக்கிறோம். நுகர் பொருட்களின் விலையும் ஏறத்தான் செய்யும்.

ஊதிய உயர்வின் கீழ் வராத ஏனைய பிரிவினருக்கு, இது தாள முடியாத சுமையை ஏற்படுத்தும்.

தனியார்த் துறையில் பணியாற்றுவோர், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், தினக் கூலியில் ‘பொழப்பு' நடத்துவோர், நிரந்தர வருமானத்துக்கு வழியில்லாதோர், கூட்டமாய்க் குரல் கொடுக்க வலிமையற்றோர்..... ஏதோ ஒரு வகையில் பெருத்த பாதிப்புக்கு உள்ளாக இருக்கிறார்கள்.

என்ன செய்யலாம்..? பரிந்துரைகள் காரணமாய் ஏற்படும் ஊதிய உயர்வை, ஊதியத்துடன் தராமல், சேமிப்புக்கு மாற்றிவிடலாம். இதனால் பணப் புழக்கம் குறையும்; எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும்;

குழுவின் பரிந்துரைகளும் அமலாக்கப்படும். ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கு இதுதான் நல்லது. ஆனால், யார் இதனை யாருமே ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்....?

சற்றும் அரசியல் கலவாமல், முழுக்க முழுக்க பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சொல்வதானால், மறைமுக நோக்கம் கொண்டவர்கள் (those with hidden agenda),

மிரட்டிப் பணிய வைக்கும் வல்லமை படைத்தவர்கள், தங்களது குறுகிய நன்மைக்காக வாரி வழங்குபவர்கள் ஆகியோரை மீறித்தான் நமது பொருளாதாரம் வளர வேண்டி இருக்கிறது. இதுதான் இன்றுள்ள அப்பட்டமான உண்மை.

இந்த நிலையில், நாம் சுமார் 7% வளர்ச்சி பெற்று வருவதாகச் சொல்கிறார்கள் சிலர். ‘அதெல்லாம் சும்மா.. 3% கூட இல்லை' என்கிறார்கள் சிலர். 5 - 6 சதவீத வளர்ச்சி என்பது சரியானதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதுவும், சீராக சமமாக எல்லாரையும் சென்று சேர்ந்து இருக்கிறதா...? மில்லியன் டாலர் கேள்வி.

சரி... வரவிருக்கும் பட்ஜெட்டில் நமது எதிர்பார்ப்புகள் என்ன...?

(நாளை - நிறைவுப் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x