Last Updated : 20 Aug, 2015 10:00 AM

 

Published : 20 Aug 2015 10:00 AM
Last Updated : 20 Aug 2015 10:00 AM

இணையதள வர்த்தகம்: 30 விநாடிக்கு 12 லட்சம் டாலர் வருமானம்

இணையதள வர்த்தக நிறுவனங்கள் 30 விநாடிக்கு 12 லட்சம் டாலர் வருமானம் ஈட்டுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் (5,483 டாலர்), பின்டிரெஸ்ட் (4,504 டாலர்), ட்விட்டர் (4,308 டாலர்) ஆகிய நிறுவனங்கள் 30 விநாடிக்கு வருமானம் ஈட்டுவதாக அசோசேம், டிலோய்ட் கூட்டாக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இணையதள வர்த்தகத்தில் சமூக வலைதளங்கள் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. இணையதளம் சார்ந்த வலைதளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதோடு அதை சிறப்பாக பயன்படுத்துவதற்கேற்ற மனப்பக்குவம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் மூலமான விற்பனை அதிகரித்து வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் புதிய பொருள்கள் பற்றிய விவரங்கள் வெளியாகின்றன. அத்துடன் அதைப் பயன்படுத்தியவர்களின் கருத்துகளும் இடம்பெறுகிறது. குறிப்பிட்ட பொருள்களுக்கான மதிப்பீடுகளும், பரிந்துரைகளும், அதைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களும் இடம்பெறுகின்றன.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க பரிசுப் பொருட்களை அளிக்கின்றனர். பொருள்கள் பற்றிய விவரத்தை ஆன்லைனில் போட்டு விளம்பரம் செய்வதை நிறுவனங்கள் விரும்புகின்றன.

சமூக வலைதளங்கள் பெரும்பாலும் தங்கள் தளத்திலிருந்து நேரடியாக இ-காமர்ஸ் தளத்துக்கு இணைப்பு அளிக்கின்றன. இதன் மூலம் அந்த பொருள் பற்றிய முழுமையான தகவலை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அத்துடன் அந்த பொருள்கள் உடனடியாகக் கிடைக்குமா, விலை, எத்தனை நாளில் டெலிவரி செய்யப்படும் என்பது போன்ற விவரங்களும் கிடைக்கின்றன. மேலும் அப்பொருளை வாங்கியவர்கள் அந்தப் பொருள் குறித்து எழுதியுள்ள விவரங்களும், அதன் மதிப்பீடும் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பொருளை விரும்பும் அல்லது வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளதோடு பொருளை வாங்கவும் தூண்டுகிறது.

சமூக வலைதளங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் பொருள் பற்றிய விவரங்களை வெளியிட கொடுத்துள்ள வாய்ப்பானது பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் பொருள் பற்றிய நம்பகத் தன்மை உருவாவதோடு அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்களின் வாய்வழி கருத்து பரிமாற்றம் பொருள் விற்பனைக்கு வலு சேர்ப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பண பரிவர்த்தனைக்கு பல வழிகள் உள்ளன. இதுவும் ஆன்லைன் பரிவர்த்தனை அதி கரிப்புக்கு முக்கியக் காரணமாகும். சில சமயங்களில் டெலிவரி செய்யும்போது பணத்தை அளிக்கும் (சிஓடி) வசதியையும் பெரும்பாலான நிறுவனங்கiள் அளிக்கின்றன. இதன் மூலம் பொருள்கள் திருடு போவதும், ஏமாற்றுவதும் தவிர்க்கப்படுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x