Published : 09 May 2015 10:07 AM
Last Updated : 09 May 2015 10:07 AM

வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களிடமிருந்து ரூ.4,733 கோடி: மக்களவையில் ஜெயந்த் சின்ஹா தகவல்

வருமான வரி விவரத்தை தாக்கல் செய்யாதவர்களிடமிருந்து ரூ. 4,733 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மக்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது:

2013-ம் ஆண்டிலிருந்து பண பரிவர்த்தனை கண்காணிப்பு மூலம் இத்தகைய வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பல கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலமாக நடந்த பரிவர்த்தனையாகும். வரி செலுத்தாதவர்கள் அதிக அளவில் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அதை கண்காணிக்கும் நடைமுறை (என்எம்எஸ்) பின்பற்றப்படுகிறது. இதன்படி 2013 முதல் 2014 மார்ச் வரையான காலத்தில் வருமான வரித்துறையினர் மொத்தம்

ரூ.4,733.61 கோடியை வசூலித் துள்ளனர். 2013-ம் ஆண்டில் 12.9 லட்சம் பேரும், 2014—ம் ஆண்டில் 22.09 லட்சம் பேரும், 2015 மார்ச் வரையான காலத்தில் 44.09 லட்சம் பேரும் என்எம்எஸ் கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டியும் வரி செலுத்தாதது கண்டறியப்பட்டது.

ரூ.10 கோடிக்கும் அதிகமாக வரி நிலுவை வைத்துள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதுபோன்றவர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ. 500 கோடி என்று அவர் குறிப்பிட்டார். வருமான வரித்துறை சமீபத்தில் வரி செலுத்தாத 49 பேரின் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் உற்பத்தி வரி

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி வருமானம் கடந்த நிதி ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்ததாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார். பல சந்தர்ப்பங்களில் உற்பத்தி வரியை அதிகரித்ததால் ரூ. 74,465 கோடி வரி வசூலானதாக அவர் மக்களவையில் கூறினார்.

2014-15-ம் நிதி ஆண்டில் பெட்ரோல் மூலமான வரி வருவாய் ரூ. 43,300 கோடியாகும். இது முந்தைய நிதி ஆண்டில் ரூ. 27,146 கோடியாக இருந்தது.

பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 7.75-ம் டீசலுக்கு ரூ.6.50-ம் உயர்த்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக பெட்ரோலியப் பொருள்கள் மூலமான உற்பத்தி வரி வருவாய் ரூ. 78,545 கோடி என்று குறிப்பிட்டார். இது முந்தைய ஆண்டில் ரூ. 54,007 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி மூலம் ரூ. 2,08,336 கோடியும் சுங்க வரி மூலம் ரூ. 2,08,,336 கோடி வருமானம் கிடைக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.

வர்த்தக மேம்பாடு

ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய அணுகுமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள் ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

முதலாவதாக வர்த்தக வாரியம் ஆலோசனைகளை அளிக்கும். இதில் ஆலோசனை, கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தலாம். இவற்றின் ஆலோ சனைகளை வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் செயல்படுத்தும் என்றார்.

இந்த கவுன்சிலில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இந்த இரண்டு அமைப்புகள் தவிர அந்தந்த பொருள் சார்ந்த ஏற்றுமதி கவுன் சில்கள், வர்த்தக அமைப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார். புதிய ஏற்றுமதி மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்கள் அமைப்பதில் போதிய நிதி இல்லாததால் பல மாநிலங்களில் அமைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களின் ஏற்றமதி மேம்பாட்டு கட்டமைப்பு உருவாக் கத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ. 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் இது மத்திய அரசிலிருந்து பிரிக்கப்பட்டதால் நிதி ஒதுக்கப்படவில்லை.

இதுவரையில் 1,674 திட்டப் பணிகள் ரூ.6,393 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இதில் மத்திய அரசின் முழு செலவில் 474 திட்டப் பணிகள் ரூ.1,862 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x