Last Updated : 14 Dec, 2014 02:42 PM

 

Published : 14 Dec 2014 02:42 PM
Last Updated : 14 Dec 2014 02:42 PM

சிறிய வங்கி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறோம்: முத்தூட் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் பேட்டி

இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தங்க நகைக்கடன்களை வழங்கும் நிறுவனமாக முத்தூட் பைனான்ஸ் விளங்குகிறது. இதன் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் கொச்சி மாரத்தான் போட்டியில் ஓடுவதற்கு பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தார். கிடைத்த இடைவெளியில் ' தி இந்து'-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:-

தங்க நகைக்கடன், வாடிக்கை யாளர்களுக்கு எவ்வகையில் பயன் தருகிறது?

அதிக முதலீட்டில் வாங்கப்பட்டாலும், பெரும்பாலான வீடுகளில் பயனின்றி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை உபயோகமானதாக ஆக்குகிறோம். அந்த நகையை எங்களிடம் அடகு வைக்கும்போது பணம் கிடைக்கிறது. அதனை, வேறு அதிக வட்டியுடைய கடனை அடைப்பதற்கோ அல்லது புதிய தொழிலில் முதலீடு செய்யவோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்டில் பல புதிய தங்கக்கடன் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வரும் போதிலும், முதலிடத்தை முத்தூட் தொடர்ந்து தக்க வைத்திருப்பது எப்படி?

புதிய நிறுவனங்கள் மட்டும் எங்களுக்குப் போட்டியல்ல. அடகுக் கடைக்காரர்கள், வட்டிக் குக் கடன் கொடுப்பவர்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிகள் என பல்வேறு தரப்பினர் எங்களுக்குப் போட்டியாக உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு, தரமான, நியாயமான சேவையைத் தொடர்ந்து யார் தருகிறார்களோ அவர்களுக்கு மதிப்பு இருக்கத்தான் செய்யும்.

முத்தூட்டின் வெற்றிக்கு முதுகெலும் பாகத் திகழ்பவை எவை?

நான்கைந்து போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி எங்களிடம் வாடிக்கையாளர் வருவதற்கு நம்பகத்தன்மையும், நாணயமுமே காரணம். அடுத்ததாக, சிறந்த ஊழியர்கள். உதாரணத்துக்கு, தமிழகத்தில் 12 பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தலா ஒரு ஊழியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவி, வாடிக்கையாளர்களுக்குக் கனிவான சேவை வழங்குவதைப் பற்றி தொடர் பயிற்சி அளிக்கிறோம்.

உங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கும் சலுகைகளைப் பற்றி?

எங்கள் ஊழியர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ போன்ற சட்ட ரீதியான உரிமைகள் தவிர்த்து, பல சலுகைகளை அளிக்கிறோம். மத்திய அரசு ஊழியர்களைப் போல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஒரு ஊழியர் மாதத்துக்கு ரூபாய் ஆயிரமோ, 2 ஆயிரமோ செலுத்தினால், அதே அளவு தொகையை அவர்கள் கணக்கில் நாங்கள் செலுத்துகிறோம். பின்னாளில் அவர்களுக்குப் பெருந்தொகை கிடைக்கிறது.

அதுமட்டுமின்றி, 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்த விலையில் முத்தூட் பங்குகளை அளிக்கிறோம். நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர, உயர, அது அவர்களுக்கு லாபம். எனவே அவர்களும் நிறுவனத்தின் பங்குதாரர்களைப் போன்றவர்கள். அதனால்தான் அர்ப்பணிப்புடன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

முத்தூட் குழுமம், தங்கநகைக்கடன் தவிர, மருத்துவம், இன்சூரன்ஸ் உள்பட 15-க்கும் மேற்பட்ட துறைகளில் கால் பதிக்கக் காரணம்என்ன?

உலகெங்கிலும் பல்வேறு துறைகளிலும், நம்பகமான ஒரு பிராண்டாக முத்தூட் குழுமம் உருவெடுக்கவேண்டும் என்பதே அதன் நோக்கம். தற்போதைக்கு, முத்தூட் குழுமத்தின் மொத்த வர்த்தகத்தில் தங்கநகைக்கடன் 90% பங்கு வகிக்கிறது. அதுவே பிரதானமான தொழில். சென்னையில் ‘சென்னை லைவ்’ என்னும் ஆங்கில பண்பலை சானலை கூட நடத்துகிறோம். நெல்லையில் காற்றாலை மின்னுற்பத்தியிலும் முதலீடு செய்திருக்கிறோம். ரியல் எஸ்டேட், வாகனக் கடன் போன்ற மற்ற துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவருகிறோம்.

வங்கிச் சேவையில் ஈடுபடாதபோதிலும், ஏடிஎம்-களை திடீரென தொடங்கியதேன்?

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும், ஏடிஎம்-களை தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நாட்டில் சிறிய நகரங்களில் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஏடிஎம்-களைத் தொடங்கி வருகிறோம். எந்த வங்கியின் வாடிக்கையாளரும் எங்களது ஏடிஎம்-ஐ, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளைப் போல் கருதி பயன்படுத்தலாம். சென்னையில் 10 உள்பட நாடு முழுவதும் இதுவரை 200 ஏடிஎம்-கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 50 ஏடிஎம்-கள் அமைக்கவிருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், அல்லாதவர்களையும் எங்களது பக்கம் வரவழைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். அதேநேரத்தில் ஏடிஎம் வசதி அனைவருக்கும் எளிதில் கிடைக்கவும் ஏதுவாகும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணப் பரிவர்த்தனையில் (ரெமிட்டன்ஸ்) உங்களது பங்கு எவ்வளவு?

நாட்டில் மொத்த பரிவர்த்தனையில் 10% எங்களுடையதுதான். ஒரு மாதத்துக்கு 2.5 லட்சம் பேமென்ட் மூலம் சுமார் ரூ.500 கோடி பரிவர்த்தனை செய்கிறோம். இதில், 4 லட்சம் கிளைகள் கொண்ட தபால்துறை போன்ற பல பெரிய போட்டியாளர் மத்தியில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்.

டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிக்கு கோ-ஸ்பான்சராக இருப்பது தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா?

ஆமாம். நாங்கள் இந்தியா முழுமைக்குமான நிறுவனமாக அறியப்படுவதையே விரும்புகிறோம். டெல்லி டேர்டெவில்ஸ் கிரிக்கெட் அணிக்கு விளம்பர பங்குதாரராக ஆனதில் எங்களுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. மேலும், கொச்சியில் இரண்டாவது ஆண்டாக மராத்தானை நாங்கள் நடத்துகிறோம். விளையாட்டுத் துறை பங்கேற்பு, எங்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துகிறது.

பேமென்ட் மற்றும் சிறிய வங்கிகளைத் தொடங்க விண்ணப் பித்துள்ளதைப் பற்றி..

பேமெண்ட் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகளுக்கான உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சிறிய வங்கியைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். பேமெண்ட் வங்கிகளையும் விரைவில் தொடங்க விருக்கிறோம். பேமென்ட் வங்கிகளைப் பொருத்தவரை, மணி டிரான்ஸ்பரில் நாங்கள் ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டுவருவதால், அது எங்களுக்கு கைகொடுக்கும். ஊரகப் பகுதிகளுக்கு எங்களுக்கு இருக்கும் பலத்தினை நாங்கள் வங்கித்துறையில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களது நிகர லாப விகிதம், கடந்த காலாண்டில் சற்று குறைந்திருக்கிறதே…

சமீபத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது உண்மையே. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், எந்தவொரு பொருளுக்கும் 60 சதவீத்துக்கு மேல் கடன் தரக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததே அதற்குக் காரணம். அதனால்தான் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி அதனை தளர்த்தி, 75% ஆக சமீபத்தில் உயர்த்தியதைத் தொடர்ந்து, இத்துறையில் அனைவருக்கும் சமமான போட்டிக்களம் அமைந்துள்ளது. அதனால் மீண்டும் வேகமாக வளர்ந்து வருகிறோம்.

தங்கம் விலை உயர்வு/சரிவு உங்களது தொழிலைப் பாதிக்குமா?

வாடிக்கையாளர் வசம் ஏற்கெனவே உள்ள தங்கத்துக்குத்தான் கடன் அளிக்கிறோம். தங்க விலை உயர்வால் மற்றும் சரிவால், ஆபரணத் தங்கம் தொழில் பாதித்தாலும், அதன்மீதான கடன் தரும் தொழில் பாதிக்காது.

எஸ்.சசிதரன் - தொடர்புக்கு sasidharan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x