Published : 05 Jan 2016 09:14 AM
Last Updated : 05 Jan 2016 09:14 AM

சென்செக்ஸ் 2%க்கு மேல் சரிவு: வங்கித் துறை பங்குகள் அதிக நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. சீனாவில் நிலவும் மந்த நிலை காரணமாக இந்திய சந்தைகள் சரிந்ததாக சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீனாவின் உற்பத்தி துறை டிசம்பர் மாத குறியீடு அதற்கு முந்தைய மாதத்தைவிட மேலும் சரிந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார சூழலும் சர்வதேச சந்தை களில் பதற்றத்தை உருவாக்கி யுள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்து, 537 புள்ளிகள் இறக்கம் கண்டது. இது 2015 செப்டம்பர் மாதத்துக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச சரிவாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 171 புள்ளிகள் சரிந்துள்ளது. நிப்டி பேங்கிங் குறியீடு 2.58 சதவீதம் சரிந்துள்ளது.

ஷாங்காய் சந்தை

2016 ஆம் ஆண்டின் ஆரம்பத் திலேயே சர்வதேச சந்தைகள் சரிவாகவே தொடங்கியுள்ளன. குறிப்பாக வீழ்ச்சியில் சீனாவின் ஷாங்காய் சந்தை 6.86 சதவீதம் சரிந்து முன்னிலையில் உள்ளது. ஹேங் சங் 2.7 சதவீதம், நிக்கி 3 சதவீதம், ஐரோப்பிய சந்தைகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.

இந்தியாவின் டிசம்பர் மாத உற்பத்தி துறை குறியீடு சரிவும் இந்திய சந்தைகளை பாதித்துள்ளது என்று சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர்.

சரிவில் மிட் கேப்

நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனப் பங்குகள், ஆட்டோ மற்றும் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவைக் கண்டன. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் ஒரு சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகளும் கணிசமான சரிவைக் கண்டிருந்தது.

இதற்கிடையே ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளது முக்கியமானது. ஐஆர்பி இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம் ரூ.10,000 கோடிக்கான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ஏற்றுள்ளதால் இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5.25 சதவீதம் வரை லாபமாக கண்டது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் பங்குகள் சிறிய அளவில் லாபம் கண்டிருந்தன.

முக்கிய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் 6.18 சதவீதம் இறக்கம் கண்டு 24.85 ரூபாய் சரிந்தது. ஐடியா செல்லுலார் மைனஸ் 5.31, பேங்க் ஆப் பரோடா மைனஸ் 4.91, ஹிண்டால்கோ மைனஸ் 4.89, பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மைனஸ் 4.08 சதவீதம் சரிவில் முடிந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x