Published : 11 May 2018 08:33 AM
Last Updated : 11 May 2018 08:33 AM
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 59 சதவீதம் சரிந்து ரூ.131.98 கோடியாக உள்ளது. வாராக்கடன் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதால் நிகர லாபம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.319.70 கோடியாக இருந்தது. இது தொடர்பாக இந்தியன் வங்கி பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,954 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.4,601 கோடி மொத்த வருமானம் ஈட்டியது. எனினும் வாராக்கடனுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் முடிவடைந்த காலாண்டில் மொத்த வாராக்கடன் 7.47 சதவீதத்திலிருந்து 7.37 சதவீதமாகக் குறைந்துள்ளது.
முடிவடைந்த நிதி ஆண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.11,990 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.9,865 கோடியாக இருந்தது. அவசர கால தேவைகளுக்கான ஒதுக்கீடு ரூ.1,546 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் அவசர கால ஒதுக்கீடு ரூ.806 கோடியாக இருந்தது.
வாராக்கடனுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் இதே காலத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் ரூ.1,772 கோடி வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் ரூ.608 கோடி ஒதுக்கியது. இதனால் நிகர வாராக்கடன் இதே காலத்தில் 4.39 சதவீதத்திலிருந்து 3.81 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வங்கியின் லாபம் குறைந்துள்ளது.
வங்கியின் இயக்குநர் குழு ஒரு பங்குக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2017-18 நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் குறைந்து ரூ.1,258 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1,405 கோடி நிகர லாபம் ஈட்டியது.மொத்த வருமானம் ரூ.19,531 கோடியிலிருந்து குறைந்து ரூ.19,519 கோடியாக உள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT