Published : 22 Feb 2024 04:08 AM
Last Updated : 22 Feb 2024 04:08 AM

பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.20 கோடி: சேலம் மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பட்ஜெட் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் ராமச்சந்திரன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். உடன் ஆணையர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சேலம் மாநகரில் பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ரூ.65 கோடியில் கால்வாய் வசதி, மாநகராட்சி பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.20 கோடி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியின் 2024- 25-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மேயர் ராமச்சந்திரன் நேற்று தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: சேலம் மாநகரில் பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ரூ.65 கோடியில் கால்வாய் வசதி செய்யப்படும். மாநகராட்சி பள்ளிகள் ரூ.20 கோடியில் நவீன மயமாக்கப்படும்.

இஸ்மாயில்கான் ஏரியில் ரூ.41 கோடியில் அபி விருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். நாய்களுக்கான அறுவை சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடம் ரூ.2 கோடியில் கட்டப்படும். ஏடிசி நகர் முதல் டிவிஎஸ் பாலம் வரை உள்ள வரட்டாறு பாலம், ரூ.57 லட்சத்தில் அபி விருத்தி செய்யப்படும். மாநகராட்சியின் 4 வார்டு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சிக்கு சொந்தமான அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை காலியாக உள்ள நிலம் கண்டறியப்பட்டு, அப்பகுதி விற்பனை மண்டலம் பகுதியாக அறிவிக்கப்படும்.

சந்தைப்பேட்டை வணிக வளாகத்தை இடித்துவிட்டு, நவீன வணிக வளாகம் கட்டப்படும். தாதம்பட்டி மயானத்தில் எரிவாயு தகன மேடை ரூ.3 கோடியில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதனிடையே, மாநகராட்சி கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, பட்ஜெட் கூட்டத்தில் அவசரத் தீர்மானம், இயல்புத் தீர்மானம் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் வரிவிதிப்பு கடுமையாக இருக்கிறது. இதைக் கண்டித்து, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

சேலம் மாநகராட்சியின் வரும் 2024 - 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மேயர் ராமச்சந்திரன், அதில் மொத்த வருவாய் ரூ.901.85 கோடியாகவும், செலவு ரூ. 903.38 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.53 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ராமச் சந்திரன் தலைமை வகித்தார். ஆணையர் பாலசந்தர் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, மண்டலக் குழு தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாநகராட்சியின் 2024 - 25-ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கையை மேயர் ராமச் சந்திரன் தாக்கல் செய்தார்.

அதன்படி, மாநகராட்சிக்கு பொது நிதி ( வருவாய் வரவினம், மூலதன வரவினம் ) மொத்தம் ரூ.732.23 கோடியாகவும், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் ஆகியவற்றின் மூலம் வருவாயாக ரூ.150.77 கோடியும், ஆரம்ப கல்வி நிதியாக ரூ.18.84 கோடியும் என மொத்த வருவாய் ரூ. 901.85 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியில் செலவுகளாக ( வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் ) ரூ.735.16 கோடியும், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் செலவுகளாக மொத்தம் ரூ.154.01 கோடியும், ஆரம்ப கல்விக்கான செலவு ரூ.14.20 கோடியும் என மொத்தம் ரூ.903.38 கோடி செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியின் 2024-25-ம் நிதியாண்டின் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் ரூ.901.85 கோடியாகவும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ. 903.38 கோடியாகவும், நிதிப் பற்றாக் குறையாக ரூ.1.53 கோடியாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் செலவுகள்: கடந்த 2023 - 2024-ம் நிதியாண்டில், தெரு விளக்கு, குடிநீர் தொட்டிகள், கட்டடங்களுக்கான மின் கட்டணம், சேலம் மாநகராட்சி தனிக் குடிநீர் திட்டத்துக்கான கட்டணம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றுக்கான மின் கட்டணமாக, சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.44.27 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

சொத்து வரி இனத்தில் இருந்து பெறப்படும் நூலக வரித் தொகை ரூ.2.30 கோடி, சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023- 2024-ம் ஆண்டில், மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், திருமணி முத்தாறு அபி விருத்தி போன்ற சிறப்பு திட்டப் பணிகளுக்காக அரசு நிதியகங்களில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான செலுத்தப்பட்ட அசல் மற்றும் வட்டித் தொகை என மொத்தம் ரூ.93.34 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 1,373 நபர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.32.78 கோடியும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் மருத்துவ காப்பீடு பயன்பெறும் வகையில், 2023-24-ம் ஆண்டில் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு சந்தா தொகையாக ரூ.75.64 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x