Published : 20 Jan 2018 10:04 AM
Last Updated : 20 Jan 2018 10:04 AM

டாவோஸ் மாநாட்டில் மோடி பங்கேற்பதால் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும்: வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை

டாவோஸில் நடைபெற உள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதால் இந்தியாவுக்கு அதிக அந்நிய முதலீடுகள் வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக டாவோஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அத்துடன் மாநாட்டின் ஒரு பகுதியாக முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல்அதிகாரிகள் மோடியைச் சந்திக்க பிரத்யேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் தொழில் துறையினர் பலரும் பிரதமர் மோடியை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளதாக சுரேஷ் பிரபு மேலும் கூறினார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடாக மத்திய வர்த்தக அமைச்சகம் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இதன் தலைவராக முதலீடு மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலர் உள்ளார். இக்குழு இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனவரி 22-ம் தேதி இந்தியாவிலிருந்து ஸ்விட்சர்லாந்து புறப்படும் பிரதமர் மோடி இரண்டு நாள் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். டாவோஸில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு டாவோஸ் மாநாட்டில் ஹெச்.டி.தேவகௌட பிரதமராக இருந்தபோது பங்கேற்றிருந்தார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சியை உணர்த்தும் வகையில் இந்தப் பயணத்தை மோடி மேற்கொள்கிறார். அத்துடன் முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்ப்பதும் அவரது பிரதான பணியாகும். புதிய நிறுவனங்கள் இங்கு வருவதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல வேளாண் தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் வேளாண் துறை வளர்ச்சி அடையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதல் முறையாக இந்தியாவிலிருந்து 6 அமைச்சர்களும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.அத்துடன் தொழில் முதலீட்டு துறையின் அதிகாரிகளும், தொழிலதிபர்களும் பிரதமருடன் டாவோஸ் பயணமாகின்றனர். இந்த மாநாட்டு ஜனவரி 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x