Published : 20 Oct 2023 02:42 PM
Last Updated : 20 Oct 2023 02:42 PM

ஆவினில் 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தம் - வேலூர் மக்கள் அதிருப்தி

ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிலைட்பால். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் ஆவினில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைக்கப்பட்டு புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஆவின் டிலைட் பாலின் தரம் மற்றும் சுவை குறைந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. மேலும், பொதுமக்களின் ஆதரவை பெற்ற 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

வேலூர் கூட்டுறவு பால் ஒன்றியம் (ஆவின்) நிர்வாகத்தில் தினசரி சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சுமார் 80 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக மாற்றி 600-க்கும் மேற்பட்ட முகவர்கள் வாயிலாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் அன்றாட தேவைகளில் ஆவின் பால் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது. காரணம், தனியார் பால் பாக்கெட்டுகளின் விலையைவிட மிகவும் குறைவு மற்றும் தரம், சுவை நிறைந்ததாக இருந்தது. பெரும்பாலான தேநீர் கடைகள், உணவகங்களில் தனியார் பால் பயன்படுத்தினாலும் வீடுகளில் மற்றும் ஒரு சில தேநீர் கடைகள், உணவகங்களில் ஆவின் பால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஆவினில் பொதுமக்களின் பெரும் ஆதரவை பெற்ற நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற கிரீன் மேஜிக் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொழுப்புச்சத்து 4.5%, இதர சத்துக்கள் 8.5% கொண்டதாக இருந்தது. இதனை நான்கரை பால் என்றும் அழைப்பார்கள்.

இந்த வகை பால் திடீரென நிறுத்தப்பட்டு ஊதா நிற பதப்படுத்தப்பட்ட டிலைட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. டிலைட் பாலில் கொழுப்புச்சத்து 3.5%, இதர சத்துக்கள் 8.5% என்றளவில் உள்ளது. ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து குறைக்கப்பட்டு பச்சை நிற பாக்கெட்டுகள் விலையில் ஊதா நிற டிலைட் பால் விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை நிற பால் பாக்கெட்டுகளைவிட டிலைட் பாலின் சுவையும், தரமும் குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிரீன் மேஜிக்கில் உள்ள சத்துக்களைக் காட்டிலும் டிலைட் பாலின் சத்துக்கள் குறைவாக உள்ளன. உதாரணமாக, கிரீன் மேஜிக் பால் 100 மில்லி லிட்டரில் 3.4 கிராம் புரதம் இருக்கும். அதே டிலைட் பாலில் 3.2 கிராம் அளவாக உள்ளது. கிரீன் மேஜிக் பாலில் 73 கிலோ கலோரியாக இருக்கும் சக்தி, டிலைட் பாலில் 63 ஆக உள்ளது.

இதுகுறித்து முகவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் ஆவினில் மக்கள் அதிகம் விரும்பும் 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால், உணவக நிர்வாகங்கள் அதிகம் விரும்பும் 6% கொழுப்பு சத்துள்ள புல் கிரீம் பால் கடந்த இரண்டு நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதே விலையில் 3.5% கொழுப்பு சத்துள்ள டிலைட் பால், 5% கொழுப்பு சத்துள்ள கோல்ட் பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளனர். ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைக்கப்பட்ட பாலை விற்குமாறு எங்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதன்மூலம் ஆவின் சந்தித்து வரும் நஷ்டத்தை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து குறைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 வரை லாபம் ஆவினுக்கு கிடைக்கும் என்கின்றனர். புதிய பால் தரம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. கோவை உள்ளிட்ட சில நகரங்களில் டிலைட் பால் அறிமுகம் செய்தபோது பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு எழாத நிலையில் அதை இங்கும் செய்துவிட்டனர்’’ என தெரிவித்தனர்.

மேலும், 3.5% கொழுப்பு சத்துள்ள டிலைட் பால் 3% கொழுப்பு சத்துள்ள நைஸ் பால் பாக்கெட்டின் சுவையை போல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிலைட் பாலில் 3.5% கொழுப்புச்சத்து இருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் விலையை குறைத்ததாக கூறிய அரசு, அதன் தரத்தை இப்போது குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைப்பால் வரும் நாட்களில் ஆவின் நெய் விற்பனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, விவரங்கள் அறிய ஆவின் நிர்வாகத்தை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x