Published : 20 Oct 2023 02:01 PM
Last Updated : 20 Oct 2023 02:01 PM

ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

நடிகர் ஜெயப்பிரதா | கோப்புப்படம்

சென்னை: நடிகர் ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஜெயப்பிரதா. தமிழில் ’நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஜெயப்பிரதா. மேலும் 2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை ஜெயப்பிரதா நடத்தி வந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இஎஸ்ஐ தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவரது திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.

இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும்,15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, இஎஸ்ஐ-க்கு செலுத்த வேண்டிய ரூ.20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.ரூ.20 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x