Published : 26 Feb 2016 10:21 AM
Last Updated : 26 Feb 2016 10:21 AM

எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி

M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.

பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.

அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.

தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .

கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’



எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x