

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது. கடைகளில் கூட்டம் குறையவில்லை. தளர்வுகளோடு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊரடங்குக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. இதற்கு மேலும் வீட்டுக்குள்ளேயே இருப்பது சாத்தியமற்றது.
இயல்பு நிலைக்கு நாம் திரும்புவது குறித்துச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஊரடங்கால் வேலையும் வருமானமும் இல்லாமல் எப்படி வாழ்வது? கரோனாவை எதிர்கொள்ள ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்று முன்பே பேசப்பட்டது. அது உண்மைதான் என்பதை தற்போதையை அனுபவமும் உணர்த்திவிட்டது. இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கே இயல்பு நிலை என்பது பழைய இயல்பு நிலை அல்ல. நிச்சயம் அது புதிய இயல்பு நிலைதான். இந்தப் புதிய இயல்பு நிலையே இப்போதைய தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புதிய இயல்பு நிலை
ஊரடங்கு விரைவில் முடிவடையும். ஊரடங்கு முடிவுக்கு வந்துவிட்டால் கரோனா முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருளல்ல. இன்னும் சில ஆண்டுகளுக்கு கரோனாவின் தாக்கம் இருக்கவே செய்யும். எனவே, நம்மை நாமே தற்காத்துக்கொள்வதே புதிய இயல்பு நிலையாகும். நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இரண்டு விஷயங்கள் இனி கட்டாயமாகிவிடும். ஒன்று முகக்கவசம், மற்றொன்று சானிடைசர்.
1. எப்போது வெளியே சென்றாலும் மூக்கு, வாய்ப் பகுதியை முழுமையாக மூடும் வகையில் முகக்கவசம் அணிவது அவசியம்.
2. தனிநபர் இடைவெளியைப் பராமரிப்பது நல்லது.
3. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
4. கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
5. மூக்கையும் வாயையும் மூடியவாறு தும்ம வேண்டும்.
6. கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்தல் நல்லது.
7.சளியைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பரை உடனடியாக மூடியுடன் கூடிய குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
8. பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
மேற்குறிப்பிட்ட விஷயங்கள்தாம் இப்போதைய புதிய இயல்பு நிலைக்கான தேவை. இவற்றில் பல பொதுவான தூய்மைப் பராமரிப்பு சார்ந்தவைதான் என்றபோதும் நாம் சமூகம் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை. புதிய இயல்பு நிலை என்பது அந்தச் சுத்தம் சுகாதாரத்தையும் உள்ளடக்கியதாகவே அமையும்.
சமூக அக்கறை
புதிய இயல்பு நிலைக்கு நாம் மாறக் கற்றுக்கொள்வதென்பது நமக்கு நோய்த்தொற்று வராமல் பாதுகாப்பதோடு மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் வழிசெய்யும். இது ஒருவகையில் சமூக அக்கறையுடன் கூடிய செயலாகும். சமூக அக்கறை என்பது நாமும் நமது குடும்பமும் உள்ளடங்கியதே என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்புதிய இயல்பு நிலையில் தனிநபர்களின் பொறுப்புணர்வோடு சமூக நலனும் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
அரசு செய்ய வேண்டியவை
புதிய இயல்பு நிலைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய அரசும் அதன் தலைமையில் இருப்பவர்களும் அதன்படி செயலாற்ற வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்கள், சுகாதார மையங்களை அதிகப்படுத்துவதுடன் அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் பேருந்துகளையும் ரயில்களையும் இயக்க இப்போதே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் சுகாதார ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். இத்தகைய நடவடிக்கைகளும் புதிய இயல்பு நிலையின் பகுதியே. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அரசும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவது காலத்தின் தேவை.