Published : 05 Aug 2020 11:50 AM
Last Updated : 05 Aug 2020 11:50 AM

அணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்!- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்

புளியங்கண்டி முத்துலெட்சுமி.

கோவை

கோவை மண்டலத்தின் தென் பகுதியை வளம் கொழிக்கச் செய்பவை ஆழியாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகள். இவையே பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்துக்கு (பிஏபி) உயிரூட்டுகின்றன. இப்படியான அணைகளுக்காகத் தங்கள் பரம்பரை நிலங்களை இழந்தவர்கள் இருக்க இடமின்றி வறுமையில் வாடுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய கொடுமை? இப்படி 3,000-க்கும் அதிகமான பழங்குடிக் குடும்பங்கள், 63 ஆண்டுகளாகச் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றன.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி என மூன்று மிகப் பெரிய அணைத் திட்டங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி 1957-ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக அமைக்கப்பட்டவை. இத்திட்டங்களால் லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த இரவாளர், மலசர், மலைமலசர், புலையர் போன்ற பழங்குடி மக்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.

இவர்களுடைய விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் அணை நீருக்குள் காணாமல் போக, இவர்கள் அரசால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இவர்கள் பொள்ளாச்சி, உடுமலை, ஆழியாறு, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், திவான்சாபுதூர், மீனாட்புரம் மற்றும் கேரள எல்லைகளில் உள்ள தோட்டங்காடுகளிலும், தென்னந்தோப்புகளிலும் தங்கி பண்ணைக் கூலிகளாக வேலை பார்க்கத் தொடங்கினர். பின்னாளில் விவசாய வேலைகளுக்கு இயந்திரங்கள் அறிமுகமான பின்னர் பலரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் இவர்கள் ஆங்காங்கு உள்ள புறம்போக்கு நிலங்களில் குடியேறி, கூலி வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்படி ஆதரவற்ற நிலையில் வாடிவருகின்றன. ஆழியாறு, வேட்டைக்காரன்புதூர், திவான்சாபுதூர் பகுதிகளில் வசிக்கும் இவர்களில் சிலரைச் சந்தித்தபோது, இந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை உணர முடிந்தது.

இங்கு வசிக்கும் ஆண்கள் எப்போதாவது கிடைக்கிற கூலி வேலைக்குச் சென்று வந்தனர். பலர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலைபார்த்துவிட்டு வாரம் ஒரு முறை வீடு திரும்புவார்கள். கரோனா காலம் என்பதால் அந்த வேலையும் இல்லாதுபோக, மூன்று மாதங்களாக வீட்டிலேயே இருந்தவர்கள், இப்போதுதான் கட்டிட வேலை, கல்லுடைக்கும் வேலை, குவாரி வேலை எனக் கிடைத்த வேலைக்குச் செல்கின்றனர். பெண்களோ இடைத்தரகர்கள் கொண்டுவரும் பனியன் கழிவுகளைக் கிழித்துப் பிரித்து, நூலாக்கிக் கொடுக்கிறார்கள்.

ஆழியாறு அணைக்கட்டில் ஜீரோ பாயின்ட் பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி (38), ஏரவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் நம்மிடம் பேசும்போது, “என்னோட கணவர் 3 வருஷம் முன்னால பிஏபி கால்வாய்ல விழுந்து இறந்துட்டார். கூலி வேலை செஞ்சுதான், என் குழந்தைகளைக் காப்பாத்தறேன். இப்ப அந்த வேலையும் இல்லை. அதுதான் இந்தத் துணிய பிரிச்சு நூலாக்கிட்டு இருக்கேன். கையில காசு இல்லாததால கிடைக்கிற வேலையைச் செய்யறோம். வேற வழி?” என்றார் கண்ணீர் ததும்ப.

புளியங்கண்டியைச் சேர்ந்த ஏரவாளர் இனப் பெண் முத்துலெட்சுமியும் இதே வேலையைத்தான் செய்கிறார். அவர் பேசுகையில், “ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கிலோ கழிவுத் துணியில் இருந்து நூலைப் பிரிச்சு எடுப்போம். ஒரு நாளைக்கு 40 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை கூலி கிடைக்கும். இந்த வேலை ரொம்ப கஷ்டமானது. ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது. இடுப்பு வலிக்கும். வீட்டுக்குள்ள இருந்தும் இந்த வேலையைச் செய்ய முடியாது. ஏன்னா பஞ்சு காத்துல பறந்து மூக்குக்குள்ள போயிடும். அதனால தெருவுல உட்கார்ந்துதான் இந்த வேலையைச் செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.

சர்க்கார்பதி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த முருகாத்தாள் என்பவர் கூறும்போது, “எனக்கு ரெண்டு குழந்தைகள். மூத்தவன் மகேந்திரன் (23), இளையவள் வேல்மணி (20). ரெண்டு பேருக்கும் சின்ன வயசில் இருந்தே கண்பார்வை இல்லை. பையன் காலேஜ்ல இரண்டு வருசம் படிச்சிருக்கான். பொண்ணு 11-ம் வகுப்பு வரைக்கும் படிச்சா. ரெண்டு பேருக்குமே வேலை இல்லை. எங்களுக்கு இங்கே வேறு எந்த வேலைவாய்ப்பும் கிடையாது. பொழப்பு நடத்தணும். இந்த வேலைதான் எங்களுக்கு ஏதோ கஞ்சி ஊத்துது” என்றார்.

இம்மக்கள் வாழ்நிலையை ஆய்வு செய்து இவர்களுக்கான தேவைகளை அரசுக்கு எழுதிவரும் பழங்குடியினச் செயல்பாட்டாளர் தன்ராஜிடம் பேசினோம்.

“கோட்டூர், ஆனைமலை, உடையகுளம், வேட்டைக்காரன்புதூர் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்குள்தான் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். அதனால் 100 நாள் வேலை உள்பட வேறு எந்த வேலைகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கிராம ஊராட்சிப் பகுதிக்குட்பட்ட கிராமங்களிலும் 100 நாள் வேலை கொடுப்பதில் பழங்குடிகளுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது. தனித்த கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை கொண்ட இப்பழங்குடிகள் பிற சமூக மக்களுடன் இணைந்து இப்பணிகளைச் செய்வதில் சுணக்கம் காணப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா அரிசியின் உதவியால் ஏதோ வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

ஆனைமலைத் தொடரும் அதை ஒட்டிய நிலப்பரப்பும் இயற்கை வளங்கள் நிரம்பிய சுற்றுலாப் பகுதியாக இருப்பினும் இப்பகுதியில் பழங்குடியினர் பரிதாபமான நிலையில்தான் இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களது நிலங்களையும் குடியிருப்புகளையும் இழந்து ஏழ்மையில் வாழும் இம்மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. வளர்ச்சித் திட்டங்களுக்காகத் துரத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு விவசாய நிலங்களை அரசு வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்படி வேலைவாய்ப்புகளையும் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் தன்ராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x