

மணிப்பூர் மாநிலம் தௌபலைச் சேர்ந்த மத போதகர் அப்துர் ரஹ்மான் (53). மார்ச் 11-ம் தேதி டெல்லி நிசாமுதீன் மார்கஸ் நிகழ்வில் பங்கேற்றுத் திரும்பியவர் அவர். டெல்லி நிகழ்வில் பங்கேற்றதன் தொடர்பான, தொடர்பறிதலில் அவர் கண்டறியப்பட்டார். நிகழ்விலிருந்து திரும்பிய ஒரு வாரத்தில் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் தலைநகர் இம்பாலில் உள்ள ஆர்.என்.சி. மருத்துவமனைக்கு அவர் விரைந்தார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார்:
சர்க்கரை நோய், காசநோய்
நாங்கள் மார்கஸில் பங்கேற்கச் சென்றபோது கோவிட்-19 குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வு ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. டெல்லியிலிருந்து திரும்பிய மூன்றாவது நாளில் இருமல், தொண்டை எரிச்சல், காய்ச்சல், பலவீனம், ரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்றவை தோன்றின. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது, 2016இல் காச நோயும் தாக்கியது. காய நோய்தான் திரும்ப வந்துவிட்டதோ என்று நினைத்தேன். எனது மருத்துவரோ சர்க்கரை நோய் காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து, அதற்கு மருந்து கொடுத்தார். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. விரைவிலேயே சுகாதாரத் துறையால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
வேறு என்ன வேண்டும்?
அரசு மருத்துவமனையில் முதல் இரண்டு நாட்களுக்கு வைட்டமின் பி, சி மாத்திரைகளைக் கொடுத்தார்கள். மூன்றாவது நாளிலிருந்து இரண்டு முறை வேறு சில மாத்திரைகளைக் கொடுத்தார்கள். அவை கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்து என்றார்கள். அந்த மருந்து ஹைட்ராக்சிகுளோகுயினாக இருக்கலாம்.
என்னுடைய அறை சுத்தமாகப் பராமரிக்கப்பட்டது. எளிமையான உணவைத் தந்தார்கள். காலை உணவில் முட்டை வழங்கப்பட்டது. ஆறாவது நாளிலிருந்து உடல் தேறிவருவதை உணர முடிந்தது. ஒரு சில மணி நேரத்துக்கு ஒரு முறை மருத்துவர்கள் வந்து பார்ப்பார்கள். என்னுடைய அறைக்கு வெளியே எப்போதும் ஒரு செவிலியர் இருப்பார். ஒரு நோயாளியை கவனிக்க இதைவிடப் பெரிதாக என்ன தேவைப்படும்?
15 நாள் சிகிச்சைக்குப் பிறகு மூன்றாவது முறை பரிசோதிக்கப்பட்டு வீட்டுக்கு அவர் அனுப்பப்பட்டார். டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய பிறகு என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னுடைய குழந்தைகள் என யாருக்குமே கோவிட்-19 இல்லை. அதுதான் எனக்குப் பெரும் நிம்மதி. 'எப்போது போதகர் பணிக்குத் திரும்பத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டால், மணிப்பூர்-நிசாமுதீனில் உள்ள மதத் தலைவர்களின் வழிகாட்டுதல் படி நடந்துகொள்வேன் என்கிறார்.