Last Updated : 24 Jun, 2020 10:49 AM

 

Published : 24 Jun 2020 10:49 AM
Last Updated : 24 Jun 2020 10:49 AM

இசையரசன் எம்.எஸ்.வி...  - எம்.எஸ்.விஸ்வநாதன் 92வது பிறந்தநாள்

தமிழ்த் திரை இசையில், பாட்டை பிரமிப்பாகப் பார்த்த... அதாவது கேட்ட காலம் இருந்தது. கேட்டு பிரமித்தார்கள். பிரமித்துக் கேட்டார்கள். ‘எவ்ளோ பிரமாதமான இசை’ என்று கொண்டாடினார்கள். இப்படி அண்ணாந்து பார்த்த இசையை, கேட்பவர்களின் செவிகளுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நெருக்கமாக்கிய இசை வந்தபோது, ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள். இந்தமுறை அவர்களே அந்த இசையைப் பாடத் தொடங்கியிருந்தார்கள். கேட்டவர்களே பாடினார்கள். பாடியவர்கள், பாடி முணுமுணுத்தவர்கள் இன்னும் பாட்டுக்குள் கலந்தார்கள். அண்ணாந்து பார்த்தது போய், தன் இசையாக அரவணைத்துக் கொண்டார்கள். அந்த எளிய இசையை வழங்கியவர்களில் முக்கியமானவர்... எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழிசையின் மூன்றெழுத்து ராஜாங்கமாக எம்.எஸ்.வி. என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
மனயங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன். கேரளம் பூர்வீகம். சிறுவயதில் அப்பாவைப் பறிகொடுத்தவருக்கு இறையருள் தந்த வரம் இசை ஆர்வம். முறைப்படி சங்கீதம் பயின்றார்.
ஆசையுடனும் ஆர்வத்துடனும் எல்லோரும்தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இயல்பாகவே இருக்கிற ஆர்வமும் ஞானமும் ஈடுபாடும்தான் அவர்களை மிகப்பெரிய கலைஞர்களாக்கும். எம்.எஸ்.வி.க்கு இந்த மூன்றும் இருந்தது. இசை மேதை சி.ஆர்.சுப்பராமன் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் பணியில் ஈடுபட்டார் எம்.எஸ்.வி.

திடீரென சுப்பராமன் மறைந்தார். அவர் ஒப்புக்கொண்ட படங்களை விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசையமைத்துக் கொடுத்தார்கள். பிறகு இருவரும் சேர்ந்து இசையமப்பது என முடிவு செய்தார்கள். இரட்டை இசையமைப்பாளர்களானார்கள். பாடல்களை, எல்லோருக்குமான பாடல்களாக்கினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு, பரவசமானார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். திரும்பத் திரும்ப முணுமுணுத்தார்கள். பாட்டும் இசையும் மனனமாயிற்று. கூடவே அந்த இசையைத் தந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியைக் கொண்டாடினார்கள். மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டார்கள்.

ஒருகட்டத்தில், இருவரும் தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினார்கள். சிவாஜியின் ‘பணம்’ படத்தில் சேர்ந்து இசையமைக்கத் தொடங்கியவர்கள், எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துடன் சேர்ந்து பணியாற்றுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனாலும் எம்.எஸ்.வி. ராஜ்ஜியம் இன்னும் விஸ்தரித்தது. புதுவேகமெடுத்தார். இன்னும் ஒளிர்ந்தார்; இன்னும் இன்னுமாக உயர்ந்தார்.

பாடல்களில் ஏதேனும் நகாசு பண்ணுவது எம்.எஸ்.வி. ஸ்டைல்; பாணி.

‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார். நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில், ‘மா...லைப் பொழுதின்’ என்று சொல்லும்போதே அந்தப் பாடலுக்குள் இருக்கிற சோகம் நமக்குள்ளேயும் வந்துவிடும்.

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார். விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும்.


டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி. ‘பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த உதாரணம். ‘பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று...’ என்ற பாடல் துள்ளவைத்துவிடும். பி.பி.எஸ். தனியே பாடுகிறார் என்றால் ஒரு விசில் சத்தத்தை துணைக்கு அனுப்பிவிடுவார்.

’பாலும் பழமும்’ படத்தில், ’நான் பேச நினைப்பதெல்லாம்’ பாட்டுக்கு ‘ம்...ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்’ என்று ஹம் செய்யவைத்திருப்பார். அந்த ‘ஹம்’தான் பாடலுக்கு இன்னும் ஜீவனைக் கொடுத்து, நம் தூக்கத்தையெல்லாம் விரட்டிவிடும். துக்கத்தையும்தான்!


‘தாழையாம்பூமுடிச்சு’ பாட்டுக்கு முன்னே ஒரு ஹம்மிங். ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டுக்கு முன்னதாக, ஒரு ஹம்மிங். ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடலின் இடையே ஓர் ஹம்மிங். ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?’ பாடலை டி.எம்.எஸ். பாட, நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார். அது நம்மை கட்டிப்போட்டுவிடும். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்றொரு பாடல். அந்த ஹம்மிங், உயிரைக் கரைத்துவிடும்.

’வாராதிருப்பானோ...’, ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’, ‘துள்ளுவதோ இளமை’, ‘என்ன பார்வை உந்தன் பார்வை’, ‘ரோஜாமலரே ராஜகுமாரி...’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘கேள்வியின் நாயகனே’, ‘வான் நிலா நிலா அல்ல...’, ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’, ’அவளுக்கென்ன அழகிய முகம்...’ என்று எத்தனை பாடல்கள்; எவ்வளவு வெரைட்டிகள்! ‘அவளுக்கென்ன’ பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் அதகளம் பண்ணியிருப்பார். ‘என்னடி ராக்கம்மா’வுக்கு சோழவந்தான் அலப்பறையை இசையால் தந்து அசத்தியிருப்பார்.

கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள். கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.வி. கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார். இருவருக்கும் அப்படியொரு பந்தம். இந்தக் கால பாஷையில்... கெமிஸ்ட்ரி! ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ எத்தனையோ பாடல்களைத் தந்தார். ஸ்வரம் பிரித்துப் பரிமாறினார். ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது’ பாடலெல்லாம் எம்.எஸ்.விக்காகவும் கண்ணதாசனுக்காகவும் கே.பாலசந்தர் வைத்த ஆடுகளம் மாதிரி இருக்கும்.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டு, ‘முத்துக்களோ கண்கள்’ என்பார். ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, ‘ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்’ என்று மிரட்டுவார். அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்.

1928ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்று அவருக்கு 92 வது பிறந்தநாள். அவருக்குப் பிடித்த, எல்லோருக்குமே பிடித்த கவியரசர் கண்ணதாசனுக்கும் இன்று பிறந்தநாள். சரஸ்வதிதேவியின் கணவர் பிரம்மாவின் ஆனந்தப் படைப்பு... ஆச்சரியமும் விந்தையும் கொண்டதுதான்.


100வது பிறந்தநாளுக்கு இன்னும் எட்டு வருடங்கள் இருக்கின்றன. இசையின் மலையில் எட்டாத உயரத்தில் பீடமிட்டு அமர்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. அவரின் இசையில், உங்களுக்குப் பிடித்த பாடல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


எம்.எஸ்.வி.யை எல்லோரும் கொண்டாடுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x